தமிழ் தேசிய கூட்டமைப்பை கட்சியாக பதிவு செய்ய நடவடிக்கை! ஐவர் கொண்ட குழு நியமனம்

TNAதமிழ்த் தேசியக் கூட்டமைப்பை ஒரு கட்சியாகப் பதிவு செய்வதற்கான முன்னேற்பாடுகளை ஒட்டி, அந்த அமைப்புக்கான யாப்பைத் தயாரிப்பதற்கு ஐந்து உறுப்பினர்களைக் கொண்ட உயர்மட்டக் குழு ஒன்றைத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நியமித்திருக்கின்றது.

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் செயலாளர் நாயகம் மாவை சேனாதிராஜா, ஈ.பி.ஆர்.எல்.எவ். தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன், ரெலோ தலைவர் செல்வம் அடைக்கலநாதன், புளொட் தலைவர் த.சித்தார்த்தன் ஆகியோருடன், தேசியப் பட்டியல் எம்.பியான எம்.ஏ.சுமந்திரனும் இந்தக் குழுவில் இடம்பெறுவார் எனத் தெரிவிக்கப்பட்டது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கட்சித் தலைவர்களை உள்ளடக்கிய ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் நேற்று மாலை திருகோணமலையில் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் எம்.பி. தலைமையில் சுமார் ஐந்து மணி நேரம் இடம்பெற்றது.

இக்கூட்டத்தில் தமிழரசுக் கட்சியின் சார்பில் மாவை சேனாதிராஜா எம்.பி.,  எம்.ஏ.சுமந்திரன் எம்.பி,  சி.சிறிதரன் எம்.பி ஆகியோரும், ஈ.பி.ஆர்.எல்.எவ். சார்பில் சுரேஷ் பிரேமச்சந்திரன் எம்.பி,  சிவசக்தி ஆனந்தன் எம்.பி,  கிழக்கு மாகாண சபை உறுப்பினர் துரைரட்ணம் ஆகியோரும், ரெலோ சார்பில் செல்வம் அடைக்கலநாதன் எம்.பி,  கிழக்கு மாகாண சபை உறுப்பினர்களான பிரசன்னா, ஜனா ஆகியோரும்,  புளொட்டின் சார்பில் அக்கட்சியின் செயலாளர் சதானந்தன் மற்றும் சிவநேசன் (பவன்) ஆகியோரும் கலந்து கொண்டனர்.

கூட்டமைப்பின் யாப்பைத் தயாரிப்பதற்கு ஐவர் கொண்ட உயர்மட்டக் குழுவை அமைப்பதற்கான தீர்மானம் இந்தக் கூட்டத்தில் எடுக்கப்பட்டது.

அதேநேரம் ஒவ்வொரு மாதமும் மூன்றாம் வாரத்தில் வரும் வெள்ளிக்கிழமையில் கூட்டமைப்பின் இத்தகைய ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தைத் தவறாது கூட்டுவது என்றும் தீர்மானிக்கப்பட்டது.

முன்னதாக கூட்டத்தின் ஆரம்பத்தில் மேற்படி கூட்டத்துக்குத் தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் வீ.ஆனந்தசங்கரிக்கு ஏன் அழைப்பு அனுப்பப்படவில்லை என்று பல தரப்பினராலும் கேள்வி எழுப்பப்பட்டது.

சுமந்திரன், ஸ்ரீதரன், மாவை சேனாதிராஜா மற்றும் புளொட் உறுப்பினர்கள் அவருக்கு அழைப்பு அனுப்பப்பட்டிருக்க வேண்டும் என்றும், இனிவரும் கூட்டங்களுக்காவது அவருக்கு அழைப்பு அனுப்பப்பட வேண்டும் என்றும் சாரப்பட கருத்து வெளியிட்டனர்.

இதேசமயம், தமிழ் தேசியக் கூட்டமைப்பைப் பதிவு செய்வது தொடர்பில் குழப்பகரமான கருத்துகளுடன் தேர்தல் ஆணையாளருக்கு ஆனந்தசங்கரி ஒரு கடிதம் எழுதியிருக்கின்றமை தொடர்பில் இன்றைய கூட்டத்தில் பலரும் அதிருப்தி தெரிவித்தனர். இவ்விடயம் குறித்து அவருடன் பேசி ஒரு முடிவெடுக்க வேண்டும் என்று தீர்மானிக்கப்பட்டது.

அடுத்து தற்போதைய அரசியல் களநிலைவரங்கள் குறித்து கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் விளக்கமளிக்கையில், கூட்டமைப்பு ஐக்கியமாகச் செயற்பட வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்திய அவர், கூட்டமைப்பைத் துண்டாடும் நோக்குடன் பல சக்திகள் முயன்று வருகின்றன என்றும் அதற்குத் துணை போய்விடக்கூடாது என்றும் எச்சரித்தார்.

ஐக்கியமும் ஒற்றுமையுமே இன்றைய அவசர, அவசிய தேவை என்றும், பரஸ்பரம் விட்டுக் கொடுத்து செயற்படுவதும் அவசியம் எனவும் அவர் வலியுறுத்தினார்.

தொடர்ந்து ஐ.நா.மனித உரிமைகள் கவுன்ஸிலில் இலங்கைக்கு எதிராக நிறைவேற்றப்பட்ட தீர்மானம், கூட்டமைப்பின் தென்னாபிரிக்க விஜயம் ஆகியவை குறித்து நாளை (இன்று) திருகோணமலையில் நடைபெறும் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் மாகாண சபை உறுப்பினர்களின் கூட்டத்தில் விரிவாக ஆராயலாம் என்றும், அதனால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைக் கட்சியாகப் பதிவு செய்கின்றமை குறித்து இந்தக் கூட்டத்தில் விரிவாக விவாதிக்கலாம் என்றும் யோசனை முன் வைக்கப்பட்டது. அது ஏற்றுக் கொள்ளப்பட்டு அந்த விடயம் குறித்து ஆராயப்பட்டது.

தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் பெயரில் கட்சி ஒன்றைப் பதிவு செய்ய வேறு சில தரப்புகளும் முயன்று வருவதால் அதை முறியடிப்பதற்கு உடனடியாக கூட்டமைப்பை பதிவு செய்யும் நடவடிக்கை விரைவுபடுத்த வேண்டும் எனச் சுட்டிக்காட்டப்பட்டது. அது ஏற்றுக்கொள்ளப்பட்டு அதற்கான நடவடிக்கை எடுப்பதற்கு ஐவர் கொண்ட குழுவும் அமைக்கப்பட்டது.

TAGS: