தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வுத்திட்டமொன்றை வரைவதற்காக பொது மக்களிடமிருந்தும், அரசியல் ஆர்வலர்கள், அரசியல் ஆய்வாளர்கள், தமிழ் மக்களின் இனப்பிரச்சினை விவகாரங்களில் தீவிரமாக செயற்பட்டு வரும் அரசியல் கட்சிகள், புலம்பெயர்ந்த தமிழர் அமைப்புக்கள் ஆகியோரிடமிருந்து ஆக்கபூர்வமான தீர்வுத்திட்ட ஆலோசனைகளை வழங்குமாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.
கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான சுரேஷ் பிரேமச்சந்திரன் புதனன்று நீர்வேலியில் அமைந்துள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பிரதேச பணிமனையில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போது இந்த அழைப்பை விடுத்துள்ளார்.
கடந்த பாராளுமன்ற அமர்வின் பொழுது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்புக் குழு தமிழ் மக்களினுடைய இனப்பிரச்சினை தீர்வுக்கான தீர்வுத்திட்டமொன்றினை தயாரிக்க வேண்டும் என்றும் அந்த தீர்வுத்திட்டத்தினை தயாரிக்க குழுவொன்று அமைக்கப்படவேண்டும் என்றும் தீர்மானித்திருந்தது.
அந்த தீர்மானத்தின் அடிப்படையில் மக்களிடமிருந்து தீர்வுத்திட்டம் பற்றிய கருத்துக்களை கேட்பதற்கு முடிவெடுத்துள்ளதாக அவர் கூறியுள்ளார்.
“முன்னரை விட இனப்பிரச்சினைக்கு ஒரு தீர்வு முன்வைக்கப்பட வேண்டுமென்பது, இப்போது சர்வதேச ரீதியாக முக்கியத்துவம் பெற்ற ஒரு விடயமாக மாறியிருக்கின்றது. ஆகவே இவ்வாறான சூழ்நிலையில் இலங்கையில் இருக்கும் தமிழ் மக்கள், புலம்பெயர்ந்து வாழும் தமிழ் மக்கள் எவ்வாறான ஒரு தீர்வை விரும்புகின்றார்களென்ற கருத்துக்களை உள்ளடக்கியதாக நாங்கள் எமது தீர்வுத்திட்டத்தை தயாரிப்பதற்கு யோசித்திருக்கின்றோம். இலங்கை மக்களின் இனப்பிரச்சினையை தீர்ப்பது தொடர்பாக அனைத்து தரப்பினரதும் கருத்துக்களை அறிந்து கொள்ளுதல் என்பது முக்கியமானது. நாங்கள் அவ்வாறான ஆலோசனைகளையும், கருத்துக்களையும் பெற்றுக் கொள்வதற்காக புதியதொரு மின்னஞ்சல் முகவரியை உருவாக்கியுள்ளோம்” என நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
பொதுமக்களினதும், பொது நிறுவனங்களிலிருந்தும், அரசியல் அமைப்புக்களினதும், தமிழ் மக்களின் இனப்பிரச்சினை தீர்வில் அக்கறையுள்ள அனைத்துத் தரப்பினரிடமிருந்தும் கருத்துக்கள் இதற்கென உருவாக்கப்பட்டுள்ள [email protected] என்ற மின்னஞ்சல் முகவரியில் எதிர்ப்பார்க்கப்படுவதாகத் தமிழ்த்தேசிய கூட்டமைப்பு அறிவித்திருக்கின்றது. -BBC