இலங்கை அரசாங்கம் நினைப்பது போல இந்திய புதிய பிரதமராக பதவியேற்கவுள்ள நரேந்திர மோடி, மகிந்த ராஜபக்சவின் அரசாங்கத்துக்கு விசுவாசமானவராக இருக்கமாட்டார் என்று ஐக்கிய தேசியக்கட்சி தரப்பு தெரிவித்துள்ளது.
2003 ம் ஆண்டு நரேந்திர மோடி குஜராத் மாநில முதல்வராக இருந்தபோது அவரை சந்தித்த அப்போதைய பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, நரேந்திர மோடி, இந்திய தேசிய அரசியலில் பிரவேசிக்கவேண்டும் என்று யோசனை வெளியிட்டிருந்தார்.
அதன் பின்னரே மோடி தேசிய அரசியல் குறித்து கவனம் செலுத்தினார். இதனை அண்மையில் அவர் நினைவுப்படுத்தியிருந்தார்.
இந்தநிலையில் மோடி, இலங்கையில் ஐக்கிய தேசியக் கட்சி ஆட்சி வருவதையே விரும்புவதாக ஐக்கிய தேசியக் கட்சி தரப்புக்கள் கூறுகின்றன.
தற்போதைய இலங்கை அரசாங்கம்ää சீனா மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகளுக்கு முன்னுரிமை வழங்கிவருகிறது.
இதன் காரணமாக பிராந்தியத்தில் பாதுகாப்பு பிரச்சினை ஏற்படுவதாக அமெரிக்கா உணர்கிறது.
ஏற்கனவே சீனா, அமெரிக்காவின் பொருளாதாரத்துக்கு நிகராக வந்து கொண்டிருப்பதை அமெரிக்காவினால் நேரடியாக கட்டுப்படுத்த முடியவில்லை.
ஏனெனில் அமெரிக்காவிலும் சீனாவின் அதிக முதலீடுகள் உள்ளன.
எனவே சீனா மற்றும் பாகிஸ்தான் ஆகியவற்றுக்கு எதிராக இந்தியாவை வல்லரசாக உருவாக்க அமெரிக்கா முனைகிறது.
மறுபுறத்தில் இந்தியாவைக் கொண்டே ரஷ்யாவையும் கட்டுப்படுத்தி விடலாம் என்பது அமெரிக்காவின் நினைப்பாக உள்ளது.
இதற்காக முன்னாள் காங்கிரஸ் அரசாங்கத்தை விட மோடியின் அரசாங்கமே பிரயோசனமான செயற்பாட்டை மேற்கொள்ள முடியும் என்று அமெரிக்கா நம்புகிறது.
இந்தநிலையில் இலங்கையில் ராஜபக்ச அரசாங்கம் இருப்பதை விட ரணில் அரசாங்கம் இருப்பதையே மெரிக்கா விரும்புகிறது.
இதற்காகவே மெரிக்கா தற்போது முனைப்புக்களிலும் ஈடுபட்டு வருகிறது.
இதன் ஒரு கட்டமாக அடுத்து வரும் ஜனாதிபதி தேர்தலை அமெரிக்கா பரீட்சைக் களமாக பயன்படுத்த முனைவதாக ஐக்கிய தேசியக் கட்சி தரப்பு கூறுகிறது.
இதனைக் கருத்திற்கொண்டே இலங்கையின் மஹிந்த அரசாங்கம் முந்திக்கொண்டு மோடியின் அரசாங்கத்துடன் நல்லுறவை ஏற்படுத்த முனைகிறது.
எனினும் தமிழகத்தில் மாநில வல்லரசாக மாறியுள்ள ஜெயலலிதாவினால் மஹிந்தவின் முயற்சி தோல்வி காணச் செய்யப்படும் என்றும் ஐக்கிய தேசியக் கட்சி எதிர்வு கூறியுள்ளது.
காங்கிரஸ் அரசாங்கம், சீனா மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகள் இலங்கையுடன் நெருங்கிச் செல்வதை தடுத்திருக்க முடியும்.
எனினும் தமது கணவரை கொன்ற விடுதலைப் புலிகளையும் அதன் தலைவரையும் அழிப்பது மாத்திரமே சோனியா காந்தியின் நோக்கமாக இருந்தமையால், இலங்கையை காங்கிரஸ் அரசினால் கட்டுப்படுத்த முடியவில்லை என்றும் ஐக்கிய தேசியக் கட்சி தரப்பு கூறியுள்ளது.