தந்தை செல்வாவின் கோரிக்கையினை ஏற்க மறுத்தமையே ஆயுதப் போராட்டத்திற்கு காரணம்

selvanayakam_memorial_bati_001இந்தநாட்டிலே மாறிமாறி வந்த எந்த அரசாங்கங்களும், தந்தை செல்வாவின் கோரிக்கையை ஏற்றிருந்தால் ஆயுதபோராட்டம் என்ற ஒன்று உருவாகி இளைஞர்கள் வகை தொகையின்றி மடிந்திருக்கமாட்டார்கள் என மட்டக்களப்பு பாராளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் கூறினார்.

நேற்று முன்தினம் தமிழரசுக்கட்சியின் ஸ்தாபகர் தந்தை செல்வாவின் நினைவு தின நிகழ்வு களுவாஞ்சிகுடி இராசமாணிக்கம் மண்டபத்தில் நடைபெற்றது.

இந்த நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். இங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர்,

தந்தை செல்வா அவர்கள் 1972ம் ஆண்டு இலங்கை அரசாங்கத்தினால் கொண்டு வரப்பட்ட புதிய சட்ட மூலத்தை எதிர்த்து பதவியைத் துறந்து வந்த போது அவருக்கு முதன் முதலாக வரவேற்பு வைத்தது இந்த கிழக்கு மாகாணம் தான்.

மட்டக்களப்பு தொடங்கி பொத்துவில் வரைக்கும் இவருக்கான அமோக வரவேற்பு தமிழ்மக்களினால் அளிக்கப்பட்டது.

தந்தை செல்வா அவர்களின் தீர்க்க தரிசனத்தினால்தான் பட்டிருப்பு தொகுதியில் அமரர் இராசமாணிக்கம் அவர்களை மூன்று முறை தலைவராக ஆக்கினார். அது பட்டிருப்பு தொகுதிக்கு மாத்திரமல்ல ஒட்டுமொத்த கிழக்கு மாகாணத்திற்கே கிடைத்த பெருமை.

இந்த அரசியல் வரலாற்றில் பதவியைத் துறந்த தலைவர் என்றால் அது தந்தை செல்வா அவர்கள் தான் என்பதில் எந்தவித ஐயமும் இல்லை. அன்று தந்தை செல்வா அவர்கள் அரசியலுக்குள் வராமல் இருந்திருந்தால் கிழக்கு மாகாணம் என்பது தமிழ் தேசியத்தில் இருந்து இல்லாமல் போயிருக்கும் என்பது நாம் அவரின் வரலாற்றில் இருந்து அறிந்து கொள்ள வேண்டிய விடயம்.

அன்று யாப்பு அன்றைய அரசாங்கத்தினால் கொண்டுவந்த வேளையில்,  வடக்கு கிழக்கு மக்களை பாதிக்கும் இந்த அரசியல் யாப்பினை எதிர்த்து நான் பதவி விலகுகின்றேன். முடிந்தால் இன்னுமொரு தேர்தல் வைத்து எம் மக்களின் ஆணையை பெறுங்கள் பார்க்கலாம். நான் அதில் போட்டியிட்டு வெற்றி பெறுகின்றேன் என தந்தை செல்வா கூறினார்.

1972ம் ஆண்டு தமிழர் கூட்டணி உருவாக்கப்பட்டது. அதன் பின்னர் 1976ம் ஆண்டுதான் வட்டுக் கோட்டைத் தீர்மானத்தின் போது தமிழர் விடுதலைக் கூட்டணியாக மாற்றமடைந்தது.

அன்று வட்டுக் கோட்டைத் தீர்மானத்தில் மேற்கொள்ளப்பட்ட தீர்மானங்களாவன, ஒவ்வொரு நாட்டிற்கும் உள்ள சுயநிர்ணய உரிமை அடிப்படையில் சுதந்திர இறைமையுள்ள மத சார்பற்ற சோசலிச தமிழீழம் அமைக்கப்படும், அங்கு வாழுகின்ற அனைத்து மக்களுக்கும் சம உரிமை வழங்கப்படும்.

இலங்கையில் எப்பகுதியிலும் வாழும் தமிழ் பேசும் மக்களும் இலங்கையில் மூதாதையர்களைக் கொண்டு உலகில் பரந்து வாழுகின்ற அனைத்து தமிழ் தமிழ் பேசும் மக்களுக்கும் இந்த நாட்டில் அங்கீகாரம் வழங்கப்படும். இவைதான் வட்டுக் கோட்டையிலே எடுக்கப்பட்ட தீர்மானம்.

இந்த தீர்மானம் எடுக்கப்பட்ட போது தந்தை செல்வாவுடன் பொன்னம்பலம், தொண்டமான் என மூன்று தலைவர்கள் தலைமையில் தீர்மானங்கள் எடுக்கப்பட்டன.

இதில் செயலாளராக அமிர்தலிங்கம் அவர்களும் பிரசார செயலாளராக தற்போது முஸ்லீம் காங்கிரஸின் ஸ்தாபகரான அஸ்ரப் அவர்களும் இருந்தார்கள்.

இதில் வேதனை என்னவென்றால், 1976ம் ஆண்டு மே மாதம் 16ம் திகதி வட்டுக் கோட்டை தீர்மானம் எடுக்கப்பட்டு வடக்கு கிழக்கில் ஒரு பொதுத் தேர்தல் இடம்பெறுகின்றது.

1977ம் ஆண்டு ஆனால் அந்த தேர்தல் இடம்பெறுவதற்கு முன்னரே 1977ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 27ம் திகதி எமது தந்தை செல்வா அவர்கள் இந்த உலகை விட்டு பிரிந்த செய்தி எங்களுக்கெல்லாம் பேரிடியாய் இருந்தது. அன்றிலிருந்துதான் ஆயுதப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

1986 வரை பல இயக்கங்கள் போராடின. ஆனால் 1986ம் ஆண்டுக்கு பின்னர் 2009ம் ஆண்டு வரை போராடிய ஒரேயொரு இயக்கம் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் தான். இந்த வரலாற்றின் அடிப்படையில்தான் இன்று நாங்கள் என்ன செய்ய வேண்டும் தந்தை செல்வா தமிழ் மக்களை மட்டும் பார்க்கவில்லை.

தமிழ் பேசும் மக்கள் என்ற வார்த்தைப் பிரயோகத்தனை வைத்திருந்தார். அதனை இலங்கை தமிழரசுக் கட்சி தமிழர் விடுதலைக் கூட்டணி என அனைத்திலும் அனைவரையும் இணைத்து உள்வாங்கச் செய்து வெற்றியடையச் செய்தார். அதில் வெற்றி பெற்ற இஸ்லாமிய சகோதரர்கள் அனைவரும் சோரம் போனதுதான் வரலாறு.

இதனை நாம் புரிந்து கொள்ள வேண்டும். மூதூரில் இருக்கின்ற முகம்மது அலி, முஸ்தபா, காரியப்பர், கல்முனை அகம்மது மைசூர் மௌலானா இந்த நான்கு பேரும் தமிழ் தேசியத்தினூடாக வந்தவர்கள்.

அது போலவே முஸ்லீம் காங்கிரஸின் ஸ்தாபகர் அஸ்ரப் அவர்களும் தமிழர் விடுதலைக் கூட்டணியில் இருந்தவரே அது போல் பலர் அவர்களின் இருப்பை நிலைநாட்டிக் கொண்டு அவர்கள் சோரம் போனதுதான் வரலாறு இது இன்று நேற்றல்ல அதன்றிலிருந்தே அவ்வாறுதான்.

சர்வதேசத்திற்கு சென்ற பயணம் திரும்பி வருவதாக இருந்தால் வடகிழக்கு மக்களுக்கான தீர்வு உரிமை சுதந்திரம் எப்போது கிடைக்குமோ அப்போதுதான் சர்வதேசத்தில் மையம் கொண்டிருக்கின்ற தமிழ் தேசியம் திரும்பி வரும்.

பலர் நாம் உணர்வாகப் பேசுகின்றோம். நாம் மற்றவர்களுக்கு உசுப்பேத்துகின்றோம் என்று கூறுகின்றார்கள் நாம் உணர்வாகவோ உசுப்பேத்தும் விதமாகவே பேசவில்லை உண்மையைக் கூறுகின்றோம்.

இந்நாட்டில் 63 வருடகாலமாக அடிமைப்பட்டிருக்கின்ற ஒரு இனம் விடுதலை என்கின்ற அந்த இலக்கை அடையும் வiரை தமிழ் மக்களாகிய நாங்கள் ஒற்றுமையாக இருக்க வேண்டும்.

நாம் கோடிக்கணக்கான சொத்துக்களையும் இலட்சக்கணக்கான உயிர்களையும் இந்த மண்ணுக்கு நாம் ஆகுதியாக்கியிருக்கின்றோம். ஒரு விடுதலைக்காகத்தான் நாம் கொடுத்திருக்கின்றோமே தவிர அபிவிருத்திக்காக நாம் கொடுக்கவில்லை. அபிவிருத்திக்காக எம் வரலாற்றை நாம் மறக்க முடியாது.

நாம் எம் மக்களுக்கு உண்மையாகக் கூறுகின்றோம். அது அவர்களுக்கு உண்மையாகப் படுகின்றது. நாங்கள் உரிமையை விடுதலையை எங்களுக்குத் தாருங்கள் அபிவிருத்தி என்பதை யாரும் செய்யலாம்.

அதை நாங்கள் தடுக்கவில்லை பாலம் தேவை குளம் தேவை கொங்கிறீட் வீதி, தார்வீதி, காப்பட் வீதி தேவை கார்ப்பட் வீதிக்காக நாம் கடந்து வந்த பாதையை மறந்து விட முடியாது.

தமிழ் தேசியம் என்ற சிந்தனையை எம் மக்களிடம் இருந்து இல்லாமல் செய்வதற்காக பல சூழ்ச்சிகளை செய்து வருகின்றார்கள்.

தற்போது எமக்கு கிடைத்திருக்கும் தலைவரும் தந்தை செல்வாவின் தீர்க்க தரிசனத்தில் உருவானவரே. அவர் செல்லுகின்ற பாதையில் நாம் விடுதலையைப் பெற வேண்டுமாக இருந்தால் எம் மக்கள் எம்மோடு இருக்க வேண்டும் என்றார்.

TAGS: