புலிகளை கொன்றமைக்கு பழி தீர்க்கவே நவநீதம்பிள்ளை அவசரப்படுகின்றார். நவநீதம்பிள்ளை முதற்கொண்டு ஜெயலலிதா வரையிலும் இலங்கையில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் அனைவரும் புலிகளினால் வழிநடத்தப்பட்டு வருபவர்களின் கைப்பொம்மைகள். என்று ஜாதிக ஹெல உறுமய கட்சி உறுப்பினர் உதய கம்மன்பில தெரிவித்தார்.
இலங்கை தொடர்பில் சர்வதேச விசாரணையினை நடத்த ஐ.நா. ஆணையாளர் நவநீதம்பிள்ளை தீவிரம் காட்டுவது தொடர்பில் வினவிய போதே அவர் மேற்கண்டவாறு கருத்துத் தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் குறிப்பிடுகையில்,
இலங்கையில் போர்க்கால சூழலில் சர்வதேச நாடுகளின் ஆதரவும் உதவிகளும் எமக்குக் கிடைத்தது. அப்போது சர்வதேசத்திற்கு விடுதலைப் புலிகள் அமைப்பு பயங்கரவாதிகளாகவே தெரிந்தனர். அனைத்து நாடுகளிலும் தமிழீழ விடுதலைப் புலிகளை தடை செய்யப்பட்ட இயக்கமாகவும் சர்வதேச அளவில் தேடப்படும் இயக்கமாகவும் காணப்பட்டது. எனினும், யுத்தத்தின் பின்னர் விடுதலைப் புலிகள் இயக்கம் நல்லதொரு இயக்கமாகவும் அவர்களின் ஆயுதப் போராட்டம் நியாயமான ஒன்றெனவும் வலியுறுத்த ஆரம்பித்து விட்டனர்.
இன்று இலங்கைக்கு எதிராக விசாரணையினை கொண்டுவர முயற்சிக்கும் அனைவரும் விடுதலைப் புலிகள் இயக்கத்தின் ஆதரவாளர்களென்பது உண்மை. நவநீதம்பிள்ளை முதற்கொண்டு ஜெயலலிதா வரையிலும் இலங்கையில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் அனைவரும் விடுதலைப் புலிகளினால் வழிநடத்தப்பட்டு வருபவர்களின் கைப்பொம்மைகள். தீவிரவாதிகளின் கறுப்புப்பணம் இவர்களிடம் குவிகின்றதன் காரணத்தினாலேயே தமிழர் பிரச்சினை எனும் பெயரில் செயற்பட்டுக் கொண்டிருக்கின்றனர்.
கொல்லப்பட்ட தமிழீழ விடுதலைப் புலிகளை பொதுமக்கள் என பொய்யான அறிக்கையினைத் தயாரித்து நாட்டையும் சிங்கள மக்களையும் பழிவாங்கும் நோக்கத்திலேயே மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளை வேகமாக செயற்பட்டுக் கொண்டிருக்கின்றார்.
இலங்கைக்கு எதிரான சர்வதேச விசாரணையொன்று இடம்பெற்று இறுதியில் மீண்டுமொரு ஆயுதப்போராட்டம் ஏற்படும் நிலைமையை உருவாக்க முயற்சிகள் எடுக்கப்படுகின்றன. அதில் சர்வதேசம் வெற்றி காண ஒருபோதும் இடமளிக்கக்கூடாது.
மேலும், இலங்கையில் தமிழ் மக்களை துரும்புச் சீட்டாகப் பயன்படுத்தி சர்வதேச நாடுகளிடம் பொய்யான கருத்துகளைப் பரப்பி, அறிக்கையினை சமர்ப்பித்து இலங்கைக்கு எதிரான சர்வதேச குழுவொன்றினை அமைக்கும் முயற்சியினை தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் மேற்கொண்டு வருகின்றனர்.
மேற்கத்தேய நாடுகள் – இந்தியா மற்றும் தென்னாபிரிக்காவின் பலமும் உதவியும் தமக்குள்ளதென்ற நம்பிக்கையில் கூட்டமைப்பினர் செயற்பட்டுக் கொண்டிருக்கின்றனர். இந்தியத் தேர்தலில் ஆட்சி மாற்றம், ஜெயலலிதாவின் பெரும்பான்மை வெற்றி என்பன ஒருபோதும் கூட்டமைப்பிற்கு சாதகமாக அமையப் போவதில்லை. பகற் கனவினைக் கண்டு கூட்டமைப்பினர் காலத்தைக் கடத்துவதும் வடக்கில் பிரிவினையினை தூண்டும் முயற்சிகளை மேற்கொண்டு வருவதும் வெகு விரைவில் முடிவுக்கு கொண்டு வரப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.