இலங்கை மீதான ஐ.நா விசாரணை தாமதம்!- தீர்மானம் கொண்டு வந்த நாடுகள் கவலை

navaneethampillai201இலங்கை மீதான விசாரணைகள் ஆரம்பிக்கப்படுவதில் ஏற்பட்டுள்ள காலதாமதம் ஐ.நா மனிதவுரிமைகள் ஆணைக்குழுவின் 25-வது கூட்டத் தொடரில் தீர்மானத்தை கொண்டு வந்த நாடுகள் சிலவற்றுக்குக் கவலையை ஏற்படுத்தியுள்ளதாக கொழும்பு ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.

இலங்கையில் இடம்பெற்ற இறுதிக் கட்டப் போரின் போது மேற்கொள்ளப்பட்ட சர்வதேச மனிதாபிமான மற்றும் மனிதவுரிமை சட்டமீறல்கள் குறித்த விசாரணைகளை ஐ.நா மனிதவுரிமைகள் ஆணையாளர் பணியகம் மூலம் மேற்கொள்ள வேண்டும் என ஜெனிவாவில் கடந்த மார்ச் மாதம் 27ம் திகதி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

ஐ.நா மனிதவுரிமைகள் ஆணைக்குழுவில் இத்தீர்மானம் நிறைவேற்றப்பட்டு ஆறு கிழமைகள் கடந்துள்ள போதிலும், இவ்விசாரணைகளை மேற்கொள்வதற்கான பொறிமுறை இதுவரை உருவாக்கப்படவில்லை.

ஐ.நா மனிதவுரிமைகள் ஆணை யாளர் நவநீதம்பிள்ளை இந்த சர்வதேச விசாரணைப் பொறிமுறையை உருவாக்குவதற்கான ஏற்பாடுகளை தீவிரமாக மேற்கொண்டு வருகின்றார்.

ஆயினும், இந்த சர்வதேச விசாரணைப் பொறிமுறை தொடர்பிலான அதிகாரபூர்வ அறிவிப்பு இம்மாத இறுதிக்குள் வெளியாகும் என்று எதிர்பார்க்க முடியவில்லை என ஜெனிவாவில் உள்ள இராஜதந்திரிகள் கூறியுள்ளனர்.

இந்நிலையில், இந்த சர்வதேச விசாரணைப் பொறிமுறையை உருவாக்குவதில் ஏற்படும் காலதாமதம் இலங்கைக்கு எதிராக ஐ.நா. மனிதவுரிமைகள் ஆணைக் குழுவில் மூன்றாவது தீர்மானத்தை கொண்டு வந்த சில நாடுகளிடையே கவலையை ஏற்படுத்தியுள்ளது.

அத்துடன், இந்த சர்வதேச விசாரணைப் பொறிமுறையை உருவாக்குவதில் ஏற்படும் காலதாமதத்தால், அதன் பணிக்காலம், நீடிக்கப்படக்கூடும் என்றும் இந்நாடுகள் கவலை வெளியிட்டுள்ளன.

அதேவேளை, ஐ.நா மனிதவுரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளை எதிர்வரும் ஜூலை மாதம் ஓய்வு பெறுவதற்கு முன்னதாக, விடுமுறையில் செல்லக்கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இந்நிலையில், அதற்கு முன்னதாக இந்த சர்வதேச விசாரணைப் பொறி முறை உருவாக்கப்பட்டு, செயற்பட ஆரம்பிக்க வேண்டும் என தனது அதிகாரிகளிடம் நவநீதம்பிள்ளை கூறியுள்ளதாக ஜெனிவாவில் உள்ள இராஜதந்திரிகள் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பில் ஐ.நா மனித உரிமை ஆணையாளர் பணியக அதிகாரிகளுடன் நவநீதம்பிள்ளை கலந்துரையாடி வருவதாகவும் குறித்த இராஜதந்திரிகள் தகவல் வெளியிட்டுள்ளனர்.

அத்துடன், இவ்விசாரணைகள் தொடர்பில் இலங்கை அரசாங்கத்தின் ஒத்துழைப்பை பெறுவது மற்றும் வெளிப்படையான செயல்முறை தொடர்பில் நவநீதம்பிள்ளை கவனம் செலுத்தி வருவதாகவும் இந்த இராஜதந்திரிகள் தெரிவித்துள்ளதாக இவ்வூடகம் தகவல் வெளியிட்டுள்ளது.

TAGS: