தமிழ்ப் பெண்கள் மீது பாலியல் வன்முறைகள்: இலங்கை மறுப்பு

saventhirasilva_001இலங்கையின் போரின் போதும், பின்னரும் பெண்கள் மீது மேற்கொள்ளப்படும் பாலியல் வன்முறைகள் தொடர்பில் சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டை இலங்கை மறுத்துள்ளது.

ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கைக்கான பிரதி வதிவிடப்பிரதிநிதி சவேந்திர சில்வா இந்த மறுப்பை வெளியிட்டுள்ளார்.

பெண்கள் மற்றும் சமாதானம் மற்றும் பாதுகாப்பு என்ற விடயம் தொடர்பில் நியூயோக்கில் இடம்பெற்ற கருத்தரங்கில் அவர் இந்த மறுப்பை வெளியிட்டார்.

இலங்கையில் போரின் போதும் பின்னரும் இடம்பெற்ற பெண்கள் மீதான பாலியல் வன்முறைகள் தொடர்பில் படையினர் மீது குறைந்தளவான குற்றச்சாட்டுக்களே சுமத்தப்பட்டுள்ளன.

சமாதானம், பாதுகாப்பு இன்மையும் போரின் காரணமாக மக்கள் இடம்பெயர்ந்தமையும் பாலியல் வன்முறைகளுக்கு காரணமாக அமைந்திருந்தன.

எனினும் இலங்கை அரசாங்கத்தை பொறுத்தவரையில் பாலியல் வன்முறைகளுக்கு எதிராக கடுமையான கொள்கைகளை அந்த அரசாங்கம் நடைமுறைப்படுத்தி வருகிறது.

இந்தநிலையில் 2007 -2009 ஆம் ஆண்டு காலப்பகுதியில் இலங்கையில் இடம்பெற்ற பாலியல் வன்முறைகளில் 7 படைவீரர்களே தொடர்பு கொண்டிருந்தனர் என்ற குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது.

இதில் 5 சம்பவங்கள் வடக்கில் இடம்பெற்றவையாகும். எனினும் வடக்கையும் சேர்த்து இலங்கையில் குறித்த காலப்பகுதியில் 119 பாலியன் வன்முறைகள் இடம்பெற்றிருந்தன.

2009- 2012 ஆம் ஆண்டு காலத்தில் இலங்கையில் 256 பாலியல் வன்முறை சம்பவங்கள் இடம்பெற்றன. எனினும் வடக்கில் இடம்பெற்ற 6 சம்பவங்களில் மாத்திரமே இலங்கை படையினர் தொடர்புக்கொண்டிருந்தனர்.

அதாவது இது மொத்த பாலியல் வன்முறையில் 3.3 வீதமாகும் என்று சவேந்திர சில்வா சுட்டிக்காட்டினார்.

இந்தநிலையில் இலங்கைக்கு எதிராக இந்த விடயத்தில் தேவையற்ற குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்படுவதாக அவர் சுட்டிக்காட்டினார்.

எனவே பாலியல் வன்முறைகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படுகின்ற போதும் உறுப்பு நாடுகளின் இறைமையை ஐக்கிய நாடுகள் சபை கவனத்தில் கொள்ளவேண்டும் என்று சவேந்திர சில்வா கோரிக்கை விடுத்தார்.

இந்த வாரத்தில் ஐக்கிய நாடுகளின் பெண்கள் மீதான பாலியல் வன்முறை தொடர்பான ஆய்வுகளில் 21 நாடுகள் சேர்க்கப்பட்டுள்ளன. அதில் இலங்கையும் உள்ளடங்குகிறது.

அத்துடன் இலங்கையில் தமிழ் பெண்கள் மீது போரின் போதும் போரின் பின்னரும் மேற்கொள்ளப்பட்ட பாலியல் வன்முறைகள் தொடர்பில் இலங்கையின் வதிவிடப் பிரதிநிதி பாலித கோஹனவிடம் தாம் பேச்சு நடத்தியுள்ளதாக ஐக்கிய நாடுகளின் பெண்கள் மீதான பாலியல் வன்முறை தொடர்பான பிரதிநிதி பங்காரா நேற்று முன்தினம் நியூயோர்க்கில் வைத்து தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

TAGS: