‘‘இந்தியாவும் ஈழத்தமிழரும்” -அவலங்களின் அத்தியாயங்கள்!- நிராஜ் டேவிட்

p15a-001ஈழப் போராட்டம் இலங்கையில் நடந்தாலும், இந்தியாவின் கால் நூற்றாண்டு கால அரசியலைப் பாதித்த போராட்டம்.

இந்திய அமைதிப்படையை அனுப்பி 1987-ம் ஆண்டு விடுதலைப் புலிகளோடு யுத்தம் தொடங்கியது முதல் 2009-ம் ஆண்டு முள்ளிவாய்க்கால் கோரக் கொலைக்கு இராணுவரீதியாக உதவிகள் செய்தது வரை இந்தியாவை ஆண்ட காங்கிரஸ் அரசு எடுத்த அனைத்து நடவடிக்கைகளும் கடுமையான விமர்சனத்துக்கு உரியவை.

சிங்கள அரசின் இரவல் துப்பாக்கியாக காங்கிரஸ் அரசு மாறிவிட்டது என்று ஈழத்தமிழர்களும் புலம்பெயர்ந்த தமிழர்களும் இன்றுவரை குற்றச்சாட்டாக வைத்துவரும் நிலையில், ‘இந்தியாவும் ஈழத்தமிழரும்’ என்ற வரலாற்று ஆவணம் புத்தகமாக வந்துள்ளது.

ஈழத்தமிழர் பிரச்னைக்குள் அனுசரணையாளனாக நுழைந்து ஆக்கிரமிப்பாளனாக இந்திய அமைதிப்படை மாறிய காலகட்டத்தில் நடந்த அனைத்தையும் நம்முன் காட்டும் இந்தப் புத்தகத்தை பத்திரிகையாளர் நிராஜ் டேவிட் எழுதியிருகிறார்.

பிறப்பால் ஈழத்தமிழர். அங்கு உண்மையை எழுதியதால் விரட்டப்பட்டு, இப்போது சுவிட்சர்லாந்து நாட்டில் அடைக்கலம் பெற்று வாழ்பவர். அரசியலை ஆய்வுரீதியாகவும், போரை இராணுவ ரீதியாகவும் எழுதக் கூடிய கூர்மையான எழுத்தாளர்.

விடுதலைப் புலிகளுக்கு எதிராக அதாவது, ஈழத்தமிழர்க்கு எதிராக காங்கிரஸ் அரசு மோசமான இராணுவ நடவடிக்கை எடுத்த 1987-ம் ஆண்டு அக்டோபர் 10-ம் தேதியில் இருந்து இந்தப் புத்தகம் ஆரம்பம் ஆகிறது.

விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் தலைக்கு ஒரு மில்லியன் ரூபாய் விலை வைக்கப்பட்டு இருந்தது. அவரை உயிருடனோ பிணமாகவோ கொண்டுவரவே முதல் நகர்வு இருந்தது என்கிறார்.

‘மொத்தம் இரண்டாயிரம் சிறுவர்கள், இரண்டே நாளில் முடித்து விடுவோம்’ என்று டெல்லியில் சொல்லிவிட்டு கிளம்பிய அதிகாரிகள், இரண்டு ஆண்டு காலம் திக்கித் திணறிய மொத்த காட்சிகளும் இந்தப் புத்தகத்தில் இருக்கின்றன.

‘போர் என்பது ஒரு இலக்கின் மீது, அந்த இலக்கை அழித்துவிடும் நோக்கில் அல்லது அந்த இலக்கை வெற்றிகொண்டு ஆக்கிரமிக்கும் நோக்கில் வலிந்து மேற்கொள்ளப்படும் ஒரு நடவடிக்கை.

ஆனால், போராட்டம் என்பதோ தம்மீது நிர்பந்திக்கப்படும் ஆக்கிரமிப்பில் இருந்து தம்மை மீட்டுக் கொள்வதற்கும் தம்மீது திணிக்கப்படும் போரில் இருந்து தம்மைக் காப்பாற்றிக் கொள்வதற்கும் ஒரு தரப்பு மேற்கொள்ளும் தற்காப்பு நடவடிக்கை’ என்று மிகச் சரியாகச் சொல்கிறார் நிராஜ் டேவிட்.

அத்தகைய போராட்டத்தை ஈழத்தமிழர்கள் எத்தகைய போர்க்குணத்துடன் நடத்தினர் என்பதை ஒவ்வொரு வார்த்தையும் சொல்கிறது.

பஞ்சாபில் நடந்த ஆபரேஷன் புளூ ஸ்டார் நடவடிக்கையில் தமிழ் இராணுவ வீரர்கள் பயன்படுத்தப்பட்டதற்கும் ஈழத்தில் நடந்த இராணுவ நடவடிக்கைக்கு சீக்கியவர்கள் பயன்படுத்தப்பட்டதற்குமான சதியைப் படிக்கும் போது, ஆட்சியாளர்களின் வன்மம் வெளிப்படுகிறது. ரணம் ஏற்படுத்தும் புத்தகம்!

TAGS: