மே-18 நினைவு நிகழ்வுகளுக்கு சிறிலங்கா அரசு தடை – மீறினால் கடும் நடவடிக்கையாம்

keheliya_rambukwellaஇறந்துபோன விடுதலைப் புலிகளை நினைவு கூரும் பொது நிகழ்வுகளை எவரேனும் நடத்தினால், சட்ட நடவடிக்கைகளை எதிர்கொள்ள நேரிடும் என்று சிறிலங்கா அரசாங்கம் எச்சரித்துள்ளது. கொழும்பில் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சரவைப் பேச்சாளர், கெஹலிய ரம்புக்வெல, “விடுதலைப் புலிகளை நினைவுகூர்ந்து வடக்கு உள்ளிட்ட நாட்டின் எந்தப் பகுதியிலுமே நிகழ்வுகளை நடத்த அனுமதி வழங்கப்படாது.

நாட்டில் அமைதியை ஏற்படுத்தவே இந்த முடிவு எடுக்கப்பட்டது.

விடுதலைப் புலிகளை அல்லது அவர்களின் இறந்துபோன தலைவரை நினைவுகூர நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக புலனாயவுத் தகவல்கள் கிடைத்துள்ளன.

அவற்றைத் தடுப்பதற்குத் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும்.

ஏனென்றால் விடுதலைப் புலிகள் இயக்கம் சிறிலங்காவிலும் ஏனைய பல நாடுகளிலும் தடைசெய்யப்பட்டுள்ள ஒரு அமைப்பு.

அதன் இறந்துபோன உறுப்பினர்களை நினைவுகூர எவரேனும் பொது நிகழ்வுகளை நடத்தினால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.

விடுதலைப் புலிகள் இயக்கத்தில் உறுப்பினராக இருந்தவரின் குடும்பத்தினர் அவரை நினைவு கூருவதற்கும், பொது இடத்தில் ஒரு நினைவு நிகழ்வு நடத்துவதற்கும் வேறுபாடு உள்ளது.

எவரும் தமது வீட்டில் நான்கு சுவர்களுக்குள் விளக்கேற்றி பிரார்த்தனை செய்யலாம்.

ஆனால், அரசாங்கத்தின் உத்தரவை மீறினால் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

வரும் 18ம் நாள் முள்ளிவாய்க்கால் படுகொலையின் ஐந்தாவது ஆண்டு நினைவு நாளாகும்.

இதனால், அன்றைய நாளில் நினைவு நிகழ்வுகள் நடத்தப்படுவதைத் தடுப்பதற்காக யாழ்.பல்கலைக்ழகத்துக்கு காரணமின்றி விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளதுடன் மாணவர்கள் குறித்த நாட்களில் விடுதிகளில் இருந்து வெளியேறுமாறு பணிக்கப்பட்டுள்ளனர்.

உயிரிழந்த சொந்தங்களுக்கு அஞ்சலி செலுத்த தமிழர்களுக்கு உரிமையில்லையா?: சிறீதரன் எம்.பி கேள்வி

sritharan_mpபோர்க்காலத்தில் உயிரிழந்த சொந்தங்களுக்கு நினைவு அஞ்சலி செலுத்த தமிழ் மக்களுக்கு உரிமை கிடையாதா என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரன் கேள்வி எழுப்பியுள்ளார். நாடாளுமன்றில் நேற்று வியாழக்கிழமை உரையாற்றிய போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

போர் இடம்பெற்றக் காலத்தில் லட்சக் கணக்கான தமிழர்கள் கொல்லப்பட்டனர்.

போர்க் காலத்தில் தமிழ் மக்கள் எதிர்நோக்கிய பிரச்சினைகளுக்கு இன்னமும் தீர்வு வழங்கப்படவில்லை.

இன்னமும் தமிழ் மக்கள் அகதிகளாக இந்தியா செல்கின்றனர்.. வடக்கில் இயற்கை அழிக்கப்பட்டு வருகின்றது.

அரசாங்க அமைச்சுக்கள் திணைக்களின் சில அபிவிருத்தித் திட்டங்களினால் இயற்கைக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

சட்டவிரோத மணல் அகழ்வு பாரியளவில் இடம்பெறுகின்றது. வடக்கில் குடிநீர் பிரச்சினை ஏற்பட்டுள்ளது.

இந்தப் பிரச்சினைகளுக்கு உடனடித் தீர்வுகள் வழங்கப்பட வேண்டுமென சிறீதரன் எம்.பி தெரிவித்துள்ளார்.

TAGS: