புலிகளுக்கும் இராணுவத்தினருக்கும் மோதல்! கோபி உட்பட மூவரும் சுட்டுக் கொலை?

gobiநெடுங்கேணி பிரதேசத்தில் தமிழீழ விடுதலைப் புலிச் சந்தேக நபர்களுக்கும், இராணுவத்தினருக்கும் இடையில் மோதல் சம்பவமொன்று இடம்பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இந்த சம்பவத்தில் இரண்டு தரப்பினருக்கும் சேதங்கள் ஏற்பட்டுள்ளதாக சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

தமிழீழ விடுதலைப் புலிச் சந்தேக நபர்களில் மூன்று பேர் கொல்லப்பட்டதுடன், ஒரு இராணுவ படைவீரர் கொல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

எனினும் இந்த தகவல்கள் இன்னமும் உத்தியோகபூர்வமாக உறுதி செய்யப்படவில்லை.

இந்த மோதல் சம்பவத்தில் பிரதான தமிழீழ விடுதலைப் புலி சந்தேக நபர்களில் ஒருவரான பொன்னையா செல்வநாயகம் எனப்படும் கோபி என்பவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

நேற்றிரவு நெடுங்கேணி பிரதேசத்தில் இராணுவத்தினர் தீவிர தேடுதல் நடத்தியுள்ளனர்.

இதன் போது இரு தரப்பினருக்கும் இடையில் மோதல் இடம்பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை, சம்பவம் தொடர்பிலான தகவல்களை திரட்டி வருவதாகவும் தற்போதைக்கு எதனையும் குறிப்பிட முடியாது எனவும் பாதுகாப்பு அமைச்சின் பேச்சாளர் பிரிகேடியர் ருவான் வனிகசூரிய தெரிவித்துள்ளார்.

இரண்டாம் இணைப்பு

வவுனியா, நெடுங்கேணி பிரதேசத்தில் நேற்றிரவு விடுதலைப் புலிகள் என சந்தேகிக்கப்படும் சிலருடன் மோதல் ஏற்பட்டுள்ளது.

இராணுவத்தினருடன் இந்த மோதல் ஏற்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அதேவேளை மோதலில் கொல்லப்பட்ட இராணுவப் புலனாய்வுப் பிரிவு வீரரின் சடலம் பதவிய வைத்தியசாலைக்கு கொண்டு வரப்பட்டுள்ளதாக வவுனியா பாதுகாப்பு அதிகாரிகள் கூறியுள்ளனர்.

இவர் கொக்காவில் இராணுவ முகாமில் பணியாற்றி செல்வராஜா கமலராஜா என அடையாளம் காணப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

கோபி அல்லது காசியன் என்ற கஜீபன் பொன்னையா செல்வநாயகம் என்ற விடுதலைப் புலி சந்தேக நபரை தேடி பாதுகாப்பு படையினர் அண்மையில் விசாரணைகளை ஆரம்பித்தனர்.

இந்த விசாரணையை அடுத்தே விடுதலைவப் புலிகள் எனக் கூறப்படும் நபர்களுக்கும் இராணுவத்திற்கும் இடையில் நெடுங்கேணி பிரதேசத்தில் மோதல் ஏற்பட்டதாக பேசப்படுகிறது.

இந்த மோதலில் மூன்று விடுதலைப் புலி உறுப்பினர்கள் கொல்லப்பட்டுள்ளனர். இவர்களின் கோபி என்பவர் அடங்குகின்றாரா என்பது இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை.

கொல்லப்பட்ட சந்தேக நபர்களில் தேவியன் என்ற சுந்திரலிங்கம் கஜீபன் என்பவர் இருப்பதாக அடையாளம் காணப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.

கோபி என்பவர் பற்றி சரியான தகவல்களை வழங்கும் நபர்களுக்கு 10 லட்சம் ரூபா சன்மானம் வழங்கப்படும் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹன அண்மையில் அறிவித்திருந்தார்.

இந்த நிலையில், நெடுங்கேணி பிரதேசத்தில் மோதல் இடம்பெற்றதாக கூறப்படும் சம்பவம் பற்றி பொலிஸ் பேச்சாளரிடம் வினவிய போது, இராணுவத்தினர் நடவடிக்கை ஒன்றை மேற்கொண்டுள்ளதாகவும் மேலதிக தகவல்களை தான் அறியவில்லை எனவும் கூறினார்.

அதேவேளை சம்பவம் பற்றி தகவல்களை தான் தேடி வருவதாக இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் ருவான் வணிகசூரிய குறிப்பிட்டார்.

விடுதலைப் புலிகள் இயக்க தலைவர்கள் மூவர் சுட்டுக் கொலை?

வவுனியா, நெடுங்கேணி பிரதேசத்தில் இராணுவத்தினரது துப்பாக்கிச் சூட்டில் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் புதிய தலைவர் என கூறப்பட்ட கோபி உள்ளிட்ட மூவர் சுட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளனர்.

வவுனியா, நெடுங்கேணி பிரதேசத்தில் நேற்று வியாழக்கிழமை இரவு இராணுவத்தினரது சோதனை நடவடிக்கையின்போது இவர்கள் தப்பிச் செல்ல முயற்சித்துள்ளனர்.

இந்நிலையில் இராணுவத்தினர் மேற்கொண்ட துப்பாக்கிச் சூட்டில் இருவரும் உயிரிழந்துள்ளனர்.

சுட்டுக் கொலை செய்யப்பட்டவர்களில் கோபி மற்றும் தேவிகன் அடையாளம் காணப்பட்டுள்ளதாக இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் ருவன் வணிகசூரிய தெரிவித்தார்.

எனினும் உயிரிழந்த மூன்றாம் நபர் அப்பனாக இருக்கக் கூடும் என இராணுவத்தினர் சந்தேகம் வெளியிட்டுள்ளனர். எனினும் இதுவரையில் அடையாளம் காணப்படவில்லை.

விடு­தலைப் புலி­களின் தலைவர் வேலுப்­பிள்ளை பிர­பா­க­ரணின் மரணத்தை தொடர்ந்து அந்த இயக்­கத்­தினை மீளவும் புத்­துயிர் செய்யும் நட­வ­டிக்­கை­களை கோபி மேற்­கொண்டு வந்­த­தாக பொலிஸார் குற்றஞ்சாட்டி கோபியை தேடி வந்தனர்.

கோபி கஜீபன் பொன்னையா செல்லநாயகம் அல்லது காசியன் என்ற பெயரால் அழைக்கப்பட்டு வந்ததாக பொலிஸார் அறிவித்திருந்தனர்.

கடந்த மாதம் கிளிநொச்சியில் உள்ள வீடொன்றில் கோபி தங்கியிருப்பதாக தகவல் கிடைக்கப் பெற்றதை தொடர்ந்து அங்கு பொலிஸார் சென்றதாகவும் பொலிஸாருக்கும் கோபிக்கும் இடையில் துப்பாக்கிச் சூடு இடம்பெற்றதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

கோபிக்கு அடைக்களம் கொடுத்த குற்றச்சாட்டில் கிளிநொச்சியைச் சேர்ந்த திருமதி ஜெயக்குமாரி மற்றும் அவரது மகள் 14 வயதான விபூசிகா கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் கோபியின் தாய் என கூறப்படும் 83 வயதான திருமதி. ராசமலர் என்பவர் கடந்த மாதம் 24ஆம் திகதி பொலிஸாரால் கைது செய்யப்பட்டார்.

இதேவேளை கோபியின் மனைவி என கூறப்படும் இளம் பெண் ஒருவரும் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார் என தெரிவிக்கப்படுகிறது.

கோபியுடனான மோதலில் கொல்லப்பட்டதாக கூறப்பட்ட இராணுவ வீரரை, இராணுவத்தினரே சுட்டுக்கொன்றனர்!

விடுதலைப் புலிகளின் புதிய தலைவர் என அரசாங்கம் கூறும் கோபி என்பவருடன் நடந்த மோதலில் கொல்லப்பட்டதாக கூறப்பட்ட இராணுவ வீரர், இராணுவத்தினரின் துப்பாக்கிச் சூட்டிலேயே இறந்துள்ளதாக கூறப்படுகிறது.

அத்துடன் அவர் இராணுவ வீரர் அல்ல எனவும் இராணுவத்தினர் பயன்படுத்தி வந்த உளவாளி எனவும் தெரியவந்துள்ளது.

இந்த உளவாளி கொக்காவில் இராணுவ முகாமில் பணியாற்றிய செல்வராஜா கமலராஜா என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

எவ்வாறாயினும் இந்த உளவாளியின் கொலையை பயன்படுத்தி வேறு காரணம் ஒன்றை பிரசித்தப்படுத்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக பேசப்படுகிறது.

இதற்கு முன்னர் கிளிநொச்சியில் கோபி என்பவரின் துப்பாக்கி பிரயோகத்தில் காயமடைந்தாக கூறப்பட்ட பொலிஸ் உத்தியோகஸ்தர் பற்றிய தகவல்களை அரசாங்கம் இதுவரை வெளியிடவில்லை.

கோபி என்பவர் கைது செய்யப்பட்டுள்ளதாக சில தினங்களுக்கு முன்னர் ஊடகங்களில் தகவல்கள் வெளியாகியிருந்தன.

இந்த நிலையில், இன்று காலை இடம்பெற்றதாக கூறப்படும் மோதல் சம்பவம் குறித்த செய்தி பெரும் சந்தேகங்களை கிளப்பியுள்ளது.

TAGS: