முதலமைச்சர் போல் நடத்தாத அரசாங்கத்துக்கு விக்­­னேஸ்­வ­ரனை அழைக்க அரு­கதை இல்லை!- இரா.சம்­பந்தன்

vikneswaran-with-Sambanthanவடமாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரனை முதலமைச்சர் போல் அரசாங்கம் நடத்தவில்லை. இந்தநிலையில் இந்தியாவிற்கு வருமாறு முதலமைச்சருக்கு அழைப்பு விடுக்க ஜனாதிபதிக்கோ, அரசுக்கோ எந்தவித உரிமையோ, அருகதையோ இல்லை. என்று தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் பா.உ. தெரிவித்தார்.

இந்தியாவின் புதிய பிரதமராக நரேந்திர மோடி திங்களன்று பதவியேற்க உள்ளார். இந்தப் பதவியேற்பு நிகழ்வில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான தூதுக்குழு பங்கேற்கவுள்ளது. இந்தக் குழுவில் வடமாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரனும் இணைந்து கொள்ள வேண்டுமென்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நேற்று அழைப்பு விடுத்திருந்தார்.

இந்த அழைப்பு குறித்து வினவிய போதே சம்பந்தன் எம்.பி. இவ்வாறு விசனம் தெரிவித்தார். இது குறித்து அவர் மேலும் தெரிவித்ததாவது:-

ஜனாதிபதியின் அழைப்பு குறித்த முடிவினை முதலமைச்சர் விக்னேஸ்வரனே எடுக்கவேண்டும். மக்களால் மக்களின் பெரும்பான்மை பலத்துடன் ஆட்சிக்கு வந்த முதலமைச்சர் விக்னேஸ்வரன் கடந்த 7 மாதகாலமாக மாகாணத்தின் முதன்மை செயலாளர் ஒருவரை நியமிக்க முடியாது இருக்கின்றார்.

இந்த நிலையில் எவ்வாறு அவர் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தலைமையிலான தூதுக்குழுவில் இணைந்து இந்தியாவிற்கு செல்ல முடியும். மக்களின் பெரும்பான்மை வாக்குக்களைப் பெற்று பேராதரவு பெற்ற விக்னேஸ்வரனை அரசாங்கம் முதலமைச்சர் மாதிரி நடத்தவில்லை. இந்த நிலையில் அரசாங்கக் குழுவில் இடம் பெறுமாறு கோருவதற்கு ஜனாதிபதிக்கோ, அரசாங்கத்திற்கோ எந்தவித உரிமையோ அல்லது அருகதையோ இல்லை.

தமிழ் மக்களின் மிகவும் கூடுதலான பெரும்பான்மை வாக்குக்களைப் பெற்ற முதலமைச்சரை ஜனாதிபதி நீதிக்குப் புறம்பாக உதாசீனப்படுத்தியுள்ளார். மாகாணத்தின் பிரதம செயலாளரை சட்டத்தின் படி முதலமைச்சருடன் ஆலோசனை நடத்தியே நியமிக்கவேண்டும். ஆனால் அவ்வாறு நடத்தாது ஜனாதிபதி முதலமைச்சரை உதாசீனம் செய்துள்ளார். சட்டத்திற்கு இணங்க பிரதம செயலாளரை நியமிக்க முடியாது 6 மாதங்களாக முதலமைச்சர் விக்னேஸ்வரன் தவித்து வருகின்றார்.

மாகாணத்தின் பிரதம செயலாளர் அரசாங்கத்தின் உதவியுடன் முதலமைச்சருக்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்துள்ளார். இதற்கெல்லாம் அரசாங்கமே ஒத்துழைப்பு வழங்குகின்றது. இந்த நிலையில் எப்படி நாம் ஜனாதிபதியின் குழுவில் இணைந்து இந்தியா செல்ல முடியும்.

முதலமைச்சர் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச முன்னிலைலேயே பதவியேற்றிருந்தார். அவரை சந்தித்து நேரில் பிரதம செயலாளர் நியமனம் தொடர்பில் அவர் பேச்சு நடத்தியிருந்தார். அவருக்கு வாக்குறுதிகளும் வழங்கப்பட்டிருந்தன. ஆனால் அவை எதுவும் நிறைவேற்றப்படவில்லை.

இந்த நிலையில் எந்த அடிப்படையில் முதலமைச்சரை தமது குழுவில் பங்கேற்குமாறு ஜனாதிபதி அழைக்க முடியும். இந்த விடயத்தில் விக்னேஸ்வரனுக்கு புத்திமதி கூற நான் முனையவில்லை. அது குறித்து அவரே தீர்மானிக்கவேண்டும். ஆனாலும், முதலமைச்சருக்கு அரசாங்கம் எந்த அடிப்படையில் அழைப்பை விடுக்கின்றது என்று எனக்கு விளங்கவில்லை.

தமிழ் மக்களுக்கும் தமக்குமிடையில் பிரச்சினை எதுவும் இல்லையெனக் காண்பிப்பதற்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச முனைகின்றார்.

பாரத தேசத்துடனோ, அல்லது பாரத பிரமருடனோ, பாரத மக்களுடனோ எங்களுக்கு எந்தவித பிரச்சினையும் இல்லை. ஜனாதிபதி தலைமையிலான குழுவினருடன் இந்தியாவிற்கு செல்வதே எமக்குள்ள பிரச்சினையாகும். என்றார்.

TAGS: