இனி என்ன நடக்கும் இலங்கையில்?- விளக்குகிறார் சென்னை பல்கலைக்கழக பேராசிரியர் ராமு மணிவண்ணன்

raamu-manivannanஐ.நா. மனித உரிமை கவுன்சிலில், இலங்கை தொடர்பான அமெரிக்கத் தீர்மானம் நிறைவேறிவிட்ட சூழலில், உலகெங்கிலும் உள்ள முக்கியமான 16 தமிழ் அமைப்புகளைப் பயங்கரவாத அமைப்புகளாக அறிவித்து, உலக நாடுகளிடம் அவை மீதான தடையையும் கோரியிருக்கிறது இலங்கை அரசாங்கம்!

அத்துடன், இலங்கைக்குள் புலிகள் அமைப்பை மீண்டும் கட்டியெழுப்ப முயன்றதாக நெடுங்கேணி பகுதியில் கோபி, அப்பன், தேவிகன் ஆகிய மூவரைச் சுட்டுக் கொன்றிருக்கிறது.

சர்வதேச அழுத்தங்கள் வெறும் பேச்சளவில் உருவானதுமே, இலங்கையில் இருக்கும் நிராயுதபாணி தமிழர்களையும் விதவிதமாக வதைக்கத் தொடங்கிவிட்டது இலங்கை அரசு.

இது 2009-ம் ஆண்டுக்குப் பிந்தைய போராகப் பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில், சென்னைப் பல்கலைக்கழகத்தின் அரசியல் பொது நிர்வாகத் துறையின் பேராசிரியரும் தலைவருமான ராமு மணிவண்ணன், ஈழத் தமிழர் படு கொலைக்கான ஆதாரங்களை SRI LANKA: HIDING THE ELEPHANT’ என்ற நூலில் 1,000 பக்கங்களுக்கு அடுக்கியிருக்கிறார்.

கடந்த மூன்று வருடங்களாக இலங்கை தொடர்பான ஐ.நா. அமர்வுக்குச் சென்று வரும் ராமு மணிவண்ணன் இது தொடர்பாக தெரிவித்ததாவது.

நான் தொடர்ந்து ஈழத்துக்குச் சென்று வருபவன். கொத்துக்குண்டுகள் பற்றிய செய்திகள் வருவதற்கு முன்னரே, அதன் விளைவுகளை அங்கு நேரில் கண்டவன். ஆதலால், 2008-ம் ஆண்டு இறுதியில் இருந்தே இந்த நூலுக்கானத் தயாரிப்புப் பணிகளைத் தொடங்கிவிட்டேன்.

அப்போது முதல் இப்போது வரை இறுதிப் போரில் காணாமல்போன குழந்தைகள், ஆண்கள், பெண்கள் என அந்தப் பயங்கரத்தின் நிழலையும் நிஜத்தையும் இந்த நூலில் தொகுத்திருக்கிறேன்.

இறுதிப் போரின் முடிவில் பிடிபட்ட இளம் பெண்களை, சுமார் 60 பேருந்துகளில் ஏற்றிச் சென்றது இலங்கை இராணுவம். அந்தப் பேருந்துகளோ, அதில் பிடித்துச் செல்லப்பட்டவர்களோ என்ன ஆனார்கள் என இன்று வரை தெரியவில்லை.

இந்த மாபெரும் இனப்படுகொலையை, ‘போர்க் குற்றம்� என்றும், ‘மனித உரிமை மீறல்� என்றும் உலகம் விவாதித்துக் கொண்டிருந்த சமயத்தில், ‘இல்லை இது அப்பட்டமான இனப் படுகொலை� என்று உலகுக்கு உணர்த்த, போர் நடந்த விதம், பயன்படுத்தப்பட்ட ஆயுதங்கள், கொல்லப்பட்ட மக்கள் என இந்த இன அழித்தொழிப்பு தொடர்பான முக்கியமான ஆவணங்கள் அனைத்தையும் இந்த நூலில் தொகுத்திருக்கிறேன்.

இனிமேலாவது ஐ.நா. மூலம் இலங்கைத் தமிழர்களுக்கு ஏதேனும் நிவாரணம் கிடைக்குமா?

2009-ல் போர் முடிந்தபோது, இலங்கை அரசைப் பாராட்டி ஒரு தீர்மானத்தை இந்தியாவின் ஆதரவோடு நிறைவேற்றியது ஐ.நா.

பின்னர், 2012-ம் ஆண்டு இலங்கை அரசே தன் பிரச்னைகளை விசாரித்துத் தீர்த்துக்கொள்ளும் விதத்தில், Lessons Learnt and Reconciliation Commission (L.L.R.C.)� எனும் நல்லிணக்க ஆணைக் குழுவை அமைத்துக் கொள்ளும் வாய்ப்பை வழங்கியது.

2013-ம் ஆண்டு L.L.R.C. விசாரணையிலும் மனித உரிமை தொடர்பான விசாரணைகளிலும் முன்னேற்றம் இல்லை என்று அறிவித்தது

ஐ.நா. பின்னர், ஐ.நா-வின் மனித உரிமை ஆணையர் நவிபிள்ளை, இலங்கைக்கே நேரடியாகச் சென்று சூழலை ஆராய்ந்து அறிக்கை கொடுத்தார்.

இப்போது (2014-ல்) சர்வதேச விசாரணை தேவை என, ஐ.நா. மனித உரிமை அமர்வில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருக்கிறது.

ஓர் இனப்படுகொலையை வேடிக்கை பார்த்த சர்வதேசச் சமூகம், தமிழர்களின் பிரச்சினைகளைக் காதுகொடுத்துக் கேட்க ஐந்து ஆண்டுகள் ஆகியிருக்கிறது.

ஈழத் தமிழர் பிரச்சினை, படிப்படியாக சர்வதேச சமூகத்தின் கைகளுக்குச் சென்றுவிட்டது.

இந்தத் தீர்மானங்கள் இன்னும் வலுவாக வேண்டும் என்பதில் எனக்கு மாற்றுக் கருத்து இல்லை. ஆனால், ஐ.நா. நடவடிக்கைகளால் நன்மையே இல்லை என்று சொல்லிவிட முடியாது!

ஆனால், இதுவரை வெளிவந்த ஐ.நா. அறிக்கைகள் போர்க்குற்றம், மனித உரிமை என்றுதான் பேசுகிறதே தவிர, எங்குமே இனப்படுகொலை என்ற வார்த்தையைக்கூடப் பயன்படுத்தவில்லையே?

போர் முடிந்த புதிதில் அயர்லாந்தில் நடந்த மக்கள் தீர்ப்பாயத்தில் போர்க்குற்றம், இனப்படுகொலை என்றுதான் பேசினார்கள். ஆனால் உறுதியான ஆதாரங்கள் வெளிவந்த பின்னர், ஜெர்மனியில் நடந்த மக்கள் தீர்ப்பாய மாநாட்டின் முடிவில் ‘இலங்கையில் நடந்தது இனப்படுகொலை� என்று அறிவித்தார்கள்.

இந்த நிலையில் நாம் ஐ.நா. தீர்மானத்தை இனப்படுகொலை என்று திட்டவட்டமாக வரையறுக்கப் போராட வேண்டுமே தவிர, ‘ஐ.நா-வே வேண்டாம், அமெரிக்கா எந்த நன்மையும் செய்யாது� என்று பிரச்சினையைத் திசை திருப்புவது குழப்பும் வேலையாகப் படுகிறது.

தொடர்ந்து போராடுவதன் மூலம் மட்டுமே சர்வதேசச் சமூகத்தின் கவனத்தை ஈர்த்து, ஈழத் தமிழர்களுக்குத் தேவையான அரசியல் தீர்வினைப் பெற முடியும்.

செப்டம்பர் மாதத்தில் இருந்து இலங்கை மீதான விசாரணைக்குரிய ஆயத்தப் பணிகள் தொடங்கும் என நம்புகிறேன்.

இந்த விசாரணைகளுக்கு, இலங்கை அரசு உரிய முறையில் ஒத்துழைப்பு வழங்காவிட்டால், இலங்கை மீது பொருளாதாரத் தடைகள் வரும் என எதிர்பார்க்கலாம். ஐ.நா. போன்ற அமைப்புகளால் மட்டுமே அது சாத்தியமாகும்!

ஆனால், எண்ணெய் வளமோ, சுரண்டக்கூடிய வேறு வளங்களோ இல்லாத இலங்கை மீது அமெரிக்காவுக்கோ, மேற்கு உலகுக்கோ என்ன அக்கறை இருக்கும் என்று எதிர்பார்க்க முடியும்?

தெற்கு ஆசியாவின் அரசியல் ஸ்திரத்தன்மைக்கு இந்தியாவின் பங்கு முக்கியமானது. ஆனால், ஆசியாவில் தன்னை ஒரு ‘சூப்பர் பவர்� ஆக நிறுத்திக்கொள்ள இந்தியா எதையுமே செய்யவில்லை.

குறிப்பாக, இலங்கை விவகாரத்தைத் தவறான கண்ணோட்டத்துடன் அணுகுகிறது.

13-வது சட்டத் திருத்தத்தின் மூலம் ஈழத் தமிழர்களுக்கான குறைந்தபட்ச தீர்வைக்கூடப் பெற்றுக் கொடுக்காமல், ‘அவர்களுக்கு வீடு கட்டிக் கொடுத்தோம்… கழிப்பிடம் கட்டிக் கொடுத்தோம்� என்று சொல்லிக்கொண்டிருக்கிறார்கள்.

ஆனால், இலங்கையைத் தனது பிராந்திய நலன்களுக்கு ஆதாயமாகப் பயன்படுத்திக்கொள்ளும் சீனா, இந்து மகா சமுத்திரம் முழுக்க தன் ஆதிக்கத்தை நிலைநாட்டி வருகிறது.

என்னைப் பொறுத்தவரை அமெரிக்கா என்று இல்லை, ரஷ்யா, இலங்கைக்கு எதிராகத் தீர்மானம் கொண்டுவந்தாலும் அதை ஆதரிப்பேன். நமக்குத் தேவை நீதி. அது யார் மூலம் கிடைத்தால் என்ன?

TAGS: