தமிழர்களின் எதிர்ப்பு எதிரொலி. ஐ.பி.எல் கிரிக்கெட் போட்டிகள் தமிழகத்தில் இருந்து இடமாற்றம்.

ipl_cricketசென்னையில் நடக்கவிருந்த ஐ.பி.எல் போட்டிகளை தமிழகத்தில் இருந்து இடமாற்றியது பிசிசிஐ கிரிக்கெட் வாரியம்.

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் மே 18ம் தேதி சென்னை சூப்பர் கிங்ஸ்-பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணிகள் மோதுகின்றன. 22ம் தேதி சென்னை அணி ஐதராபாத் அணியை எதிர்கொள்கிறது. இதுதவிர மே 27 மற்றும் 28ல் அரையிறுதி போட்டிகளும் இங்கு நடைபெறுகின்றன. இந்த 4 போட்டிகளும் ராஞ்சிக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளன.

சேப்பாக்கம் மைதானத்தின் கேலரிகள் திறப்பு தொடர்பான வழக்கு நிலுவையில் உள்ளது. மேலும், இலங்கை வீரர்கள் சென்னையில் விளையாடக் கூடாது என்று தமிழக அரசு எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இதன் காரணமாக போட்டிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளன என்று பி.சி.சி.ஐ. தெரிவித்துள்ளது.

ஆனால் உண்மையில் நடந்தது என்னவெனில் மே 18 இனப்படுகொலை நாளன்று சென்னையில் கிரிக்கெட் போட்டி நடத்தக் கூடாது என்று சென்னை காவல்துறை ஆணையருக்கும் , தமிழக முதல்வருக்கும் கோரிக்கை வைத்தனர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர்.

அப்படி மீறி சென்னையில் போட்டிகள் நடந்தால் தமிழ் அமைப்புகள் கிரிக்கெட் போட்டியை எதிர்த்து போராட்டம் நடத்தும் என்றும் தெரிவிக்கப்பட்டது. மேலும் இலங்கை கிரிக்கெட் அணியை சேர்ந்த எவரும் தமிழகத்தில் காலடி எடுத்து வைக்க விட மாட்டோம் என்றும் தமிழ் அமைப்புகள் ஏற்கனவே தெரிவித்து இருந்தன.

சென்ற ஆண்டும் தமிழக அரசு இலங்கை கிரிக்கெட் அணியை சேர்ந்தவர்களை சென்னையில் விளையாட அனுமதிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் தமிழக அரசு பி.சி.சி.ஐ நிறுவனத்திடம் திட்டவட்டமாக ஒரு தகவல் அனுப்பியது.

மே 18 நாளில் போட்டி நடைபெறக் கூடாது என்றும் , இலங்கை கிரிக்கெட் ஆட்டக் காரர்கள் எவரும் தமிழகத்திற்கு வரவேண்டாம் என்றும் அரசு அறிவுறுத்தியது . இதைக் கருத்தில் கொண்டு ஒரேயடியாக எந்த போட்டிகளையும் தமிழகத்தில் நடத்தப் போவதில்லை என்று கிரிக்கெட் வாரியம் முடிவெடுத்தது. இருப்பினும் கிரிக்கெட் வாரியம் கீழே விழுந்தாலும் மீசையில் மண் ஒட்டவில்லை என்பது போல வேறு ஒரு காரணத்தை கூறியுள்ளது.

இது குறித்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் கருத்து தெரிவித்து உள்ளது.

இது உண்மையில் தமிழர்களின் போராட்டத்திற்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றியாகும். இனப்படுகொலை நாளில் தமிழகத்தில் இப்படியான கிரிக்கெட் போட்டிகள் நடைபெறக் கூடாது என்பதில் நாம் உறுதியாக இருந்தோம் . போராட்டத்தை முன்னெடுத்து இப்போட்டியை தடுத்து நிறுத்த எல்லா வேலைகளையும் செய்யத் தயாரானோம்.

ஆனால் தமிழக அரசே இப்போட்டியை நடக்க விடாமல் செய்ததில் நமக்கு மகிழ்ச்சியே. தமிழர்களின் உணர்வுக்கு மதிப்பளித்து சென்னையில் போட்டிகள் நடைபெறக் கூடாது என கிரிக்கெட் வாரியத்திற்கு அழுத்தம் கொடுத்த தமிழக அரசுக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறது .

TAGS: