இலங்கை கத்தோலிக்கத் திருச்சபையின் ஆயர்களுக்கும் பாப்பரசர் பிரான்சிஸுக்கும் இடையிலான சந்திப்பு வத்திக்கானில் இன்று சனிக்கிழமை நடைபெற்றது.
ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு தடவை நடைபெறும் பாப்பரசருடனான சந்திப்பில் இம்முறை இலங்கையின் 11 மறைமாவட்டங்களைச் சேர்ந்த ஆயர்கள் கலந்துகொண்டதாக வத்திக்கான் வானொலி செய்தி வெளியிட்டுள்ளது.
‘போர் முடிந்துவிட்ட போதிலும் நல்லிணக்கத்தை ஊக்குவிக்கவும் எல்லா மக்களின் மனித உரிமைகளுக்கும் மதிப்பளிக்கவும் இன்னும் தீர்க்கப்படாதுள்ள இனரீதியான குழப்பங்களை களையவும் இன்னும் நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டியுள்ளது’ என்று இலங்கை ஆயர்களுக்கான தனது செய்தியில் பாப்பரசர் கூறியுள்ளார்.
தனியொரு மத அடையாளத்தை மையப்படுத்தி-போலியாக தேசிய ஒற்றுமை என்கின்ற கருத்தை ஊக்குவித்துவரும் மத கடும்போக்குவாதிகளால் குழப்பங்களும் பல்வேறு அச்சுறுத்தல்கள் மற்றும் வன்முறைகளும் நாட்டில் நடந்துவருவதாகவும் பாப்பரசர் பிரான்சிஸ் கூறியுள்ளார்.
‘சமாதானத்துக்காக உழைக்க வேண்டும்’
‘இப்படியான கடும்போக்கானவர்கள் எல்லா சமூகங்களின் மத்தியிலும் இருக்கின்றார்கள். ஆனால் நாங்கள் அவர்களோடும் நல்லிணக்கத்தை ஏற்படுத்த வேண்டும் புரிந்துணர்வை ஏற்படுத்த வேண்டும் என்று பாப்பரசர் ஆலோசனை கூறினார்’ என்று வத்திக்கானிலிருந்து பிபிசி தமிழோசையிடம் பேசிய திருகோணமலை மறைமாவட்ட ஆயர் கிங்ஸிலி சுவாம்பிள்ளை கூறினார்.
‘எங்களுக்கு அரசியல் ரீதியாக சமாதானம் வேண்டும் என்ற நிலையையும் நாங்கள் பாப்பரசரிடம் வலியுறுத்தினோம்’ என்றும் ஆயர் கிங்ஸிலி சுவாம்பிள்ளை தெரிவித்தார்.
மத அடிப்படைவாதிகளின் செயற்பாடுகளுக்கு மத்தியிலும் கத்தோலிக்கத் திருச்சபை சமாதானத்தை வலியுறுத்திச் செயற்பட வேண்டும் என்பதையே பாப்பரசர் இலங்கை ஆயர்களுக்கு அளித்துள்ள செய்தியின் சாராம்சம் என்று வத்திக்கானிலிருந்து இலங்கை அருட்தந்தை ஜோர்ஜ் திசாநாயக்க பிபிசி தமிழோசையிடம் கூறினார்.
இலங்கையில் கடந்த காலங்களில் சில கடும்போக்கு பௌத்த அமைப்புகள் மதச் சிறுபான்மை சமூகங்களுக்கு எதிரான நடவடிக்கைகளில் ஈடுபட்டுவருகின்ற நிலையில், அவற்றைத் தடுக்க அரசாங்கம் உரிய நடவடிக்கைகள் எடுக்கவில்லை என்கின்ற குற்றச்சாட்டுக்கள் இருந்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது. -BBC