வட இலங்கையில் சிங்கள மக்களின் குடிப்பரம்பலை அதிகரிக்கும் நோக்கில் மன்னாரில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட சிங்களக் குடும்பங்களைப் புதிதாகக் குடியேற்றுவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருப்பதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் குற்றஞ்சாட்டியுள்ளார்.
இது குறித்து அவர் திங்களன்று வெளியிட்டுள்ள அறிக்கையொன்றில், மன்னார் மாவட்டம் முசலி பிரதேச செயலர் பிரிவுக்கு உட்பட்ட கொண்டச்சி பாசித்தென்றல் பகுதிகளில் கடற்கரையோரமாக இந்தக் குடும்பங்களுக்கு என வீடுகள் அமைக்கப்பட்டு வருவதாக குறிப்பிட்டிருக்கின்றார்.
இது குறித்து, ஆளும் அரச ஆதரவு கூட்டணியின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும், முசலி பிரதேச அபிவிருத்தி குழுவின் தலைவருமாகிய ஹுனைஸ் பாருக் அவர்களைத் தொடர்பு கொண்டு கேட்டபோது, முசலி பிரதேசத்தில் முன்னர் குடியிருந்தவர்கள் யாராக இருந்தாலும், அவர்கள் இடம்பெயர்ந்திருந்த காலத்தில் வசித்து வந்த பகுதி அரச அதிகாரிகளின் கடிதத்துடன் வருபவர்களை மீள்குடியேற்றம் செய்வது என்ற அபிவிருத்தி குழுவின் முடிவுக்கு அமைவாக இடம்பெற்று வருவதாகக் குறிப்பிட்டார்.
இந்த நிலையில் இந்த நடைமுறைக்கு மாறாக, இந்தப் பிரதேசத்தில் சிங்கள குடும்பங்களைப் புதிதாகக் குடியேற்றுவதற்கான முயற்சிகள் ஒரு வருடத்திற்கு முன்பே மேற்கொள்ளப்பட்டிருந்ததாக தமக்கு முறையிடப்பட்டிருந்ததாகவும், அண்மையில் இந்த நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டிருப்பதாக பல முறைப்பாடுகள் தமக்குக் கிடைத்திருப்பதாகவும் அவர் கூறினார்.
இதனையடுத்து, முசலி பிரதேச அபிவிருத்திக்குழு கூட்டத்தில் ஏகமனதாக எடுக்கப்பட்ட ஒரு தீர்மானத்தில், பிரதேச அபிவிருத்தி குழுவில், ஏற்கனவே மேற்கொள்ளப்பட்டுள்ள முடிவுக்கு அமைவாகவே மீள்குடியேற்ற நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும் என்று அரசாங்க அதிபரைக் கோரியதாகவும், அது குறித்து அவர் உரிய நடவடிக்கை எடுப்பதாகத் தங்களுக்கு உறுதியளித்திருப்பதாகவும் நாடாளுமன்ற உறுபப்பினர் ஹுனைஸ் பாருக் தெரிவித்தார்.
அத்துடன் இந்த விடயம் மீள்குடியேற்ற அமைச்சர் தலைமையிலான மீள்குடியேற்ற குழுவின் கவனத்திற்குக் கொண்டு வரப்பட்டு, மீள்குடியேற்ற விதிமுறைகளுக்கு அமைவாக நடவடிக்கைகளை முன்னெடுக்கும்படி, மன்னார் அரச அதிபருக்கு அறிவிக்குமாறு கோரியிருப்பதாகவும் அவர் கூறினார். -BBC