‘மக்களைக் கொல்ல ஆணையிட்டவர்களுக்கு தூதரக பதவி’

weliweriyaAஇலங்கையில் அரசாங்கத்திடம் கோரிக்கைகளை முன்வைத்து போராட்டம் நடத்தும் மக்களைக் கொல்வதற்கு ஆணைவழங்கிய இராணுவ அதிகாரிகளை அரசாங்கம் வெளிநாட்டுத் தூதுவர்கள் உள்ளிட்ட பல்வேறு முக்கிய பதவிகளை வழங்கி ஊக்குவிப்பதாக ஐக்கிய தேசியக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் குற்றம்சாட்டியுள்ளார்.

தலைநகர் கொழும்புக்கு அருகே கம்பஹா மாட்டத்தில் வெலிவேரிய பிரதேசத்தில் சுத்தமான குடிநீர் கேட்டுப் போராட்டம் நடத்திய பொதுமக்களின் மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டதில் இரண்டு பேரும், தடிகளால் கடுமையாகத் தாக்கியதில் இன்னொருவரும் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் கொல்லப்பட்டனர்.

இந்த சம்பவத்தில் மேலும் 37 கிராமவாசிகளும் காயமடைந்தனர்.

இந்த சம்பவங்களுடன் தொடர்புடைய இராணுவ உயரதிகாரியான பிரிகேடியர் தேஷப்பிரிய குணவர்தன துருக்கிக்கான இலங்கைத் தூதரக பதவி ஒன்றுக்கு நியமிக்கப்பட்டு அனுப்பப்பட்டுள்ளார்.

‘எங்களைக் கொல்ல ஆணை வழங்கியவர்கள், தண்ணீர் கேட்ட எங்களைக் கொல்ல ஆணைவழங்கியவர்கள் இன்று பதவிகளை பெறுகின்றனர். தூதுவர்களாக நியமனம் பெறுகின்றனர்’ என்று ஐக்கிய தேசியக் கட்சியின் இரத்தினபுரி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க பிபிசியிடம் தெரிவித்தார்.

வெலிவேரிய சம்பவம் தொடர்பான விசாரணை அறிக்கை இதுவரை வெளியாகவில்லை என்பதை சுட்டிக்காட்டிய ரஞ்சன் ராமநாயக்க, வெலிவேரியவில் பலியான பொதுமக்கள் தம்மைத் தாமே சுட்டுக்கொண்டு பலியானார்கள் என்று அறிக்கை வந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை என்றும் கூறினார்.

2012-ம் ஆண்டில், வெலிக்கடை சிறைச்சாலைக்குள் 27 கைதிகள் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் அறிக்கை வெளியிட்ட அரசாங்கம், கைதிகள் தம்மைத் தாமே சுட்டுக் கொண்டதாக கூறியிருந்ததை ஐக்கிய தேசியக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் நினைவுகூர்ந்தார்.

இறுதிக்கட்ட யுத்த திறமைகளுக்கான பரிசு

58-ம் படைப்பிரிவின் தளபதியாக இருந்த ஷவேந்திர சில்வா, போரின் பின்னர் ஐநாவுக்கான பிரதிநிதியாக நியமிக்கப்பட்டமையும் பலத்த விமர்சனங்களை ஏற்படுத்தியிருந்தது.

 

வெலிவேரிய சம்பவத்தின்போது இராணுவத்திற்கு ஆணை வழங்கிய பிரிகேடியர் தேஷப்பிரிய குணவர்தனவை, அவரது 142வது படையணியின் தளபதி பொறுப்பிலிருந்து இராணுவத் தலைமைப் பீடம் அண்மையில் நீக்கியிருந்தது.

எனினும் அந்த சம்பவம் தொடர்பான விசாரணைகள் முடியமுன்னமே, அவரை வெளிநாட்டுத் தூதரக பதவிக்கு அரசாங்கம் நியமித்துள்ளமை பற்றி பிபிசி இலங்கை இராணுவப் பேச்சாளரிடம் கேள்வி எழுப்பியது.

வெலிவேரிய சம்பவம் தொடர்பில் இராணுவ நீதிமன்றம் நடத்திய ஆரம்பகட்ட விசாரணைகளுக்குப் பின்னர் நடந்த அடுத்த கட்ட விசாரணைகளுக்கு பாதிப்பு ஏற்படாத வகையிலேயே பிரிகேடியர் தேஷப்பிரிய அவரது பொறுப்பிலிருந்து நீக்கப்பட்டிருந்ததாக இராணுவப் பேச்சாளர் பிரிகேடிய ருவன் வணிகசூரிய பிபிசியிடம் தெரிவித்தார்.

இறுதிக்கட்டப் போரின்போது பிரிகேடியர் தேஷப்பிரிய குணவர்தன வெளிப்படுத்திய திறமைகளுக்குப் பரிசாகவே அவருக்கு இந்த தூதரக பதவி அளிக்கப்பட்டுள்ளதாகவும் வெலிவேரிய சம்பவத்துடன் அதற்கு எந்தவிதமான தொடர்பும் இல்லை என்றும் ருவன் வணிகசூரிய கூறினார்.

இதேவேளை, இலங்கையின் இறுதிக்கட்டப் போரின்போது இடம்பெற்றதாகக் கூறப்படும் போர்க்குற்றங்களுடன் தொடர்புடைய இராணுவ உயர் அதிகாரிகளுக்கு வழக்கு நடவடிக்கைகளிலிருந்து பாதுகாப்பு அளிக்கும் முயற்சியாகவே அரசாங்கம் வெளிநாட்டு இராஜதந்திரப் பதவிகளை அளித்துவருவதாக சர்வதேச மனித உரிமை அமைப்புகள் ஏற்கனவே குற்றச்சாட்டுக்களை முன்வைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது. -BBC

TAGS: