‘இசைப்பிரியாவுடன் இருப்பது எனது மகள்’ – தந்தை

இந்தப் புகைப்படங்களின் உண்மைதன்மை குறித்து பிபிசியால் முழுவதுமாக சரிபார்க்க முடியவில்லை. 

இந்தப் புகைப்படங்களின் உண்மைத் தன்மை குறித்து பிபிசியால் முழுவதுமாக சரிபார்க்க முடியவில்லை.

 

விடுதலைப்புலிகளின் தொலைக்காட்சி அறிவிப்பாளராக இருந்த இசைப்பிரியா இராணுவ காப்பரண் ஒன்றிற்குள் ஒன்றிற்குள் இருப்பது போன்று ஊடகங்களில் வெளியாகியுள்ள புகைப்படத்தில் அவருடன் இருப்பவர் மல்லாவி யோகபுரம் கிழக்கைச் சேர்ந்த குணலிங்கம் உஷாளினி என அவருடைய குடும்பத்தினர் கூறியிருக்கின்றனர்.

இணைய தளங்களிலும் பின்னர் உள்ளுர் பத்திரிகைகளிலும் வெளியாகியுள்ள இந்தப் படத்தைப் பார்த்ததும், இசைப்பிரியாவுடன் இருப்பவர் தனது மகள் என்று அடையாளம் கண்டுள்ளதாக அவருடைய தந்தையார் தெரிவித்துள்ளார். (இந்தப் புகைப்படங்களின் உண்மைத் தன்மை குறித்து பிபிசியால் முழுவதுமாக சரிபார்க்க முடியவில்லை.)

கடந்த 2008 ஆம் ஆண்டு வீட்டுக்கு ஒருவர் போராட்டத்தில் இணைய வேண்டும் என்று விடுதலைப்புலிகள் தெரிவித்திருந்த நேரம் தமது மூத்த மகளாகிய உஷாளினியை அவர்கள் பிடித்துச் சென்றிருந்ததாகவும், யுத்தம் தீவிரமடைந்து தாங்கள் இடம்பெயர்ந்து, முள்ளிவாய்க்காலுக்குச் சென்றிருந்தபோது ஒருநாள் தமது மகளைக் கண்டதாகவும் அவர் கூறியுள்ளார்.

அப்போது அவரைத் தம்முடன் வருமாறு கேட்டதற்கு அவர் வரவில்லை என்றும் அதன்பின்னர் யுத்தம் முடிவடைந்து தாங்கள் இடம்பெயர்ந்து செட்டிகுளம் மனிக்பாம் இடைத்தங்கல் முகாமுக்கு வந்திருந்த போது தமது மகளைத் தேடியபோதிலும் அவர் கிடைக்காத காரணத்தினால் சர்வதேச செஞ்சிலுவைக் குழுவிடமும், மற்றும் மனித உரிமைகள் ஆணைக்குழுவிடமும் அவரைத் தேடிக் கண்டுபிடித்துத் தருமாறு கோரி முறையிட்டிருந்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

அண்மையில் கிளிநொச்சி மாவட்டத்தில் காணாமல் போயுள்ளவர்கள் தொடர்பில் விசாரணை நடத்திய ஜனாதிபதி ஆணைக்குழுவிலும் காணாமல் போயுள்ள தனது மகளைத் தேடித்தருமாறு தாங்கள் கோரியிருந்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

ஆயினும் தமது மகள் பற்றிய தகவல்கள் எதுவும் தெரியாத நிலையில் சில தினங்களுக்கு முன்னர் உள்ளுர் பத்திரிகையொன்றில் இசைப்பிரியாவுடன் காப்பரண் ஒன்றினுள் தனது மகள் இருப்பதைக் கண்டதாகவும் அவர் தெரிவித்தார்.

இது தொடர்பில் ஜனாதிபதி ஆணைக்குழுவில் சாட்சியமளிப்பதற்கான ஏற்பாடுகளைச் செய்து உதவிய மன்னார் பிரஜைகள் குழுவினரிடம் முறையிடவுள்ளதாகவும் உஷாளினியின் தந்தையார் குணலிங்கம் தெரிவித்துள்ளார்.

இசைப்பிரியா இராணுவத்தின் பிடியில் இருந்தார் என்றும் பின்னர் அவர் இறந்து கிடந்தார் என்றும் காணொளிகள் வெளிவந்து பரபரப்பை ஏற்படுத்தியிருந்தன.

இந்த நிலையில் இப்போது அவர் இராணுவ பங்கர் ஒன்றுக்குள் உயிருடன் இருப்பது போன்ற புகைப்படம் வெளியாகி மேலும் பரபரப்பை அதிகரித்துள்ளது.

இந்த தகவல்கள் குறித்து இலங்கை இராணுவத்தின் சார்பில் பேசவல்ல ருவான் வணிகசூரிய அவர்களிடம் கேட்டபோது, இப்படியான படங்கள் குறித்து எழுந்தமானமாக எதுவும் கூறமுடியாது என்றும், அவை குறித்து ஆராயும் குழு அவற்றை முழுமையாக ஆராய்ந்தபின்னரே அவை குறித்து கூறமுடியும் என்றும் தெரிவித்துள்ளார். -BBC

TAGS: