முள்ளிவாய்க்கால் வெற்றி அரசாங்கத்துக்கு அல்ல, தமிழர்களுக்கே: வடமாகாண கல்வி அமைச்சர்

kurukularaja_kandavalai_001கிளிநொச்சி மாவட்டத்தின் கண்டாவளை பிரதேசத்திற்கான தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் கட்சிக் கிளை அங்குரார்ப்பண நிகழ்வு கரைச்சி பிரதேசசபை உறுப்பினர் புஸ்பராசா தலைமையில் தருமபுரத்தில் அமைந்துள்ள கல்வி அமைச்சரின் இல்ல வளாகத்தில் நடைபெற்றது.

இதில் பா.உறுப்பினர் சி.சிறீதரன், வடமாகாண சபை உறுப்பினர்களான ப.அரியரத்தினம், சு.பசுபதிப்பிள்ளை, வடமாகாண கல்வி பண்பாட்டு அலுவல்கள் விளையாட்டுத்துறை அமைச்சர் த.குருகுலராஜா மற்றும் கரைச்சி பிரதேசசபை உறுப்பினர் தவபாலன் பொன்னம்பலநாதன்,

பச்சிலைப்பள்ளி பிரதேசசபை உறுப்பினர்களான சுரேன், வீரவாகுதேவர், பா.உறுப்பினர் சி.சிறீதரனின் செயலாளரும் கிளிநொச்சி கிழக்கு பிரதேச கட்சி அமைப்பாளருமான பொன்.காந்தன், கண்டாவளை பிரதேசத்தை சேர்ந்த கட்சி முக்கியஸ்தர்கள் ஆதரவாளர்கள் என கலந்துகொண்டிருந்தனர்.

இந்த நிகழ்வில் கண்டாவளை பிரதேசத்திற்கான கட்சியின் கிளை தெரிவு செய்யப்பட்டதுடன், புதிதாக ஏராளமானோர் கட்சியில் உறுப்புரிமையை பெற்றுக்கொண்டனர்.

கண்டாவளை பிரதேச கிளையின் தலைவராக சி.தவபாலன், செயலாளராக கதிரவேலு வைத்திலிங்கம், பொருளாளராக மயில்வாகனம் சோமசேகரம் ஆகியோரும் ஏனைய நிர்வாக உறுப்பினர்களும் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

இந்த பிரதிநிதிகள் கண்டாவளையின் கிராமங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் தெரிவு செய்யப்பட்டனர். இங்கு கலந்து கொண்டவர்கள் மத்தியில் வடமாகாண கல்வி அமைச்சர் த.குருகுலராஜா உரையாற்றும்போது,

கண்டாவளை பிரதேசத்தில் கட்சியின் கிளையொன்று அமைந்திருப்பதையிட்டு மிகுந்த மகிழ்ச்சி. ஏனெனில் கட்சியின் கோட்டை என்று சொல்லுமளவிற்கு இந்த மக்கள் மாகாணசபை தேர்தலில் எமக்கு வாக்களித்துள்ளனர்.

அதன் காரணமாக அரசாங்க தரப்பால் வீட்டுத்திட்டம், மின்சாரம் போக்குவரத்து போன்ற அபிவிருத்தி நடவடிக்கைகளில் கிராமங்கள் சில புறக்கணிப்புக்கு உட்படுவதாகவும் அறிகின்றோம்.

இந்த நாட்டில் இது ஒன்றும் ஆச்சரியமானதல்ல. ஜனநாயக விரோதம் இப்பொழுது சர்வ சாதாரணமானதாகி விட்டது. இந்த நாட்டில் தமிழர்கள் தங்கள் இருப்பை தக்க வைக்க பெரும் பிரயத்தனப்பட வேண்டி இருக்கின்றது.

இந்த நாட்டில் சிங்களவர்கள்தான் மூதாதையர்கள் என்றும் பேரின மமதை சொல்கிறபோது. சிங்களவர்கள் இங்கு வருவதற்கு முன்பு ஏற்கனவே இங்கு வாழந்தவர்கள் யார் என்று அவர்களின் வழிபாடு என்ன என்று பார்த்தால் தமிழர்கள் இந்த தீவில் எப்படி அடிமையாக்கப்பட்டுள்ளார்கள் என்பது உணரப்படும்.

அதனால் இங்கு ஒரு நியாயமான உரிமைகளுக்கான கோரிக்கைகள் எழுந்தது. முள்ளிவாய்க்கால் வரைக்கும் நாம் இத்தனை பெரும் அர்ப்பணிப்புக்களை செய்வதற்கு தூண்டியது.

இந்த நிலத்தில் எமது இனம் ஆழ பதித்திருக்கும் வேர்தானே அன்றி வேறொன்றும் இல்லை.மே 18 வெற்றியை கொண்டாட வேண்டியர்கள் நாங்கள்தான் சிங்களவர்கள் அல்ல எமது இனத்தின் விடிவுக்காக இத்தனை அர்ப்பணப்புக்களை செய்து எமது இனத்தின் சுதந்திரதாகத்தை ஜெனிவாவரை கொண்டு சென்று தெரியப்படுத்திய வெற்றிக்கு உரியவர்கள் நாங்கள்தான்.

சிங்களவர்கள் அல்ல.எனவே சிங்களவர்கள் எங்களுடைய வெற்றியை கொண்டாடிக்கொண்டிருக்கின்றார்கள்.அது தமிழர்களுடைய வெற்றிநாள் என்பதை நிச்சயம் காலம் வெகுவிரையில் இந்த அரசாங்கத்தை சார்ந்தவர்களுக்கு கற்றுத்தரும் என்றார்.

TAGS: