தெரிவுக்குழு என்பது செத்துப் போன விடயம்! அதற்கு உயிர் கொடுக்க கூட்டமைப்பு தயாரில்லை!- இரா.சம்பந்தன்

sambanthanஇனப்பிரச்சினைக்குத் நாடாளுமன்றத் தெரிவுக்குழு மூலம் தான் தீர்வு என்று  அரசதரப்பில் திரும்பத் திரும்பப் பேசப்படுகின்றது. கூட்டமைப்பைப் பொறுத்தவரை தெரிவுக்குழு செத்துப்போன விடயம். அதற்கு உயிர் கொடுக்க நாம் தயாரில்லை. இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் பா.உ. தெரிவித்தார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் மாகாண சபை உறுப்பினர்களுக்கான மூன்றாவது கலந்துரையாடல் நேற்று காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை திருகோணமலை நகர சபை மண்டபத்தில் நடைபெற்றது. அந்த நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே சம்பந்தன் எம்.பி. இவ்வாறு தெரிவித்தார்.

அங்கு அவர் மேலும் கூறியவை வருமாறு:-

தெரிவுக் குழு என்பது செத்துப் போன விடயம். அதற்கு உயிர் கொடுக்கவோ அல்லது அதன் கூட்டத்தில் பங்குபற்றவோ கூட்டமைப்பு முயலாது.

சர்வதேசம் இன்று எமது பக்கத்தில் உள்ளது. ஐ.நா.மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களும், சமரச முயற்சியில் ஈடுபடும் இலக்கோடு தென்னாபிரிக்கா எமக்கு விடுத்த அழைப்பும் சர்வதேசம் எங்களுக்குத் தந்துள்ள அங்கீகாரத்துக்கான சான்றுகளே, சமிக்ஞைகளே. சர்வதேசத்தின் கரத்தைப் பற்றிக் கொண்டு தமிழ் மக்களுக்கான தீர்வைப் பெற்றுக் கொள்வதற்கு நாம் நேர்மை, பற்றுறுதியுடன் செயல்படுவோம்.

நாம் இந்தியாவிலிருந்தும் விலகி நிற்க முடியாது. ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் இலங்கைக்கு எதிராகக் கொண்டு வரப்பட்ட பிரேரணையை ஆதரித்து இந்தியா வாக்களிக்காமல் இருந்திருக்கலாம். அதற்கு இந்தியாவுக்குக் காரணங்கள் இருக்கலாம். ஆனால் அதற்காக நாம் கண்டபடி இந்தியாவை விமர்ச்சிக்க முடியாது, விமர்ச்சிக்கவும் கூடாது. அதற்காக நாம் இந்தியாவை விட்டு விட்டு விலகிச் செல்லவும் முடியாது.

ஈழத் தமிழர்களின் நலனுக்காக நாம் இந்தியாவுடன் செயற்பட்டேயாக வேண்டும். இந்தியத் தேர்தலின் பின்னர் புதிய அரசு ஆட்சிக்கு வந்தாலும் அதனுடன் சேர்ந்த ஆக்கபூர்வமாக செயற்படுவதற்கும் நாம் ஆர்வமாகக் காத்திருக்கிறோம். எது, எப்படி என்றாலும், நாம் ஒற்றுமையாக, நிதானமாக செயற்பட வேண்டிய காலகட்டம் இது.

எமது தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு என்று தனியான கொள்கைகள் உண்டு, கோட்பாடுகள் உண்டு அவற்றின் வழி நாம் செயற்பட வேண்டிய முக்கிய தருணம் இது. அதேபோல, ஒவ்வொருக்கும் ஒவ்வொரு தனிப்பட்ட கொள்கைகள், கருத்துக்கள், சிந்தனையோட்டங்கள் இருக்கலாம். அவை சில சமயங்களில் கட்சியின்,  தமிழ்க் கூட்டமைப்பின், கொள்கை, கோட்பாடுகளுடன் ஒத்துப் போகாமல் முரண்படக்கூடும். ஆனால் அந்த விடயங்களையும், நிலைப்பாட்டையும் கூட்டமைப்பின் நிலைப்பாடாக அர்த்தம் தரும் விதத்தில் நாங்கள் முன் வைக்கக்கூடாது.

எனவே, ஒவ்வொரு உறுப்பினரும் ஊடகங்களுக்குக் கருத்து வெளியிடுகையில், மிகக் கவனமாகவும், அவதானமாகவும் செயற்படவேண்டும். உள்நாட்டு, வெளிநாட்டு விடயங்கள் தொடர்பில் உறுப்பினர்கள் பகிரங்கமாகக் கருத்து வெளியிடுகையில் எழக்கூடிய குழப்பங்கள், அர்த்த மாற்றங்கள் இன்றைய நிலையில் நெருக்கடிகளை ஏற்படுத்தும்.

எனவே, கட்சியின் கொள்கைக் கோட்பாடுகளைப் பிரதிபலிக்கும் விடயங்களுக்கு முரணாக அம்சங்கள் வெளியாகாமல் தவிர்ப்பதை உறுதிப்படுத்துவதற்காக எண்மர் கொண்ட ஒரு குழுவை இன்று தெரிவு செய்திருக்கின்றோம்.

இன்று அமைக்கப்பட்ட 8 பேர் கொண்ட குழுவானது எதிர்காலத்தில் தமிழ் மக்களின் தீர்வு தொடர்பாக சுதந்திரமாகவும், அர்ப்பணிப்புடனும் செயற்படும்.  அதனுடன் கலந்தாலோசித்து விடயங்களை வெளிப்படுத்துமாறு ஆலோசனை கூறுகின்றேன்.

மாவை சேனாதிராஜா தலைமையில் செயற்படும் இக்குழுவில் நாடாளுமன்ற உறுப்பினர்களான செல்வம் அடைக்கலநாதன், சுரேஸ் பிரேமச்சந்திரன், பொன். செல்வராஜா, சுமந்திரன் மற்றும் வடக்கு மாகாண சபை முதலமைச்சர் சீ.வி. விக்னேஸ்வரன் மற்றும் கிழக்கு மாகாணசபை எதிர்க்கட்சித் தலைவர் சி.தண்டாயுதபாணி மற்றும் சித்தார்த்தன் ஆகியோர் உள்ளடங்குவார்கள் என்றார்.

இவ்வாறு மேற்படி கலந்துரையாடலில் பங்குபற்றிய தமது கட்சி உறுப்பினர்களுக்குத் தலைவர் சம்பந்தன் ஆலோசனை கூறினார் எனத் தெரியவந்தது.

TAGS: