சூடுபிடிக்கப் போகும் 13வது திருத்தச் சர்ச்சை!

gov-13இலங்கை அரசியலில் 13வது திருத்தச்சட்ட விவகாரம் இனிச் சூடுபிடிக்கப் போகிறது. கடந்த வாரம் புதுடில்லியில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியைச் சந்தித்திருந்த ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவிடம் இந்தியத் தரப்பில் இந்த விவகாரம் தான் முக்கியமாக வலியுறுத்தப்பட்டது.

13வது திருத்தச்சட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்துவது, அதற்கு அப்பால் சென்று அதிகாரங்களைப் பகிர்வது ஆகிய இரண்டு விடயங்களுக்கும் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி முக்கியத்துவம் கொடுத்து வலியுறுத்தியிருக்கிறார்.  அதுவும் விரைவாக இதற்கான பணிகளை முன்னெடுக்குமாறும் அவர் கூறியிருக்கிறார்.

நரேந்திர மோடியுடனான சந்திப்பின் போது, ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவிடம் 13வது திருத்தச்சட்டம் குறித்தும் மீனவர் பிரச்சினை குறித்தும் கேள்விகள் எழுப்பப்படலாம் என்று முன்கூட்டியே எதிர்பார்க்கப்பட்டது தான்.

அதையும் தாண்டி நரேந்திர மோடி முதல் சந்திப்பிலேயே, 13வது திருத்தச்சட்டம் குறித்து கூடுதலாக வலியுறுத்தியுள்ளதாக தெரிகிறது. அரசாங்கத்தைப் பொறுத்தவரையில் 13வது திருத்தச்சட்டம் என்ற பேச்சைக் கையில் எடுப்பதையே விரும்பவில்லை.

ஏனென்றால், 13வது திருத்தச்சட்டத்தை நடைமுறைப்படுத்துவதானால், மாகாணங்களுக்கு அதிகாரங்களைப் பகிர்ந்தளிக்க வேண்டிய நிலை வந்துவிடும் என்று கருதுகிறது. அதற்காக 13வது திருத்தச்சட்டம் என்பது ஏதோ அதிகாரங்களை அள்ளிக் கொடுக்கும் அட்சய பாத்திரம் என்று கருதுவதற்கில்லை.

அது ஓர் ஓட்டைப் பாத்திரம் தான் என்று வடக்கு மாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன் ஒரு சந்தர்ப்பத்தில் குறிப்பிட்டிருந்தார்.

அவ்வாறான ஓட்டைப் பாத்தரத்தை ஒரு கையால் கொடுத்து மறு கையால் பறிக்கும் 13வது திருத்தச் சட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்குக் கூட அரசாங்கம் தயாராக இல்லை. மாகாணங்களுக்கு காணி, பொலிஸ் அதிகாரங்கள் பகிர்ந்தளிக்கப்பட்ஹடு விட்டால் அவை தனிநாடுகளாக உருவெடுத்து விடும் என்ற பிரமை ஒன்று தெற்கிலுள்ள சிங்கள மக்கள் மத்தியில் உருவாக்கப்பட்டுள்ளது.

இவ்வாறான நிலையில் 13வது திருத்தச்சட்டத்தை நடைமுறைப்படுத்தி, அதிகாரங்களைப் பகிர்ந்தளித்தால் சிங்கள மக்களின் கோபத்துக்கு இரையாக நேரிடும் என்ற பயமும் அரசாங்கத்திற்கு உள்ளது.

இந்த அரசாங்கம் தெற்கிலுள்ள சிங்கள பௌத்த தேசியவாதிகளின் ஆதரவையே அதிகம் நம்பியுள்ளது. குறிப்பிட்ட சில முற்போக்கு சக்திகள் அரசாங்கத்துடன் இணைந்திருந்தாலும் சிங்கள, பௌத்த அடிப்படைவாதிகள் தான் அரசாங்கத்திற்கு பலமாக இருந்து வந்திருக்கின்றனர்.

ஆனால், அந்த அடிப்படைவாதிகளினது ஆதரவைக் கூட இப்போது அரசாங்கம் இழக்கத் தொடங்கியுள்ள நிலையில் தான் நரேந்திர மோடியின் அரசாங்கம் இந்தியாவில் பதவிக்கு வந்துள்ளது.

நரேந்திர மோடி பதவிக்கு வந்தவுடனேயே, 13வது திருத்தச்சட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கான அழுத்தங்களைக் கொடுக்கத் தொடங்கியிருப்பது அரசாங்கத்திற்கு சிக்கலையே ஏற்படுத்தப் போகிறது.

ஏனென்றால், அரசாங்கக் கூட்டணியில் அங்கம் வகிக்கும் கட்சிகளில் ஒருபகுதி 13வது திருத்தச்சட்டத்திற்கு ஆதரவானவை. இன்னொரு பகுதி எதிர்ப்பானவை.

ஏற்கனவே, அமைச்சர்கள் ராஜித சேனாரத்ன, வாசுதேவ நாணயக்கார, திஸ்ஸ விதாரண, டியூ குணசேகர, நவீன் திஸாநாயக்க உள்ளிட்ட பலரும், 13வது திருத்தச்சட்டத்தை நடைமுறைப்படுத்தும்படி அரசாங்கத்தை வலியுறுத்தி வருகின்றனர்.

ஆனால், விமல் வீரவன்ச, சம்பிக்க ரணவக்க, தினேஸ் குணவர்தன போன்ற கடும்போக்கு அமைச்சர்கள் 13வது திருத்தச்சட்டத்தை இல்லாதொழிக்க வேண்டும் என்று கோரி வருகின்றனர்.

இந்டதநிலையில் நரேந்திர மோடி 13வது திருத்தச்சட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்த வேண்டும் என்று வலியுறுத்த ஆரம்பித்துள்ளது, அரசாங்கத்தை முடிவெடுக்க முடியாத குழப்பம் ஒன்றுக்குள் தள்ளிவிடக்கூடும்.

அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் கட்ஹசிகள் மட்டுமன்றி, அதற்கு வெளியே உள்ள சிங்கள, பொளத்த கடும்போக்கு அமைப்புகள் பலவுங்கூட 13வது திருத்தச்சட்டத்தை இல்லாதொழிக்க வேண்டும் என்றே வலியுறுத்துகின்றன.

இந்த அமைப்புகளுக்கெல்லாம், நரேந்திர மோடியின் வலியுறுத்தலால் உதறல் எடுக்க ஆரம்பித்துள்ளது. ஏனென்றால் அரசாங்கத்துக்கு அழுத்தங்களைக் கொடுத்து 13வது திருத்தச்சட்டத்தை இந்தியா நடைமுறைப்படுத்தச் செய்து விடுமோ என்ற கலக்கம் அவர்களுக்கு உருவெடுத்துள்ளது.

மன்மோகன்சிங் மெதுவாக காலை வைத்தார், நரேந்திர மோடி வேகமாக காலை வைத்துள்ளார் என்று எச்சரித்துள்ள தேசப்பற்றுள்ள தேசிய இயக்கத்தின் பொதுச்செயலர் வசந்த பண்டார உடனடியாக 13வது திருத்தச்சட்டத்துக்கு சாவுமணி அடிக்கப்பட வேண்டும் என்றும் கூறியுள்ளார்.

அரசியலமைப்பு மாற்றம் ஒன்றின் ஊடாக 13வது திருத்தச்சட்டத்தை இல்லாதொழிக்க வேண்டும் என்ற அழுத்தங்களும் குரல்களும் இனித் தெற்கில் தீவிரமடையக் கூடும். ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் அரசாங்கமும் கூட 13வது திருத்தச்சட்டம் ஒழிக்கப்படுவதையே விரும்புகிறது.

ஆனால் அது இந்தியாவின் பகையை தேடித்தந்துவிடும் என்பதால் தான் 13வது திருத்தச்சட்டத்தின் மீது கை வைக்காமல் அதேவேளை, அந்த திருத்தச்சட்டத்தின் மூலம் மாகாண சபைகளுக்கு பகிரப்பட்டுள்ள அதிகாரங்களையும் வழங்காமல் அரசாங்கம் இழுத்தடித்து வருகிறது.

இதுவரை இந்தியாவில் வலுவான ஓர் அரசாங்கம் இல்லாததால், இலங்கை அரசாங்கத்தின் இந்த இழுத்தடிப்பு உத்தயை அது கண்டுகொள்ளவில்லை. ஆனால், நரேந்திர மோடி அரசாங்கம் வலுவான அரசாங்கமாக உருவாகியுள்ளதாலும், வலிமையான இந்தியாவை உருவாக்கும் கொள்கையைக் கொண்டதாக இருப்பதாலும், இந்தியாவினது கருதஹ்து உதாசீனம் செய்யப்படுவதை தமக்கான சவாலாகவே கருதும்.

அதாவது, இந்தியாவுக்கு சவால் விடும் வகையில், இலங்கை செயற்படுவதாக இந்திய அரசாங்கம் உணர்ந்து கொண்ஹடால், அது இலங்கை அரசாங்கத்துக்கு ஆபத்தாக முடியும்.

ஏற்கனவே மன்மோகன்சிங் அரசாங்கம் நிலையான அரசியல் தீர்வு மற்றும் 13வது திருத்தச்சட்டத்தை நடைமுறைப்படுத்த வலியுறுத்திய போது தான், அந்த சவாலைச் சமாளிப்பதற்கு, அரசாங்கம் தெரிவுக்குழுவைக் கையில் எடுத்தது.

தெரிவுக்குழுவில் வைத்து 13வது திருத்தச்சட்டத்தை இல்லாதொழிப்பதே அரசாங்கத்தின் இலக்காக இருந்தது. ஆனால் தமிழ் தேசியக் கூட்டமைப்பும், ஜேவிபியும் அதில் இணைந்துகொள்ள மறுத்துவிட, ஐதேகவும் அதையே காரணமாகக் கூறி, தெரிவுக்குழுவில் இணைந்து கெதாள்ளவில்லை.

இதனால், சட்டரீதியாக 13வது திருத்தச்சட்டத்தை செயலிழக்க வைக்க மேற்கொள்ளப்பட்ட முயற்சி தோல்வியில் முடிந்தது.

இப்போதும் கூட, அரசியல் தீர்வு என்ற பெயரில் தெரிவுக்குழுவுக்குள் கூட்டமைப்பை இழுத்துவந்து 13வது திருத்தச்சட்டத்தை இல்லாதொழிப்பதற்கே அரசாங்கம் முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.

எதிர்க்கட்சிகள் தான் அதற்குப் பிடி கொடுக்காமல் நழுவிக் கொண்டிருக்கின்றன. இந்தநிலையில், நரேந்திர மோடி அரசாங்கம் 13வது திருத்தச்சட்டத்தை நடைமுறைப்படுத்த வலியுறுத்தியுள்ளதும், அதனை நடைமுறைப்படுத்த தாம் முழு ஆதரவு அளிப்போம் என்று பிரதான எதிர்க்கட்சியான ஐதேக அறிவித்துள்ளதும், அரசாங்கத்திற்கு நெருக்கடியைக் கொடுக்கப் போகிறது.

ஏனென்றால், பிரதான எதிர்க்கட்சியே ஆதரவளிக்கும் போது, அரசாங்கம் அதனைச் செயற்படுத்தலாம் என்று இந்தியா கூற முனையும். ஆனால் சிங்களத் தேசியவாதிகளினது விருப்பம் அதற்கு எதிர்மாறானதாக இருப்பதால், யாருடைய விருப்பத்ஹதை நிறைவேற்றுவது என்ற சிக்கல் அரசாங்கத்துக்கு ஏற்படும்.

போர் முடிந்து விட்ட நிலையில், போரை வைத்தோ, அதில் பெற்ற வெற்றியை வைத்தோ, புலிகளை வைத்தோ அரசியல் நடத்த முடியாது. அந்த நிலை மாறிவிட்டது.

எனவே, புதியதொரு விவகாரத்தை முன்னிலைப்படுத்தி அரசியல் நடத்தினால் தான் பிழைத்துக் கொள்ளலாம் என்ற நிலை ஏற்பட்டுள்ளது. இப்படியான நிலையில் அரசாங்கத்திற்குள் இருக்கும் கடும்போக்கு சக்திகள் அரசின் நடவடிக்கைகளுக்கு எதிர்ப்பை வெளியிடத் தொடங்கிவிட்டன.

அவர்களுக்கு நரேந்திர மோடியின் அழுத்தம் புதிய உற்சாகத்தைக் கொடுக்கும். 13வது திருத்தச்சட்டத்தை இல்லாதொழிக்க வலியுறுத்தி அவர்கள் போராட்டத்தை தொடங்கலாம்.

அத்தகையதொரு நிலை உருவானால், அரசாங்கம், தான் யார் பக்கம் என்பதை வெளிப்படுத்த வேண்டியிருக்கும். ஏனென்றால், 13வது திருத்தச்சட்டத்திற்கு தான் ஆதரவு என்றோ அரசாங்கம் இதுவரை கூறவில்லை.

ஆனால், அதை முழுமையாக நடைமுறைப்படுத்த முடியாது என்பதில் உறுதியாக இருக்கிறது. முன்னர், இந்தியப் பிரதமர் மன்மேடாகன் சிங் மற்றும் இந்நிய வெளிவிவகார அமைச்சர் எஸ். எம். கிருஸ்ணா ஆகியோரிடம் மட்டுமன்றி, இப்போதைய இந்திய வெளிவிவகார அமைச்சர் சுஷ்மா சுவராஜிடம் கூட 13வது திருத்தச்சட்டத்தை நடைமுறைப்படுத்துவதாகவும், அதற்கு அப்பால் செல்வதாகவும் வாக்குறுதியளித்திருந்தார் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச. ஆனால் பின்னர் அவ்வாறு எந்த வாக்குறுதியும் கொடுக்ஹகப்படவில்லை என்று அரசாங்கம் நிராகரித்திருந்தது.

இந்தநிலையில், இப்போது கூட இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி 13வது திருத்தச்சட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்தக் கொடுத்த அழுத்தம் குறித்து அரசாங்கம் வாய்திறக்கவில்லை.

இதிலிருந்து அரசாங்கம் 13வது திருத்தச்சட்ட விவகாரத்தில் இன்னமும் இந்தியாவுடன் விளையாடலாம் என்றே நினைக்கிறது போலும்.

ஆனால், நரேந்திர மோடி அரசாங்கம் அதற்கு இடம்கொடுக்காது என்றே கருதப்படுகிறது. இந்தநிலையில் 13வது திருத்தச்சட்டம் என்பது வரும் நாட்களில் தீவிரமான சர்ச்சையாக இலங்கை அரசியலில் உருவெடுக்கும் வாய்ப்புகள் தோன்றியுள்ளன.

13வது திருத்தச்சட்டம் மாகாணசபைகளுக்கோ தமிழருக்கோ முழுமையான அதிகாரங்களை அளிக்கக் கூடியதொன்றாக இல்லாவிட்டாலும், இதன் மூலம் உருவாக்கக் கூடிய கலகம், ஒருவேளை தமிழருக்கு கொஞ்சமேனும் நன்மையளிப்பதாக அமையக்கூடும்.

-ஹரிகரன்

TAGS: