சிறிலங்காவை கவலைக்குரிய நாடாக பிரித்தானியா அறிவிப்பு

sri lanka human rightசிறிலங்காவை கவலைக்குரிய நாடாக பிரித்தானிய வெளிவிவகார அமைச்சு பிரகடனம் செய்திருக்கிறது.  பிரித்தானிய வெளிவிவகார அமைச்சினால், 2013ம் ஆண்டுக்கான மனிதஉரிமைகள் நிலை பற்றிய அறிக்கை நேற்று வெளியிடப்பட்டுள்ளது. இந்த அறிக்கையில், சிறிலங்காவில், கடந்த ஆண்டு சிறிலங்காவின் மனிதஉரிமைகள் நிலை கவலைக்குரியதாக இருந்தது என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

போருக்குப் பின்னர், உட்கட்டமைப்பு வசதிகளை மீள உருவாக்கல் மற்றும் முதல் முறையாக வடக்கில் தேர்தலை நடத்தியது போன்ற சில முன்னேற்றங்கள் காணப்பட்டாலும், ஒட்டுமொத்தமாக பார்க்கையில், பல்வேறு விவகாரங்களில் எதிர்மறையான நிலையே காணப்படுகிறது. ஊடகவியலாளர்கள் மீதான தாக்குதல்கள் தொடர்கின்றன.

ஊடக சுதந்திரம் மற்றும் பெண்கள் உரிமை என்பன வீழ்ச்சியடைந்துள்ளன.

தலைமை நீதியரசர் மீது கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லாத் தீர்மானம் தண்டனை விலக்களிப்பு பற்றிய கவலைகளை ஏற்படுத்தியுள்ளது.

போர்க்குற்றங்களுக்குப் பொறுப்புக்கூறப்பட வேண்டும், மனிதஉரிமைகளை மதிக்க வேண்டும், போருக்குப் பிந்திய நல்லிணக்கத்துக்கு, அரசியல் தீர்வு அவசியம் என்றும் பிரித்தானியா கருதுகிறது.

மோசமான மனிதஉரிமை மீறல்கள் குறித்து பதிலளிக்குமாறும், கருத்து சுதந்திரம் பெண்களின் உரிமைகள், தேர்தல் நடைமுறைகள், சட்டத்தின் ஆட்சி என்பனவற்றை மேம்படுத்துவதற்கு சிறிலங்கா அரசாங்கமும், சிவில் சமூகமும் இணைந்து பணியாற்றுமாறும் பிரித்தானியா தொடர்ந்து கோரிக்கை விடுக்கும்.

இந்த ஆண்டின் முதல் மூன்று மாதங்களிலும் மனிதஉரிமைகள் நிலையில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை.

வடக்கில் செயற்பாட்டாளர்கள் தடுத்து வைக்கப்படுவது, துன்புறுத்தல்கள் நிகழ்வதும் தொடர்பான தகவல்கள் வந்து கொண்டிருக்கின்றன.

கடந்த மூன்று மாதங்களில் கருத்து வெளிப்பாட்டுச் சுதந்திரத்தில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை என்றும் பிரித்தானிய அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

TAGS: