இன்று நாம் எங்களின் உயிர்நீத்த உறவுகளை நினைவுகூருவதற்கு தடை விதிக்கும் கேவலமான ஆட்சியின் கீழ் வாழ்ந்து கொண்டிருக்கின்றோமென மே 18 நினைவேந்தல் நாள் தொடர்பாக வடமாகாண சுகாதார அமைச்சரினால் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கையை மாறிமாறி ஆட்சி செய்த காலணித்துவ ஆட்சிக்காலத்திற்கு முன்பே ஈழத்தமிழர்கள் தனி இராச்சியமாகவே வாழ்ந்து வந்துள்ளனர்.
1948 ல் ஆங்கிலேயர் ஆட்சிப் பொறுப்பை சிங்களவரிடம் ஒப்படைத்த நாளிலிருந்து தமிழர்கள் இரண்டாம்தர பிரஜைகளாகவே சிங்கள ஆட்சியார்களால் நடாத்தப்பட்டு வந்துள்ளனர்.
இதனாலேயே தமிழ் மக்கள் ஆரம்பத்தில் அகிம்சை வழியிலும் பின்னர் ஆயுதப் போராட்டத்தையும் தமது அரசியல் கோரிக்கையை முன்வைத்து 60 வருடமாக போராடி வந்தனர்.
எனினும் துரதிஸ்டவசமாக 2009 மே 18 உடன் தமிழினத்தின் போராட்டம் மௌனிக்கப்பட்டுள்ளது. சர்வதேச நாடுகளின் உதவியுடன் பயங்கரவாத பட்டம் சூட்டப்பட்ட எமது மக்கள் போராட்டம் திட்டமிட்ட முறையில் மௌனிக்க வைக்கப்பட்டுள்ளது.
1956 களிலிருந்தே எம்மை அடக்கி ஆள நினைத்த சிங்களத் தலைமைகள் நன்கு திட்டமிட்ட வகையில் சிறுகச் சிறுக எம்மக்களை கொன்றொழித்து இறுதியில் 2009 இல்; சர்வதேச மனிதாபிமான, யுத்த சட்டங்களை கருத்தில் எடுக்காது கொத்துக் கொத்தாக மக்களை கொன்றொழித்தது. இதுதிட்டமிட்டவகையில் நடாத்தப்பட்ட இனப்படுகொலையாகும்.
மனிதகுலத்தின் அடிப்படை அம்சங்களான உணவு, மருந்துப் பொருட்கள் என்பவற்றிற்கு கூட தடை விதித்து பாதுகாப்பு வலயம் என்ற போர்வையில் குறிப்பிட்டவொரு சிறிய நிலப்பரப்பில் மக்களை தங்க வைத்து தனது இனவெறி தாண்டவத்தை இந்த ஆட்சியாளர்கள் நடாத்தி காட்டியிருக்கிறார்கள்.
இந்தநிலையில் இறுதி யுத்தத்தில் உயிர்நீத்த தங்களின் உறவுகளிற்கு ஆத்ம அஞ்சலி செலுத்துவதற்கு நாதியற்ற இனமாக ஈழத் தமிழினம் வாழ்ந்து கொண்டிருக்கிறது. .
இதன் வெளிப்பாடுதான் யாழ்ப்பாண பல்கலைக்கழகத்திற்கு கட்டாய விடுமுறை வழங்கப்பட்டதும் வடமாகாண சபைக்கு முன்பாக உறுப்பினர்களால் ஏற்றப்பட்ட தீபங்களை காலால் தட்டியணைத்த சிங்கள காவல்துறையின் அராஜகமும். ஈழத்தமிழ் மக்களுக்கு தி.மு.கவும் காங்கிரசும் செய்த வரலாற்று துரோகத்திற்கு தக்க தண்டனையை அண்மைய இந்திய தேர்தல்முடிவுகள் பறைசாற்றியுள்ளது.
ஈழத்தமிழருக்காக நீலிக்கண்ணீர் வடித்த கலைஞரும் தமிழின அழிப்பிற்கு சிங்களத்திற்கு துணைபோன காங்கிரசும் எமது தொப்புழ்கொடி உறவுகளான தமிழக மக்களால் தூக்கி எறியப்பட்டுள்ளனர்.
தற்போதைய சிங்கள ஆட்சியாளர்களும் மண்கவ்வும் காலம் வெகுதொலைவில் இல்லை என்பதே நிஜம். காலம் கனிகிறது. மாற்றத்தை எதிர்பார்த்து தைரியத்துடன் இருப்போம்.
தமிழினத்தின் உரிமைக்காய் உயிர்நீத்த அனைவரினதும் ஆத்மா சாந்தியடைய மே 18 ல் பிரார்த்திப்போமாக.