தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கம் இலங்கையில் தடை செய்யப்பட்ட இயக்கமாக கருதப்படுகின்ற நிலையில், உயிரிழந்த தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் போராளிகளை நினைவு கூறுவதற்கு முயற்சித்தால் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று அரசாங்கம் தெரிவித்துள்ளது.
அமைச்சரவை தீர்மானங்களை வெளியிடும் ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.
இது தொடர்பில் எந்தவொரு அமைப்புகளும் முயற்சிக்கக் கூடாது என்று அவர் குறிப்பிட்டார்.
வடமாகாண சபை, உயிரிழந்த முன்னாள் போராளிகளை நினைவு கூற முயற்சிப்பதாக ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த போதே அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல இந்த கருத்தை வெளியிட்டார்.
இது தொடர்பான நிகழ்வு கடந்த வருடமும் இடம்பெற்றது. தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் ஒரு தடை செய்யப்பட்ட இயக்கமாகும்.
உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்துவதற்காக தனிநபர் ஒருவர் தீபம் ஏற்றுவது, அவரது தனிப்பட்ட உரிமையாகும்.
இதனை, கூட்டிணைந்து அல்லது அமைப்பாக மேற்கொள்ள முடியாது. இந்த வித்தியாசத்தை புரிந்து கொள்ள வேண்டும் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.