வடக்கில் பெண்களுக்கு எதிரான வன்முறைகளை, குறிப்பாக பெண்களின் கழுத்தை அறுத்தும் வாளால் வெட்டியும் கொலை செய்யும் கொடூரங்களுக்கு முடிவு கட்ட வேண்டும் என்றுகோரி மன்னார் நானாட்டான் பிரதேசத்தில் கவனயீர்ப்புப் போராட்டம் ஒன்று நடந்துள்ளது.
நானாட்டான் பிரதேச செயலகத்திற்கு முன்னால் நடந்த கவனயீர்ப்புப் போராட்டத்தைத் தொடர்ந்து நானாட்டான் கடைவீதி வரையில் கண்டனப் பேரணி ஒன்றும் இன்று திங்கட்கிழமை நடத்தப்பட்டது.
மன்னார் மாதர் அபிவிருத்தி ஒன்றியம் இதற்கான அழைப்பை விடுத்திருந்தது.
அண்மையில் யாழ்ப்பாணத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இரண்டு பெண்கள் உட்பட மூவர் வாளால் வெட்டிக் கொலை செய்யப்பட்டிருந்தார்கள்.
முல்லைத்தீவு மாவட்டத்தில் இரண்டு குழந்தைகளின் தாயான இளம் பெண் ஒருவர் அவருடைய கணவனால் கழுத்தை அறுத்து கொல்லப்பட்டதாகத் தகவல் வெளியாகியிருந்தது.
இதேபோன்று மன்னார் நானாட்டான் கறுக்காமுறிப்பு பகுதியிலும் ஒரு குழந்தையின் தாயான மனைவியை கணவன் கழுத்தை அறுத்து கொன்றுள்ள சம்பவமும் நடந்துள்ளது.
‘இந்தச் சம்பவங்களுக்குக் குடும்பப் பிரச்சனைகளே காரணமாக இருந்திருக்கின்றது. எனினும் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதற்கு கொலை செய்வதுதான் வழியென்ற ஒரு மோசமான போக்கு அதிகரித்துவருகின்றமை கவலைக்குரியது’ என்றார் மன்னார் மாதர் அபிவிருத்தி ஒன்றியத்தின் இணைப்பாளர் மகாலட்சுமி குருசாந்தன்.
பெண்களுக்கு எதிரான இத்தகைய கொடூரங்கள் உடனடியாகத் தடுத்து நிறுத்தப்பட வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.
பெண்களுக்கு எதிரான குடும்ப வன்முறைகளைக் கட்டுப்படுத்தி, குடும்பங்களில் அமைதியும் மகிழ்ச்சியும் நிலவக்கூடிய சூழ்நிலையை உருவாக்குவதற்கான விழிப்புணர்வு நடவடிக்கைகளில் தமது ஒன்றியம் ஈடுபட்டிருப்பதாக அவர் குறிப்பிட்டார்
‘பெண்கள் சமூகத்தில் பிரிக்கமுடியாத முக்கிய பங்காளிகளாவர். அவர்களை வன்முறைகளின் ஊடாக அடக்கி ஒடுக்குவதையும், துன்புறுத்துவதையும், கொலை செய்வதையும் அனுமதிக்க முடியாது’ என்றும் மகாலட்சுமி கூறினார்.
பெண்களை வாளால் வெட்டியும், கழுத்தை அறுத்தும் கொன்றுள்ள சம்பவங்கள் தொடர்பாக சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டு சட்ட நடவடிக்கைக்கு உட்படுத்தப்பட்டுள்ள போதிலும் சட்டநடவடிக்கைகளில் தாமதம் நிலவுவதாகவும் பெண்கள் அமைப்புக்களைச் சேர்ந்த பலரும் அச்சம் வெளியிட்டிருக்கின்றனர். -BBC