ஐ.நா விசாரணைக்கு ஒத்துழைக்கும்படி சிறிலங்காவிடம் கோருகிறார் நவநீதம்பிள்ளை

navaneetham-pillai1சிறிலங்காவில் இடம்பெற்ற மீறல்கள் குறித்து நடத்தப்படும், நம்பகமான உண்மை கண்டறியும் விசாரணைகளுக்கு ஒத்துழைக்கும் வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளும்படி சிறிலங்கா அரசாங்கத்திடம், ஐ.நா மனித உரிமை ஆணையாளர் நவநீதம்பிள்ளை கோரிக்கை விடுத்துள்ளார்.

ஜெனிவாவில் வரும் செவ்வாய்க்கிழமை ஆரம்பமாகவுள்ள ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 26வது அமர்வில், ஐ.நா மனித உரிமை ஆணையாளர் நவநீதம்பிள்ளை துவக்கவுரை நிகழ்த்தவுள்ளார்.

அவரது இந்த உரையின் ஆரம்ப வரைவு நேற்று ஐ.நா மனிதஉரிமை ஆணையாளர் பணியகத்தினால் வெளியிடப்பட்டுள்ளது.

அந்த உரையிலேயே சிறிலங்காவிடம் அவர் இந்த வேண்டுகோளை விடுக்கவுள்ளது பற்றிய விபரம் இடம்பெற்றுள்ளது.

அவரது உரையில், சிறிலங்காவில் போர் முடிவுக்கு வந்து கடந்த மாதத்துடன் ஐந்து ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில், தீவிரவாதம் மற்றும் மோதல்களால் ஏற்பட்ட காயங்கள் இன்னமும் ஆறவில்லை என்பதை கவனிக்கிறேன்.

ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் ஆணைக்கு இணங்க, பல நிபுணர்கள் மற்றும் சிறப்பு நடைமுறை ஆணை பெற்றவர்களின் உதவியுடன் மேலதிக பொறுப்புக்கூறல் மற்றும் நல்லிணக்கத்துக்கான விரிவான விசாரணைகளை நடத்துவதற்கென, எனது பணியகம் அதிகாரிகள் குழுவொன்றை நியமித்துள்ளது.

ஒரு நம்பகமான உண்மை கண்டறியும் செயல்முறையுடன் ஒத்துழைக்கும் வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளும்படி சிறிலங்கா அரசாங்கத்தை ஊக்குவிக்கிறேன் என்று கூறப்பட்டுள்ளது.

TAGS: