தமிழினத்தின் தலைவிதியைத் தொடர்ந்தும் தவறாகவே எழுத முயலும் இந்திய ஆட்சியாளர்கள்!

mullivaikkal-300x173ஈழத் தமிழர்கள்மீதான இன அழிப்பிற்குப் பின்புலமாக அனைத்து வளங்களையும் அள்ளி வழங்கிய காங்கிரஸ் கட்சியின் அதே நியாயப்பட்டை தற்போது ஆட்சியில் ஏறவுள்ள பாரதிய ஜனதா கட்சியும் புதுப்பித்துள்ளது. சிறிலங்கா அரசுடன் நட்புறவுடன் நடந்து கொள்ளாவிட்டால், இலங்கையிலுள்ள தமிழர்களை யார் பாதுகாப்பது?என்று பாரதிய ஜனதா கட்சியின் கல்யாணராமன் தெரிவித்துள்ளார்.

நரேந்திரமோடி அவர்களது பதவி ஏற்பு விழாவில் கலந்துகொள்ள சிறிலங்காவின் அதிபர் ராஜபக்சேவுக்கு அழைப்பு விடுவித்தது தொடர்பாக நடைபெற்ற தொலைக்காட்சி விவாதம் ஒன்றில் கலந்துகொண்டபோதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். அதற்கும் மேலாக, அவர் தெரிவித்த கருத்து ஒன்று ஈழத் தமிழர்களது தலைவிதியை நிர்ணயிப்பதாக அமைந்திருந்தது.

«தமிழ் மக்களுக்கான முதல்வராகப் பதவி வகிக்கும் விக்னேஸ்வரன் அவர்கள் இது குறித்து எதுவும் தெரிவிக்காத நிலையில் தமிழகத் தலைவர்கள் இது குறித்துப் பேசக் கூடாது» என்ற கருத்தையும் பாஜக கல்யாணராமன் முன்வைத்திருந்தார்.

mullivaikkal

கடந்த ஆட்சிக் காலத்தில், காங்கிரஸ் கட்சி இப்படியான கருத்துக்களை முன் வைத்து, தமிழகத் தலைவர்களை வாயடைக்கச் செய்யும் முயற்சியில் ஈடுபட்ட போதும் விக்னேஸ்வரன் அதை மறுக்கவில்லை. மாறாக, «எமது பிரச்சினைகளில் தமிழகத் தலைவர்கள் தலையிடுவதைத் தவிர்த்துக் கொள்ள வேண்டும். கணவன் மனைவி பிரச்சினைக்குள் மூன்றாவது நபர் தலையிடக் கூடாது» என்ற பொன் மொழிகளையும் கூறி வைத்தார்.

காங்கிரஸ் ஆட்சி போய், பாரதிய ஜனதா கட்சி ஆட்சிக்கு வந்த நிலையிலாவது தமக்கு நல்லது நடக்காதா? என்று தமிழீழ மக்கள் ஏங்கி எதிர்பார்த்து நிற்கையில் மோடியின் அழைப்பு விவகாரம் தமிழகத்தின் பெரும் அதிர்ச்சியையும் ஆத்திரத்தையும் உருவாக்கியுள்ளது. மோடியின் தலைமையிலான ஆட்சியே அமையவேண்டும் என்று, முதல் ஆளாக தமிழகத்தில் பாஜக கட்சியுடன் கூட்டுச் சேர்ந்து, அதற்காகப் பாடுபட்ட மதிமுக செயலாளர் வைகோ அவர்கள் நரேந்திரமோடி அவர்களது பதவி ஏற்பு விழாவில் சிங்கள அதிபர் ராஜபக்சே கலந்து கொள்ளக் கூடாது என்று கோரிக்கை விட்டுள்ளார்.

தமிழக முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா அவர்கள், «புதிதாக மத்தியில் அமையவிருக்கும் அரசு, தமிழர்கள் தொடர்பான பிரச்சனைகளில் பரிவுடன் செயல்படுமென்றும், தமிழ்நாட்டுடன் நட்புணர்வு பாராட்டும் என்றும் நாங்கள் நம்பினோம். ஆனால், புதிய பிரதமரும், புதிய மத்திய அரசும் பதவியேற்று செயல்படத் தொடங்குவதற்கு முன்னரே, இந்தியப் பிரதமரின் பதவியேற்பு விழாவில் கலந்து கொள்வதற்காக இலங்கை அதிபருக்கு அழைப்பு விடுத்திருக்கிற இந்த துர்ப்பாக்கியமான செயல் தமிழ்நாட்டு மக்களை மிகவும் வருத்தமடையச் செய்துள்ளதோடு மட்டுமல்லாமல், அவர்களுடைய உணர்வுகளை மீண்டும் காயப்படுத்தியுள்ளது. இந்தச் செயல் வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது போல் அமைந்துள்ளது» என்று தனது கண்டனத்தைப் பதிவு செய்துள்ளார்.

இந்தத் தொலைக்காட்சி விவாதத்தில், தொலைபேசி மூலம் தொடர்புகொண்டு, தமிழீழ மக்கள் சார்பில் அதிருப்தியினைத் தெரிவித்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரன் அவர்களது கருத்துக்களும் பாஜகவின் கல்யாணராமனால் ஏளனப்படுத்தப்பட்டது. «சிறிலங்கா பாராளுமன்றத்தில் பதவி சுகம் அனுபவித்துக்கொண்டு, சிறீதரன் போன்றவர்கள், ராஜபக்சேவுக்கு அழைப்பு விடுத்ததனால், எங்களது மனங்கள் எல்லாம் புண் படுகின்றது என்று சொல்லக் கூடாது» என்று வக்கிரமான தனது கருத்தையும் பதிவு செய்திருந்தார்.

சிங்கள ஆட்சியாளர்களைப் போர்க் குற்றச்சாட்டிலிருந்து காப்பாற்றவும், தமிழீழ மக்களினதும், தமிழ்த் தேசிய உணர்வாளர்களினதும் தமிழீழம் குறித்த தீர்மானங்களை மலினப்படுத்துவதற்கான சரியான தெரிவாகவே முன்னைய காங்கிரஸ் ஆட்சியாளர்கள் வட மாகாண முதல்வர் விக்னேஸ்வரன் அவர்களைக் கையாண்டார்கள். அதனையே பாஜக ஆட்சியாளர்களும் தொடர்வதற்கு முயற்சி செய்கின்றனர். அதற்கான கருவியாகவே விக்னேஸ்வரன் அவர்களும் செய்ல்படுகின்றார்.

தமிழீழ மக்களது விருப்பங்களையும், எதிர்பார்ப்புக்களையும் திரு. விக்னேஸ்வரன் அவர்களது மௌனத்தினூடாகவே தகர்க்க முடியும் என்ற காங்கிரஸ் அணுகுமுறையை பாஜகவும் கையில் எடுத்துள்ளது

ஒரு தலைவனின் நடத்தையும், செயற்பாடும், வார்த்தைகளும் அவனது மக்களது எண்ணங்களைப் பிரதிபலிப்பதாகவே இருக்க வேண்டும். ஒரு தலைவன் ஊடாகவே, உலகம் அவனது மக்களைக் காண்கின்றது. அந்தப் பண்பை விக்னேஸ்வரன் அவர்கள் தனது மக்களுக்கு வழங்க வேண்டும். அவர்களது எண்ணங்களை சிங்களத்தின் அடக்குமுறைகளையும், அராஜகங்களையும் தாண்டி உலகப் பரப்பிற்குக் கொண்டு போகவேண்டும்.

விக்னேஸ்வரன் அவர்களது மௌனத்தைக் காட்டியே, தமிழினத்தின் தலைவிதியைத் தவறாக எழுத முயலும் இந்திய ஆட்சியாளர்களது கபடத் தனத்தை இதற்கு மேலும், வட மாகாண முதல்வர் அனுமதிக்கக் கூடாது. அனுமதிக்க முடியாது!

– சுவிசிலிருந்து கதிரவன்

TAGS: