இலங்கையின் வடக்கே யாழ்ப்பாணத்தில் மதமாற்றத்தைத் தடைசெய்யுமாறு கோரியும், இந்து மக்களின் பிரச்சினைகளைத் தீர்க்க, புதிய இந்தியப் பிரதமர் உதவ வேண்டும் எனக் கோரியும் ஊர்வலமொன்று நடத்தப்பட்டிருக்கின்றது.
இலங்கை இந்திய இந்துமக்கள் நட்புறவுக் கழகமும், இந்து சமயப் பேரவையும் இணைந்து இதனை ஏற்பாடு செய்திருந்ததாக அதன் ஏற்பாட்டாளர்களில் ஒருவராகிய யோகராஜா துஸ்யந்தன் கூறினார்.
நல்லூர் கோவிலில் இருந்து புறப்பட்ட இந்த ஊர்வலம் பலாலி வீதியில் உள்ள இந்துசமயப் பேரவை வளாக ஆலயத்தில் சென்று முடிவடைந்தது.
அங்கு இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு நல்லாசி வேண்டியும், வாழ்த்து தெரிவித்தும் சிறப்பு பூஜைகள் நடைபெற்றதாகவும் அவர் தெரிவித்தார்.
‘இந்து மக்கள் பௌத்தர்களுடன் இணைந்து சமாதானமாக வாழ வேண்டும். அதற்கு இந்தியப் பிரதமர் நரேந்திரமோடி உதவி செய்ய வேண்டும். இதன் மூலம் இனமத வேறுபாடுகளின்றி இலங்கையில் அனைத்து மக்களும் வாழ முடியும் என்பது எங்களுடைய எதிர்பார்ப்பாகும். கடந்த காலங்களில் இந்து மக்கள் எல்லாவிதங்களிலும் மிகமோசமான சூழ்நிலைகளிலே வாழ்ந்திருந்தார்கள். கடந்தகால வடுக்கள் இன்னுமே அவர்களை ஒரு மீள் எழுச்சிக்கு உள்ளாக்கவில்லை. நரேந்திர மோடி அவர்கள் எப்பொழுதுமே தன்னை ஒரு இந்துவாக அடையாளப்படுத்திக் கொண்டார். ஆகவேதான் இந்தப் பிரச்சினைகளைத் தீர்த்துக் கொள்வதற்கு ஒரு சரியான தலைமைத்துவமுள்ளவராக நாங்கள் அவரைப் பாரக்கின்றோம். அவர் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு உதவ வேண்டும் என்று எதிர்பார்க்கின்றோம்’ என்று துஸ்யந்தன் குறிப்பிட்டார்.
அதற்காகவே, இந்த ஊர்வலமும், நல்லாசி வேண்டுவதற்கான வழிபாடும் செய்யப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார். -BBC
ஒரு வேலை நீங்கள் உயர்ந்த ஜாதி இந்துக்களா இருந்தா, இந்திய அரசாங்கம் உதவுவார்கள்.