தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து தீர்க்கமான முடிவெடுப்பதற்காக கட்சியின் வடக்கு, கிழக்கு மக்கள் பிரதிநிதிகள் நாளை புதன்கிழமை திருகோணமலையில் இரா.சம்பந்தன் எம்.பியின் தலைமையில் ஒன்றுகூடவுள்ளனர்.
இந்த முக்கிய சந்திப்பில்
- இலங்கையின் இனப்பிரச்சினை தீர்வுப் பேச்சுக்கான தென்னாபிரிக்காவின் மத்தியஸ்தம்,
- கூட்டமைப்பின் உயர்மட்டக்குழுவின் தென்னாபிரிக்கா பயணம்,
- ஜெனீவாவில் கடந்த மார்ச் மாதம் இலங்கை அரசுக்கு எதிராக அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட ஐ.நா. உறுப்புரிமை நாடுகளினால் நிறைவேற்றப்பட்ட தீர்மானம்
- வடக்கு, கிழக்கில் தமிழ் மக்களை இலக்கு வைத்துத் தொடரும் அரசின் பழிவாங்கல் நடவடிக்கைகள்
உள்ளிட்ட சம கால நிலைமைகள் தொடர்பில் ஆராய்ந்து கூட்டமைப்பின் அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து முடிவெடுக்கப்படும் என்று கூட்டமைப்பின் தலைவரும் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தன் தெரிவித்தார்.
திருகோணமலை நகரசபை மண்டபத்தில் நாளை புதன்கிழமை காலை 10 மணிக்கு ஆரம்பமாகவுள்ள இந்த முக்கிய சந்திப்பில் கூட்டமைப்பின் வடக்கு, கிழக்கு நாடாளுமன்ற உறுப்பினர்கள், வடக்கு மாகாண முதலமைச்சர், வடக்கு மாகாண அமைச்சர்கள், கூட்டமைப்பின் வட மாகாண சபை உறுப்பினர்கள் மற்றும் கிழக்கு மாகாண எதிர்க்கட்சித் தலைவர் உட்பட கூட்டமைப்பின் கிழக்கு மாகாணசபை உறுப்பினர்கள் ஆகியோர் கலந்துகொள்ளவுள்ளனர்.
இதேவேளை, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளின் ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் இன்று செவ்வாய்க்கிழமை மாலை 4 மணிக்கு திருகோணமலை நகரசபை மண்டபத்தில் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் எம்.பியின் தலைமையில் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இக்கூட்டம் தொடர்பாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்ததாவது,
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை கட்சியாகப் பதிவு செய்வதா, இல்லையா என்பது உட்பட வடக்கு, கிழக்கின் சமகால நிலைமைகள் தொடர்பில் கலந்துரையாடி முடிவெடுப்பதற்காக கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளின் ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் நாளை செவ்வாய்க்கிழமை திருகோணமலையில் நடைபெறவுள்ளது.
கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் எம்.பியின் தலைமையில் திருகோணமலை நகரசபை மண்டபத்தில் இன்று செவ்வாய்க்கிழமை மாலை 4 மணிக்கு ஆரம்பமாகும் இந்தக் கூட்டத்தில் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளின் தலைவர்கள், செயலாளர்கள் மற்றும் முக்கிய பிரதிநிதிகள் கலந்துகொள்வர்.
மேற்படி கூட்டத்தில் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணசபைகளின் தற்போதைய நிலைவரங்கள், கூட்டமைப்பின் வெளிவிவவாரக் கொள்கைளைக் கையாள்வது எப்படி?, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை கட்சியாகப் பதிவு செய்வதா? இல்லையா? ஆகியவை உட்பட வடக்கு, கிழக்கின் சமகால நிலைமைகள் தொடர்பில் கலந்துரையாடப்படும் என்று சுரேஷ் எம்.பி. தெரிவித்தார்.
தந்தை செல்வாவின் தனி தமிழீழம் கனவை நினைவாக்க முற்படுவீர்.
அதுவே ஈழ மக்களின் தாகம்.லட்சியம்.