சிறிலங்காவுடனான ஒத்துழைப்புகள், பயிற்சிகளை மட்டுப்படுத்தியது அமெரிக்கா

usa_indian flagசிறிலங்காவில் போரின் போது இருதரப்பினாலும் இழைக்கப்பட்ட போர்க்குற்றங்கள் குறித்து இன்னமும் விசாரிக்கப்படாததால், சிறிலங்காவுடனான தீவிரவாத முறியடிப்பு ஒத்துழைப்பு மற்றும் பயிற்சிகளை அமெரிக்கா 2013ம் ஆண்டில் மட்டுப்படுத்தியுள்ளது. இந்த தகவல் அமெரிக்க இராஜாங்கத் திணைக்களம் நேற்று வெளியிட்ட தீவிரவாதம் தொடர்பான நாடுகளின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

சிறிலங்கா தொடர்பாக இந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ள முக்கியமான பகுதிகள் –

சிறிலங்கா அரசாங்கம் விடுதலைப் புலிகள் இயக்கத்தை 2009ல் தோற்கடித்து விட்டது.

உள்நாட்டுப் போரில் சிறிலங்கா அரசாங்கம் மற்றும் விடுதலைப் புலிகளால் இழைக்கப்பட்டதாக குற்றம்சாட்டப்படும் பரந்தளவிலான அனைத்துலக சட்டமீறல்கள் மற்றும் கொடூரங்கள் தொடர்பாக, இதுவரை பதிலளிக்கப்படவில்லை என்ற கவலை நீடிக்கிறது.

இதன் விளைவாக, தீவிரவாத முறியடிப்பு ஒத்துழைப்பு மற்றும் பயிற்சிகளை அமெரிக்கா 2013ம் ஆண்டில் மட்டுப்படுத்தியது.

கடந்த ஆண்டில் தீவிரவாதம் தொடர்பாக எவரும் கைது செய்யப்படவில்லை.

ஆனால், விடுதலைப் புலிகளின் அனைத்துலக நிதி ஆதார வலையமைப்பு தொடர்ந்து செயற்படுவதாக சிறிலங்கா கவலை கொண்டுள்ளது.

சிறிலங்கா அரசாங்கம் போர் நடந்த பகுதிகளில் தொடர்ந்தும் இராணுவத்தை வலுவாக நிறுத்தி வைத்துள்ளது.

விடுதலைப் புலிகளின் அனுதாபிகள் மீண்டெழுவது குறித்து சிறிலங்கா அரசாங்கம் தொடர்ந்து கவலை தெரிவித்து வருகிறது.

2013ம் ஆண்டில் அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் தீவிரவாத முறியடிப்பு உதவித் திட்டத்தில் சிறிலங்கா காவல்துறை பங்கேற்கவில்லை.

சிறிலங்காவில் பயங்கரவாத முறியடிப்புச் சட்டம், வரலாற்று ரீதியாக விடுதலைப் புலிகளை அழிப்பதையே நோக்கமாக கொண்டிருந்தது.

1982இல் போர்க்கால நடவடிக்கையாக அறிமுகப்படுத்தப்பட்ட பயங்கரவாத தடைச்சட்டத்தை 2013இலும், சிறிலங்கா அரசாங்கம் நடைமுறைப்படுத்தியிருந்தது.

இது பாதுகாப்புப் படைகளுக்கு தேடுதல், கைது செய்தல், தனிநபர்களைத் தடுத்து வைத்தல் தொடர்பான பரந்தளவிலான அதிகாரங்களை வழங்குகிறது.

சிலவேளைகளில், சிறிலங்கா அரசாங்கம் தமது எதிரிகளையும், அரசியல் ரீதியான மாற்றுக் கருத்துக்களை வெளியிடுவோரையும் நசுக்குவதற்கும் பயங்கரவாத தடைச் சட்டத்தைப் பயன்படுத்துகிறது.

அமெரிக்காவின் இராஜாங்க, உள்நாட்டுப் பாதுகாப்பு, பாதுகாப்பு மற்றும் சக்தி திணைக்களங்களுடன் சிறிலங்கா அரசாங்கம், செயற்பாட்டு நிலைப் பங்காளராக இருந்த போதிலும், சிறிலங்காவுக்கான பொதுவாக தீவிரவாத முறியடிப்புக்கான அமெரிக்க உதவி 2013இல் மட்டுப்படுத்தப்பட்டுள்ளது.

அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின், ஏற்றுமதிக் கட்டுப்பாட்டு மற்றும் எல்லைகள் தொடர்பான பாதுகாப்புத் திட்டம் மற்றும் அமெரிக்க கடலோரக் காவல்படை என்பன, தொடர்ந்தும் சிறிலங்கா கடலோரக் காவல்படை மற்றும் கடற்படைக்கு எல்லை மற்றும் ஏற்றுமதி கட்டுப்பாட்டு விவகாரங்கள் குறித்த பயிற்சிகளை அளித்து வருகின்றன.

சுங்கம் மற்றும் எல்லைப் பாதுகாப்பு விவகாரங்களில் அமெரிக்காவுடன் தொடர்ந்தும் சிறிலங்கா அரசாங்கம் ஒத்துழைத்து வருகிறது.

எல்லைப் பாதுகாப்பு சிறிலங்கா அரசாங்கத்துக்கு 2013ல் முக்கியமானதொரு விவகாரமாக இருந்தது.

2013இல் அமெரிக்க இராஜாங்கத் திணைக்க்ளம், 25 சிறிலங்கா குடிவரவு அதிகாரிகளுக்கு ஆவண மோசடிகள் தொடர்பான பயிற்சியையும், புலம்பெயர்ந்தோருக்கான அனைத்துலக அமைப்பு, 40 அதிகாரிகளுக்கு எல்லைக்கண்காணிப்பை விருத்தி செய்வது மற்றும் ஆட்கடத்தலை தடுப்பது குறித்த பயிற்சிகளையும் அளித்துள்ளன.

அவுஸ்ரேலியாவுடனும், கனடாவுடனும், ஐரோப்பிய ஒன்றியத்துடனும் எல்லைப் பாதுகாப்பு விவகாரத்தில் சிறிலங்கா ஒத்துழைப்பு வழங்கி வருகிறது.

விடுதலைப் புலிகள் தோற்கடிக்கப்படுவதற்கு முன்னர் இலாப நோக்கற்ற நிறுவனங்களை நிதி சேகரிப்புக்கு பயன்படுத்தி வந்தனர்.

போர் முடிவுக்கு வந்து பல ஆண்டுகளான பின்னரும், சிறிலங்கா விடுதலைப் புலிகளின் ஏனைய நிதித் தொடர்புகளைத் தொடர்ந்து தேடும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது.

தீவிரவாதிகளைத் தேடும் அதன் நடவடிக்கை, அந்த எல்லைகளைத் தாண்டி விரிவாக்கப்பட்டுள்ளதாகவும், அரசாங்கத்தின் அரசியல் எதிரிகளைக் குறிவைப்பதாக இருப்பதாகவும் விமர்சனங்கள் எழுந்துள்ளன.” என்று  கூறப்பட்டுள்ளது.

TAGS: