அன்று வெள்ளைப்புலி! இன்று கறுப்புப்புலி! மோடி வந்தால் இலங்கைக்கு ஆபத்து! வசந்த பண்டார

w_bஅன்று வெள்ளைப்புலி சொல்ஹெய்மினால் முடியாது போன தமிழீழத்தை, இன்று கறுப்புப்புலி ரமபோஸாவைப் பயன்படுத்தி உருவாக்க சில சக்திகள் முயற்சிகளை மேற்கொண்டு வருவதாக குற்றம் சாட்டும் தேசப்பற்றுள்ள தேசிய இயக்கம், இந்தியாவின் புதிய பிரதமராக மோடி பதவியேற்றால் இலங்கைக்கு ஆபத்து எனவும் எச்சரித்துள்ளது.

இது தொடர்பாக தேசப்பற்றுள்ள தேசிய இயக்கத்தின் பொதுச் செயலாளர் டாக்டர் வசந்த பண்டார மேலும் தெரிவிக்கையில்,

விடுதலைப் புலிகள் இயங்கிய காலத்தில் நோர்வேயின் வெள்ளைத்தோல் போர்த்திய சொல்ஹய்மை அனுசரணையாளராக நியமித்து இலங்கையில் தனித் தமிழீழத்தை உருவாக்க அனைத்து வழிகளிலும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டது.

ஆனால், தேசிய சக்திகளினதும் படையினரது அர்ப்பணிப்புடனும் வெள்ளைத்தோல் போர்த்திய புலியின் முயற்சி தோற்கடிக்கப்பட்டது.

இன்று அந்த முயற்சி தென்னாபிரிக்காவின் கறுப்புத் தோல் போர்த்திய புலிகளைப் பயன்படுத்தி மேற்கொள்ளப்படுகின்றது. இதன் பின்னணியில் வெளிநாடுகளின் நிகழ்ச்சி நிரலை அமுல்படுத்தும் அரசுக்குள்ளிருக்கும் சில சக்திகள் இயங்குகின்றன.

தென்னாபிரிக்காவின் விசேட பிரதியான சிறில் ரமபோஸா குழுவின் மத்தியஸ்தத்துடன் பேச்சுவார்த்தைகளை நடத்தி தேசிய பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டுமென்றும் இல்லாவிட்டால் ஐ.நா. மற்றும் வெளிநாடுகளின் அழுத்தங்கள் அதிகரிக்கும் என்றும் ஒரு கருத்தை நாட்டுக்குள் பரப்பி வருகின்றனர்.

இதில் எந்தவிதமான உண்மையும் இல்லை. அரசுக்குள்ளிருக்கும் இடதுசாரிகள் தமது நிகழ்ச்சி நிரலை முன்னெடுக்கவே இவ்வாறான கருத்துகளை பரப்புகின்றனர்.

விடுதலைப் புலிகள் காலத்தில் வெள்ளைத்தோல் முன்னெடுத்த முயற்சி இன்று கறுப்புத் தோலால் முன்னெடுக்கப்படவுள்ளது.

இதேவேளை, இந்தியாவின் புதிய பிரதமராக நரேந்திர மோடி பதவியேற்றால் அது இலங்கைக்கு ஆபத்தானதாகவே அமையும். காங்கிரஸ் அரசைவிட பயங்கரமாக மோடி அரசு எமது பிரச்சினையில் நேரடியாக தலையிடும். இவ்வாறு எமக்கெதிரான அழுத்தம் அதிகரித்தால் அரசாங்கம் சீனா, பாகிஸ்தான் பக்கம் நட்புறவை அதிகரித்துக் கொள்ளும் நிலைமைக்கு தள்ளப்படும் என்றும் டாக்டர் வசந்த பண்டார தெரிவித்தார்.

TAGS: