ஐ.நா மனித உரிமைகள் கூட்டத்தொடரில் நிறைவேற்றப்பட்டிருக்கும் தீர்மானம் தமிழ் மக்கள் எதிர்பார்த்த விடயங்களை உள்ளடக்கியதாகவே இருப்பதாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் சுட்டிக்காட்டினார்.
அத்துடன் மேற்படி தீர்மானத்தினால் தமிழ் மக்களுக்கு நன்மையில்லை என விமர்சிப்பவர்கள் தமிழ் மக்களுக்கு பாதகமான நிலைப்பாட்டை உண்டாக்குகிறார்கள் எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.
யாழ்.ஊடக அமையத்தில் இன்றைய தினம் நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் கலந்து கொண்டு பேசுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். சந்திப்பில் மேலும் அவர் குறிப்பிடுகையில்,
திருகோணமலை மாவட்டத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் இரு நாள் கூட்டம் ஒழுங்கமைக்கப்பட்டு தீர்மானங்கள் எடுக்கப்பட்டிருக்கின்றது. அதன்படி ஐ.நா தீர்மானம் தொடர்பான முன் நடவடிக்கைகளை எடுப்பதற்கான குழு அமைக்கப்பட்டிருக்கின்றது.
மேலும் நிறைவேற்றப்பட்டிருக்கும் ஐ.நா தீர்மானத்தில் எவையும் இல்லை என்ற விமர்சனங்கள் முன்வைக்கப்படுகின்றன. ஆனால் அவ்வாறான விமர்சனங்களில் உண்மையில்லை.
மனித உரிமை மீறல்கள் மற்றம் அதனோடு ஒட்டிய குற்றங்கள் விசாரிக்கப்படவேண்டும் என்பதே தீர்மானத்தில் குறிப்பிடப்பட்டிருக்கும் விடயம் எனவே போர்க்குற்றம், மனிதத்துவத்திற்கு எதிரான குற்றங்கள், இன அழிப்பு போன்றனவற்றிற்க்கான விசாரணைகளும் நிச்சயமாக விசாரிக்கப்படும்.
எனவே இதற்கு எதிரான விமர்சனங்களை முன்வைப்பவர்கள் தமிழ் மக்கள் மத்தியில், தம்மை கொள்கை தீவிரவாதிகளாக காண்பிக்க நினைக்கின்றார்கள்.
மேலும் தமிழ் தரப்பிலிருந்து இவ்வாறான விமர்சனங்கள் முன்வைக்கப்படுகின்ற பொழுது சர்வதேச மட்டத்தில் அது பாதகமான விளைவுகளை உருவாக்கி விடுகின்றது. குறிப்பாக இம்முறை தீர்மானத்திற்கு இந்தியா ஆதரவு வழங்கவேண்டும் என்றவாறான அழுத்தம் தமிழகத்தில் முழுமை பெறாமைக்கான காரணம் இவ்வாறான விமர்சனங்களே.
எனவே தமிழ் மக்கள் தெளிவாக இருக்க வேண்டும். தமிழ் மக்கள் எதிர்பார்க்கும் அனைத்து விடயங்களும் இம்முறை வந்துள்ள தீர்மானத்தில் இடம்பெற்றுள்ளது.
மேலும் விசாரணைக்கு இலங்கை அரசாங்கம் ஒத்துழைப்பு வழங்காத பட்சத்தில், அது வெளிநாட்டில் நடைபெறும். அதற்கு நிறையவே சாதகமான தன்மைகள் உள்ளன. மேலும் விசாரணை நடத்தப்பட்டு உண்மைகள் வெளியாகும் போது அப்போது மாற்றங்கள் உண்டாகும்.
அடுத்த நாடாளுமன்ற தேர்தலில் யாழ். மாவட்டத்தில் போட்டியிடுவீர்களா என எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கையில்,
தேர்தலில் போட்டியிடுவது தொடர்பாக முழுமையான தீர்மானம் இல்லை. எனக்கு போதுமானளவு கால அவகாசம் கிடைத்தால் சிந்திப்பேன்.
என்னை 2010ம் ஆண்டிற்கு முன்னதாகவே பல முறை தேர்தலில் போட்டியிடுமாறு கேட்கப்பட்டது. ஆனால் நான் அதற்கு ஒப்புதல் வழங்கவில்லை. இந்நிலையில் 2010ல் நான் இணங்கினேன்.
மேலும் யாழ். வடமராட்சி கிழக்கு பகுதி என் சொந்த ஊர். அதனை கவனத்தில் கொள்ளுமாறு பல தடவைகள் கட்சியில் மேலிடம் கேட்டிருந்தது. ஆனால் பிற வேலைகளினால் அதனை நான் கருத்தில் கொள்ளவில்லை.
இந்நிலையில் மீளவும் கட்சியின் மேலிடம் அந்த உத்தரவை கொடுத்திருக்கின்றது. அதற்காகவே கட்சியில் அலுவலகம் ஒன்றினை திறந்து அந்தப் பகுதியில் செயற்பட இருக்கின்றேன் என்றார்.
மேலும் திருகோணமலை கூட்டத்தில் இடம்பெற்றதாக கூறப்படும் குழப்பங்கள் தொடர்பாக கேட்டதற்கு அவ்வாறன குழப்பங்கள் எவையும் இடம்பெற்றிருக்கவில்லை என தெரிவித்தார்.