யுக்ரெய்ன் நெருக்கடி: ஐரோப்பிய ஒன்றியத்தின் தண்டனைத் தடைகள் அறிவிப்பு

eu_flagரஷ்யாவின் துணைப் பிரதமர் உட்பட 15 பேருக்கு எதிராக ஐரோப்பிய ஒன்றியம் தண்டனைத் தடைகளை விதித்துள்ளது.

யுக்ரெய்னின் ஸ்திரத்தன்மையைக் குலைக்க முயலுபவர்கள் என தாம் நம்புவோருக்கு எதிராக நடவடிக்கைகளை முன்னெடுக்கும் விதமாக அது இந்த தடைகளை அறிவித்துள்ளது.

ரஷ்ய ஆயுதப் படைகளின் தலைமை அதிகாரி, ரஷ்ய உளவுத்துறை இயக்குநகரகத்தின் இயக்குநர், கிழக்கு யுக்ரெய்னில் அரசாங்கத்துக்கு எதிரான நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள யுக்ரெய்னிய பிரிவினைவாதிகள் சிலர் ஆகியோரும் இந்த தண்டனைத் தடைகளுக்கு இலக்காகியுள்ளனர்.

ஆனால் நேற்று திங்கட்கிழமை அமெரிக்கா அறிவித்திருந்த தண்டனைத் தடைகளுக்கு இலக்காகியிருந்தோர் அளவுக்கு முக்கிய நபர்களின் பெயர்கள் தற்போதைய ஐரோப்பிய ஒன்றிய பட்டியலில் இடம்பெறவில்லை.

அதாவது முன்னணி தொழிலதிபர்கள் பெயர்களோ நிறுவனங்களின் பெயர்களோ ஐரோப்பிய பட்டியலில் இல்லை.

தவிர ஐரோப்பிய ஒன்றிய பட்டியலில் பெயர் அறிவிக்கப்பட்டுள்ளவர்கள், முடக்கக்கூடிய விதமான சொத்துக்களை ஐரோப்பிய ஒன்றிய நாடுகளில் கொண்டுள்ளனரா என்பதும் தெளிவாகத் தெரியவில்லை.

ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினுடன் தொடர்புடைய ஏழு நபர்கள் மற்றும் பதினேழு நிறுவனங்களுக்கு எதிராக அமெரிக்கா தடைகளை அறிவித்திருந்தது.

இதனிடையே யுக்ரெய்ன் நெருக்கடிக்கு தம் பங்கில் தண்டனைத் தடைகளை முன்னெடுக்கும் விதமாக ரஷ்ய பிரஜைகள் குறிப்பிட்ட 23 பேருக்கு விசா வழங்கப்போவதில்லை என ஜப்பான் தெரிவித்துள்ளது. -BBC