சர்வதேச சமூகம் குறித்த அணுகுமுறை: ஒத்த நிலைப்பாட்டுக்கு சம்பந்தன் வலியுறுத்தல்

sampanthar_tnaஇலங்கைப் பிரச்சினையில், சர்வதேச சமூகத்தின் நிலைப்பாடு மற்றும் அதனை அணுகும் முறை தொடர்பாக தமிழ் தேசிய கூட்டமைப்புக்குள் மாற்றுக் கருத்துக்கள் இருக்கக் கூடாது என அக்கட்சியின் தலைவரான இரா. சம்பந்தன் வலியுறுத்தி கூறியிருக்கின்றார்.

இன்று புதன்கிழமை திருகோணமலை நகர மண்டபத்தில் நடைபெற்ற தமிழ் தேசிய கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் மாகாண சபை உறுப்பினர்கள் மத்தியில் உரையாற்றிய போதே இந்த கருத்தை அவர் வெளியிட்டுள்ளார்.

தமிழ் தேசிய கூட்டமைப்பு தலைவர்கள் அண்மையில் தென் ஆப்பிரிக்காவிற்கு மேற்கொண்ட விஜயம் , ஐ. நா. மனித உரிமைகள் பேரவையில் இலங்கைக்கு எதிராக நிறைவேற்றப்பட்ட தீர்மானம், மற்றும் வடக்கு- கிழக்கு மாகாணங்களின் தற்போதைய நிலவரங்கள் தொடர்பாக ஆராயப்பட்ட இந்த கூட்டத்தில் வட மாகாண முதலமைச்சர் சி.வி விக்னேஸ்வரனும் கலந்து கொண்டார்.

தமிழ் தேசிய கூட்டமைப்பு தலைவர் இரா. சம்பந்தன் குறிப்பாக தனது உரையில், சர்வதேச சமூகத்தின் ஆதரவைப் பெற்று தீர்வுக்கான பயணத்தை முன்னெடுக்கும் இந்நேரத்தில் சர்வதேச சமூகம் தொடர்பாக மாற்றுக் கருத்துக்கள் வெளியிடுவதை தவிர்த்துக் கொள்ளுமாறு உறுப்பினர்களைக் கேட்டுக்கொண்டதாக நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் கூட்ட முடிவில் செய்தியாளர்களிடம் கூறினார்

நேச நாடான இந்திய ஐ.நா மனித உரிமைகள் பேரவை கூட்டத்தில் எடுத்த தீர்மானத்தை வைத்து அந்நாட்டை புறந்தள்ளிவிட முடியாது. சில வேளை ஆட்சி மாற்றம் ஏற்படலாம். அப்படி ஆட்சி மாற்றம் ஏற்படுமானால் புதிய அரசு எப்படி செயல்படும் என்பதை தற்போதைக்கு ஊகிக்க முடியாது. ஆட்சிக்கு யார் வந்தாலும் அவர்களுடன் பேசி எமது பக்கம் ஆதரவை பெற்றுக் கொள்ள வேண்டும்.என்ற கருத்தையும் அவர் வலியுறுத்தி கூறியதாகவும் செல்வம் அடைக்கலநாதன் கூறுகின்றார்

தமிழ் தேசிய கூட்டமைப்பில் அங்கத்துவம் பெற்றுள்ள தமிழர் விடுதலைக் கூட்டணி தலைவரான வீ. ஆனந்தசங்கரி இந்த கூட்டத்திற்கு அழைக்கப்படவில்லை என்று கூறப்படுகின்றது.

இது தொடர்பாக செல்வம் அடைக்கலநாதனிடம் கேட்ட போது அவரது அண்மைக்கால செயல்பாடுகளும் கருத்துக்களுமே தமிழ் தேசிய கூட்டமைப்புக்கும் அவருக்குமிடையிலான இடைவெளிகளை விரிசலடையச் செய்வதாக செல்வம் அடைக்கலநாதன் பதில் அளித்தார்.

இருந்த போதிலும் அவருடன் பேச்சு வார்த்தையொன்றை நடத்தி பிரச்சினகளுக்கு தீர்வு காண்பது என்றும் இந்த கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார். -BBC

TAGS: