இராணுவ ஆட்சேர்ப்பு பொறியினுள் அகப்படவேண்டாம்! தமிழ் இளைஞர், யுவதிகளுக்கு அனந்தி வேண்டுகோள்!!

elilans_wife_ananthiஎமது மக்கள் மேல் திணிக்கப்படும் இராணுவ மேலாதிக்கத்தில் எமது இளைஞர் யுவதிகளையும் பங்கு கொள்ள வைக்கும் ஒரு பயங்கர சதியை நிறைவேற்ற முயற்சி செய்வதையிட்டு நாம் விழிப்பாக இருக்க வேண்டும். எம்மை நாமே பாதுகாக்க வேண்டுமென அழைப்பு விடுத்துள்ளார் வடமாகாணசபை உறுப்பினர் அனந்தி சசிதரன்.

இலங்கை இராணுவத்திற்கு கட்டாய அடிப்படையில் அரச அதிகாரிகளை பயன்படுத்தி முன்னெடுக்கப்படும் ஆட்சேர்ப்பு தொடர்பாக அவர் இன்று விடுத்துள்ள ஊடக அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்படுகையில்,

அண்மைக் காலங்களில் இராணுவத்தினர் படைக்கு ஆட்களைத் திரட்டும் பணியில் வடக்கில் பல்வேறு வழிமுறைகளிலும் ஈடுபட்டு வருகின்றனர். படையினர் வீடு வீடாக சென்று பிரச்சாரங்களை மேற்கொண்டு விண்ணப்பப் படிவங்களை வழங்க இளைஞர்களையும் யுவதிகளையும் ஒருவிதமான அழுத்தங்களையும் கொடுப்பதன் மூலம் படையில் சேர்ப்பதற்கான முயற்சியில் அவர்களால் வெற்றிபெற முடியவில்லை. இதன் காரணமாக அவர்கள் அடுத்த கட்ட நடவடிக்கைகளில் இறங்கியுள்ளனர்.

அரசாங்க அதிபர் பிரதேச செயலாளர்களுக்கு கட்டளைகளை வழங்கி அவர்கள் கிராம சேவையாளர்கள் மூலம் படைக்கு ஆட்களை திரட்டும் நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளது, மாவட்ட அபிவிருத்தி குழுக் கூட்டத்தில் இது தொடர்பாக கருத்து வெளியிட்ட யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் இராணுவத்தினர் கேட்டுக் கொண்டதற்கு அமைவாகவே மேற்படி பணியில் ஈடுபடுமாறு தான் பிரதேச செயலாளர்களுக்கு அறிவித்தல் வழங்கியதாக தெரிவித்திருந்தார். இப்படியான ஒரு நிலையில் இந்தக் கேள்விகள் எழுகின்றன.

ஒன்று: பாதுகாப்பு அமைச்சின் முறைப்படியான வர்த்தமானி அறிவித்தல் இன்றி ஒரு பிராந்தியத் தளபதி தன்னிச்சையாக படைக்கு ஆட்சேர்க்க முடியுமா?

அடுத்தது: ஒரு மாவட்ட அரசாங்க அதிபர் ஒரு இராணுவத் தளபதியின் கட்டளையை ஏற்றுச் செயற்பட முடியுமா?

இந்த இரு விடயங்களும் இலங்கையின் அரசியல் அமைப்புச் சட்டத்திற்கு அப்பாலானவை என்பது மட்டுமன்றி மரபு வழியான நடைமுறைகளுக்கும் அடங்காதவை. எனினும் இவை ஏன் எப்படி நடைபெறுகின்றன? இலங்கையில் குறிப்பாக வடபகுதியில் பொது நிர்வாக அலகுகள் இராணுவக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டு விட்டனவா? இப்படி ஒரு அமைச்சரவைத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டதா? அல்லது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியின் ஆணை பிறப்பிக்கப்பட்டதா? இப்படி எதுவும் இடம்பெறாத நிலையிலும் இங்கு இவை நடைபெற்றுக் கொண்டு தான் இருக்கின்றன.

இலங்கையில் ஒரேயொரு இராணுவம் தான் உண்டு. அதற்கென ஒரேயொரு தலைமைத் தளபதி தான் உண்டு. அவர் நேரடியாகவே பாதுகாப்பு அமைச்சின் கீழ் செயற்படுபவர். இராணுவ ஆட்சேர்ப்பு என்பது பாதுகாப்பு அமைச்சின் கட்டளைகளுக்கு அமைய இராணுவம் வர்த்தமானி அறிவித்தலின் மூலம் விண்ணப்பங்களைக் கோரும். அந்த விண்ணப்பங்களின் அடிப்படையில் நேர்முகத் தெரிவு நடாத்தப்பட்டு அதில் தெரிவு செய்யப்படுபவர்கள் படைக்கு இணைத்துக் கொள்ளப்படுவார்கள். இது வழமையான நடைமுறை! சட்டபூர்வமானதும் கூட!

இப்போ ஒரு பிராந்திய தளபதி கட்டளையிட அரச அதிபர் பிரதேச செயலாளர்களிற்கூடாக படைக்கு ஆட்சேர்க்கும் பணியில் இறங்கியுள்ளார். இவ்வகையில் அரச அதிபர் என்பவர் ஜனாதிபதியின் மாவட்ட பிரதிநிதி. அவர்களிற்கு கட்டளையிடும் அதிகாரம் ஜனாதிபதிக்கும் பொது நிர்வாக அமைச்சுக்கும் மட்டுமே உண்டு. சில அவசர சந்தர்ப்பங்களில் மாவட்ட மட்டத்தில் பொலிசாரையோ, இராணுவத்தினரையோ அமைக்கும் அதிகாரம் அவரிற்கு உண்டு. ஆனால் வடக்கில் அவர் இராணுவத்தினரின் கட்டளைகளை நிறைவேற்றுமளவிற்கு நிலை தாழ்த்தப்பட்டு விட்டார். அதாவது இராணுவத்தினரினதும், ஜனாதிபதியினதும் பொது நிர்வாக அமைச்சினதும் அதிகாரங்களை தானே கையில் எடுத்துக் கொண்டு உள்ளார்.

இந்த ஆட்சேர்ப்பு விவகாரத்தில் பிரதேச செயலாளர்களோ, கிராம சேவையாளர்களோ தங்கள் மேலதிக பணியான அரச அதிபரின் கட்டளைக்கு கீழ்ப்படிய வேண்டிய நிர்ப்பந்தம் உண்டு. ஆனால் அரச கருமம் அப்படியல்ல. ஒரு பிராந்திய இராணுவ தளபதியின் கட்டளையை மறுக்க அவருக்கு முழு அதிகாரம் உண்டு. அது மட்டுமல்ல தனது கடமைக்கு குறுக்கிடுவதாக பொது நிர்வாக அமைச்சுக்கோ, ஜனாதிபதிக்கோ முறைப்பாடு செய்யும் உரிமையும் அவருக்கு உண்டு.

ஆனால் யாழ்மாவட்ட அரச அதிபரோ தன் பதவியின் அதிகாரம், அந்தஸ்து, கடமை எல்லாவற்றையும் மறந்து இராணுவத்தினருக்கு சேவை செய்யும் பாதையில் தானும் பிரதேச செயலாளர்களையும் கிராம சேவையாளர்களையும் வழிநடத்துகிறார். இது வடக்கில் ஒரு இராணுவ மேலாதிக்கம் கொண்ட ஒரு இலங்கை அரசியல் சட்டத்திற்கு அப்பால் இடம்பெற்று வருகின்றது என்பதைத் தெட்டத் தெளிவாக காட்டுகிறது. அந்த இராணுவ மேலாதிக்கத்தை மேலும் வலுப்படுத்தும் விதமாகவே படைக்கு தமிழ் இளைஞர்களையும் யுவதிகளையும் இணைக்கும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

அன்பிற்குரிய இளைஞர்களே!

இதுவரை ஐம்பதாயிரத்திற்கு மேற்பட்ட படைவீரர்கள் இராணுவத்தை விட்டு தப்பி ஓடி விட்டனர். கவர்ச்சிகரமான சம்பளம், பல சலுகைகள், எல்லாம் இருந்த போதும் அவர்கள் தப்பி ஓடுகின்றனர். காரணம் கட்டுப்பாடு என்ற பெயரில் அவர்கள் மேல் நடாத்தப்படும் அதிகார மேலாதிக்கம் விடுமுறைகள் வழங்காமை. உறவுகளிடம் இருந்தும் சமூகத்திடமிருந்தும் பிரிந்து நீண்ட காலம் தனிமைப்படுத்தல் பாலியல் தேவைகளைப் பூர்த்தி செய்ய முடியாமை அதனை முறையற்ற விதத்தில் பூர்த்தி செய்ய முற்பட்டால் கிடைக்கும் மோசமான தண்டனை, அடிமைத்தனம் என்பன அவர்களை விரக்தி வக்கிரக மன நிலைக்குள் தள்ளுகின்றன. எனவே படையை விட்டு தப்பியோடும் நிலை அவர்களுக்கு ஏற்படுகின்றது.

அப்படி தப்பி ஒடுபவர்கள் வெளியே வந்து இயல்பு வாழ்வு வாழ முடியாது. தலைமறைவான வாழ்க்கை வாழ்கின்றனர். வேலையற்ற நிலைமை வாட்டுகின்றன. இறுதியில் பாதாள உலகக் குழுக்களில் இணைகின்றனர். பின்பு கொலை, கொள்ளை, ஆட்கடத்தல் எனப் பாரிய குற்றங்களை மேற்கொண்டு நிரந்தரக் குற்றவாளிகளாக தமது எதிர்காலத்தையே இழந்து விடுகின்றனர். இந்த நிலைமை உங்களுக்கும் ஏற்பட வேண்டுமா?

எமது அன்புக்குரிய யுவதிகளே!

ஏற்கனவே கிளிநொச்சியில் படையில் இணைத்த யுவதிகள் மனநிலை பாதிக்கப்பட்டு கிளிநொச்சி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்ததை நீங்கள் அறிவீர்கள். அனுராதபுரம் மகிந்த முகாமில் பெண்கள் பாலியல் ரீதியான துன்புறுத்தல்களுக்கு உட்படுத்தப்பட்டமை வீடியோ நாடாக்கள் மூலம் வெளிவந்தன. இராணுவத்தினர் பாலியல் கொடுமைகளில் எப்படிப்பட்டவர்கள் எனபதை நீங்கள் நன்கு அறிந்துள்ளீர்கள். இப்படியான நிலைக்குள் அகப்பட்டு தப்ப முடியாமல் தவிக்கும் நிலை உங்களுக்கும் வேண்டுமா?

இளைய தலைமுறையே!

உங்களை வாட்டும் வறுமை, வேலையற்ற பிரச்சனை, படையினரின் பிரச்சாரம் என்பன உங்களை படையில் இணையும்படி தூண்டலாம்.ஆனால் அதற்காக நாம் எங்கள் எதிர்காலத்தை இழந்து விடலாமா? நாம் விமோசனம் என எண்ணுவது அடிப்படையில் ஒரு விலங்கு என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டுமென அவர் அவ்வறிக்கையினில் மேலும் தெரிவித்துள்ளார்.

TAGS: