இலங்கையின் கிழக்கு மாகாணத்திலுள்ள திருகோணமலை மாவட்டம் சீனன்குடாவை அண்மித்த வெள்ளைமணல் கடலோர பகுதியில் பொதுமக்கள் தேவைகளுக்காக பயன்படுத்தப்பட்டுவந்த ஆயிரக்கணக்கான ஏக்கர் காணி விமானப்படையினரால் திடீரென கையகப்படுத்தப்படுவதாக உள்ளுர் மக்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.
மபுள்பீச் தொடக்கம் கருமலையூற்று வரையிலான நிலப்பகுதியை விமானப்படை சுவீகரிப்பதற்கான எல்லைகள் அடையாளமிடப்பட்டு, முட்கம்பி வேலிகளும் போடப்பட்டு, இந்த நிலம் விமானப்படைக்குரியது என்கிற அறிவிப்பு பலகைகளும் அந்த பகுதியில் நடப்பட்டுள்ளன.
இந்த காணிகள் எல்லாம் அரசாங்கத்திற்கு சொந்தமான காணிகளாக இருந்தாலும் அந்த காணிப்பிரதேசம் உள்ளுர் மக்களால் கால்நடை வளர்ப்பு , கருங்கல் உடைப்பு மற்றும் பயிர்ச்செய்கை என பல்வேறு தேவைகளுக்கு பயன்படுத்தப்பட்டு வந்ததாக கூறப்படுகின்றது.
விமானப்படையின் இந்தக் காணி சுவீகரிப்பு காரணமாக அந்த பகுதி மக்களின் வாழ்விடமும், வாழ்வாதாரமும் இழக்கப்படுவதோடு அவர்களின் அன்றாட செயல்பாடுகளுக்கான சுதந்திரமும் இழக்கப்படுவதாக வடக்கு- கிழக்கு சிங்கள அமைப்பு குற்றம் சாட்டுகின்றது.
வடக்கு- கிழக்கு சிங்கள அமைப்பானது யுத்த காலத்தில் விடுதலைப்புலிகளுக்கு எதிராகவும் இராணுவத்திற்கு ஆதரவாகவும் கிழக்கு மாகாணத்தில் பல்வேறு வேலைத்திட்டங்களில் ஈடுபட்ட கடும் போக்குடைய சிங்கள அமைப்பாக பார்க்கப்படுகிறது.
விமானப்படையினரால் குறித்த காணி சுவீகரிக்கப்படுவது தொட்பாக கருத்து வெளியிட்ட அந்த அமைப்பின் தேசிய அமைப்பாளரான அனுர பண்டார, 3500 தொடக்கம் 4000 ஆயிரம் ஏக்கர் வரையிலான காணி விமானப் படையினரால் அடையாளமிடப்பட்டுள்ளதாக தெரிவித்தார். அந்த பகுதியில் தற்போது விமானப்படைக்கு குழாய் நீர் விநியோக வேலைகளும் இடம் பெற்று வருவதால் நிரந்தர முகாமொன்று அமையலாம் என்றும் அவர் சந்தேகம் வெளியிட்டார்.
வெள்ளைமணல் பகுதியை பொறுத்தவரை அநேகமாக முஸ்லிம்களே வாழந்து வரும் கிராமம் என்று கூறிய அனுர பண்டார, இந்த காணி சுவீகரிப்பு விடயத்தில் அவர்கள் பயம் காரணமாக வாய் திறக்க முடியாதவர்களாக காணப்படுவதாக கூறினார்.
போருக்கு பின்னர் கிழக்கு மாகாணத்தில் பாதுகாப்பு படையினரின் தேவைகளுக்கு காணி தேவைப்படுமானால், அதுகுறித்து மாகாண முதலமைச்சரின் ஆலோசனை பெறப்படும் என பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஸ தன்னிடம் தெரிவித்துள்ளதாக ஏற்கனவே மாகாண முதலமைச்சர் நஜீப் அப்துல் மஜீத் தெரிவித்திருந்தார்.
விமானப்படையினரால் சுவீகரிக்கப்பட்டுள்ளதாக கூறப்படும் குறித்த இந்த காணி விவகாரத்தில் முதலமைச்சரின் ஆலோசனை பெறப்பட்டதா? என்பது தொடர்பில் முதலமைச்சரின் பதிலை பெற பல தடவைகள் முயன்ற போதிலும் அவரது தொடர்பு கிடைக்கப்பெறவில்லை. -BBC