தென்னாபிரிக்க அரசின் விசேட பிரதிநிதி சிறில் ராமபோச எதிர்வரும் மே மாத இறுதியில் இலங்கையின் வடக்கு – கிழக்குப் பகுதிகளுக்கு வருகை தரவுள்ளார். இவர் தென்னாபிரிக்க அரசால் இலங்கை இனப்பிரச்சினை தொடர்பான விவகாரங்களைக் கையாள்வதற்காக நியமிக்கப்பட்டுள்ள விசேட பிரதிநிதியாவார்.
இங்கு வரும் சிறில் ராமபோச கள நிலைமைகளை நேரடியாக ஆராய்வதோடு, தமிழ் சிவில் சமூக, அரசியல் பிரதிநிதிகளையும் சந்தித்துக்கலந்துரையாடுவார். அதன் பின்னர் இலங்கை அரசுக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் இடையிலான பேச்சுத் தொடர்பாக அவர் ஆலோசனை நடத்தவுள்ளார்.
இதனிடையே தென்னபிரிக்க சந்திப்பு தொடர்பாக கருத்து வெளியிட்டுள்ள சுரேஸ்பிறேமச்சந்திரன் இலங்கை அரசின் வேண்டுகோளுக்கு இணங்கவே தென்னாபிரிக்க அரசு இலங்கை இனப்பிரச்சினை தொடர்பிலான விவகாரங்களைக் கையாள்வதற்காக விசேட பிரதிநிதியான சிறில் ராமபோயை நியமித்தது.
எமது பயணத்தின்போது விசேட பிரதிநிதியான சிறில் ரமபோ மற்றும் தென்னாபிரிக்க அரசின் வெளிவிவகார அமைச்சர் மற்றும் பிரதியமைச்சர், தென்னாபிரிக்க தேசிய காங்கிரஸின் வெளிவிவகார கொள்கை வகுப்பாளர்கள் ஆகியோருடன் கலந்துரையாடல்களை நடத்தினோம். குறித்த சந்திப்புக்களின் போது நாம் தமிழர் தரப்பு நியாயங்களை முன்வைத்தோம். இந்திய – இலங்கை ஒப்பந்தம், அதனூடான 13 ஆவது திருத்தச் சட்டம், அவற்றுக்கு என்ன நடந்தது, பிரேமதாசா மற்றும் சந்திரிகா ஆகியோரின் காலங்களில் கொண்டு வரப்பட்ட தீர்வுத் திட்டங்களுக்கு என்ன நடந்தது, ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் காலத்தில் நடந்த சர்வகட்சிக் குழுவின் அறிக்கைக்கு நடந்தவை என்பவை தொடர்பாக அவர்களுக்கு விளக்கமாக எடுத்துரைத்தோம்.
தமிழர் தரப்புக்கள் ஏமாற்றப்பட்டு வருவதை நாம் அவர்களுக்குப் புரிய வைத்தோம்.முக்கியமாகத் தற்போது இலங்கையில் நடந்து கொண்டிருக்கும் விடயங்களையும் அவர்களுக்கு எடுத்துக் காட்டினோம். இராணுவ முற்றுகைக்குள்ளான தமிழ் மக்களின் நாளாந்த வாழ்வியல், கடத்தல்கள், காணாமற்போனவர்கள் தொடர்பிலான பிரச்சினைகளை அவர்களிடம் எடுத்துக்கூறியுள்ளோம் எனத்தெரிவித்துள்ளார்.