படையினரிடம் ஒப்படைக்கப்பட்ட பின்னர் காணாமல் போனவர்களது நிலை என்ன?- முல்லைத்தீவில் கவனயீர்ப்பு

ltte_leds1இறுதிப்போரில் படையினரிடம் ஒப்படைக்கப்பட்டு பின்னர் காணாமல் போனவர்களது நிலை என்ன? போரின் போதும், அதற்கு முன்னரும் காணாமல் போனவர்களுக்கு என்ன நடந்தது? என்ற கேள்விகளை முன்வைத்து அவர்களின் உறவினர்கள் எதிர்வரும் 5ம் திகதி முல்லைத்தீவில் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றினை நடாத்துவதற்கு திட்டமிட்டுள்ளனர்.

குறித்த விடயம் தொடர்பாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் வடமாகாணசபை உறுப்பினர் திருமதி அனந்தி சசிதரன் ஊடகங்களுக்கு விடுத்துள்ள செய்திக் குறிப்பில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

2009ம் ஆண்டு போர் நிறைவடைந்து விட்டதாக கூறப்பட்ட நிலையில் பெருமளவு மக்கள் தங்கள் உறவினர்களை படையினரிட ம் நேரடியாகவே ஒப்படைத்தனர்.

ஆனால் அவர்கள் எவரும் தற்போது இல்லை. அவர்களுக்கு என்ன நடந்தது என்பதனையும் சிறீலங்கா அரசாங்கம் தெரிவிக்க மறுத்து வருவதுடன், காணாமல் போனவர்களுக்கு மரணச்சான்றிதழ்களை வழங்கவே நடவடிக்கை எடுக்கின்றது.

இந்நிலையில் காணாமல் போனவர்களின் உறவினர்கள் வாழ்வாதார நெருக்கடி, சமூக நெருக்கடி உள்ளிட்ட நெருக்கடிகளால் இயலாமைகளுடன் அவலவாழ்வு வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள்.

எனவே அவற்றை சர்வதேசத்தின் கவனத்திற்கு கொண்டுவரும் வகையில் வெளிப்படுத்தும் வகையிலும்,  5ம் திகதி முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்றில் காணாமல் போனவர்களின் உறவினர்கள் 12பேர் தாக்கல் செய்த ஆட்கொணர்வு மனுவின் விசாரணைகள் நடைபெறவுள்ள நிலையில் அதற்குப் பலம் சேர்க்கும் வகையிலும் இந்த போராட்டத்தை நாங்கள் திட்டமிட்டுள்ளோம்.

எனவே இதில் அரசியல் வேறுபாடுகள்,  கட்சி வேறுபாடுகள் கடந்து இதனை ஒரு இனத்தின் பிரச்சினையாகவும், மனிதாபிமானப் பிரச்சினையாகவும் கருத்தில் எடுத்து தமிழ் தேசிய கட்சிகள், மனிதவுரிமை அமைப்புக்கள், பெண்கள் அமைப்புக்கள் போன்றன பங்கெடுத்துக் கொள்ள வேண்டும் என தெரிவித்துள்ளார்.

குறித்த போராட்டம் 5ம் திகதி வியாழக்கிழமை முல்லை மாவட்டச் செயலகத்திற்கு முன்பாக காலை 9மணி தொடக்கம் 11மணி வரையில் நடைபெறும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

TAGS: