சம்பூர் என்ற கிராமத்தின் பெயரை அரச ஆவணங்களில் இருந்து அழிப்பதற்கு திட்டமிட்டிருப்பதாக குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன. ஆங்கில ஊடகம் ஒன்று இந்த குற்றச்சாட்டை முன்வைத்துள்ளது.
திருகோணமலை – மூதூர் கிழக்கில் உள்ள சம்பூரில் இருந்து பொது மக்கள் இடம்பெயர்ந்து 9 வருடங்கள் நிறைவடைந்துள்ளன.
எனினும் அந்த மக்களை சொந்த இடங்களில் குடியேற்ற அனுமதிக்காமல் இலங்கை கடற்படையினர் தொடர்ந்து தடையாக இருந்து வருகின்றனர்.
அங்கு மொத்தமாக 9000 ஏக்கர் காணிப் பரப்பு இருந்த போதும், தற்போது புதிதாக வெளியிடப்பட்டுள்ள வர்த்தமானியின் படி, 1458 ஏக்கர் காணிப்பரப்பே சம்பூருக்கு சொந்தமாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதில் அனல் மின்னுற்பத்தி நிலையம் அமைக்கப்பட்டுள்ள 500 ஏக்கர் காணிப்பரப்பும் உள்ளடங்கும்.
ஏனைய பிரதேசங்கள் முழுவதையும் கடற்படையினர் தமது கட்டுப்பாட்டில் வைத்துள்ளனர்.
இந்தநிலையில் அரசாங்கம் சம்பூர் என்ற கிராமம் ஒன்று இருந்ததாக சான்றுகள் இல்லை என்பதற்காக சகல ஆவணங்களையும் அழித்துவிடத் திட்டமிட்டுள்ளதாக அந்த ஆங்கில ஊடகம் சுட்டிக்காட்டியுள்ளது.