வடக்கில் எந்த பகுதியிலும் இன்றும், நாளையும் ஆலயங்களில் மணி அடித்து ஒலி எழுப்ப தடை விதிக்கப்பட்டுள்ளது.
இராணுவத்தினர் இந்த தடையை விதித்திருப்பதாக வடமாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் நேற்று யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் வைத்து தெரிவித்தார்.
இவ்வாறு மணி ஒலியை ஏற்படுத்துமிடத்து, இராணுவத்தினர் அதற்கு எதிராக நடவடிக்கை எடுப்பதாக எச்சரித்திருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.
எவ்வாறாயினும், இலங்கை இராணுவம் இந்த அளவுக்கு அடக்குமுறையை கையாளுமாக இருந்தால், விரைவில் வடக்கில் உள்ள அனைத்து கோவில்களிலும் ஒரே நேரத்தில் தொடர்ந்து ஒரு மணித்தியாலத்திற்கு ஆலய மணிகளை ஒலிக்க செய்து போராட்டம் நடத்தப்பட வேண்டும் என்றும் சிவாஜிலிங்கம் வலியுறுத்தியுள்ளார்.
குடாநாடு முழுவதும் பதற்றம்: கவச வாகனங்களுடன் படையினர்
இறுதி யுத்தத்தின்போது இறந்தவர்களை யாழ். குடாநாட்டில் அனுஸ்டிப்பதை தடுக்கும் நோக்குடன் குடாநாடு முழுவதும் துப்பாக்கிகளோடு இராணுவத்தினர் நிலை நிறுத்தப்பட்டுள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
நேற்று இரவு முதல் குடாநாட்டில் உள்ள ஆலயங்கள் தேவாலயங்களை சுற்றியும் இராணுவத்தினர் நிலைகொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அதேவேளை போர்க்காலத்தில் நிலைகொண்டிருந்த இராணுவம் போல துப்பாக்கிகளோடும் சட்டி தொப்பிகளுடனும் பவல் கவச வாகனங்களுடனும் நல்லூர் ஆலயத்தின் முன்பாகவும் நிலை கொண்டுள்ளனர்.
வீதியில் நிலை கொண்டுள்ள இராணுவத்தினரால் வீதியில் செல்லும் வாகனங்களின் இலக்கங்களும் பதியப்படுவதுடன் சிலர் மறிக்கப்பட்டு சோதனைக்கும் உட்படுத்தப்படுவதனால் குடா நாடு முழுவதும் பதற்றமான நிலை காணப்படுவதுடன் வீதிகளில் மக்கள் நடமாட்டமும் குறைவாக காணப்படுகின்றது.
முள்ளிவாய்க்கால் நினைவு தினத்தை அனுஸ்டிப்பதற்கு இராணுவத்தினர் தடை விதித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.