இலங்கையும் இந்தியாவும் முட்டிக்கொள்ளப் போகின்றனவா?

mahinda_modi_0313வது திருத்தச் சட்டத்தை நடைமுறைப்படுத்தும் விவகாரத்தில், இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையில், கருத்து முரண்பாடுகள் தோன்றுவதற்கான அறிகுறிகள் வெளிப்பட ஆரம்பித்துள்ளன.

அரசியலமைப்பின் 13வது திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்த முடியாது என்று ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியிடம் தெளிவாக எடுத்துக் கூறிவிட்டதாக வெளிவிவகார அமைச்சர் ஜி.எல். பீரிஸ் கடந்த வாரம் நாடாளுமன்றில் தெரிவித்திருந்தார்.

கடந்த மாதம் 27ம் திகதி ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவை புதுடில்லியில் சந்தித்த போது இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, 13வது திருத்தச் சட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தியிருந்தார் என்பது தெரிந்ததே.

ஆரம்பத்தில் 13வது திருத்தச் சட்டம் குறித்து இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியுடனான சந்திப்பில் பேசப்பட்டது குறித்து, இலங்கை அரசாங்கம் எதையுமே கூறாமல் மறைத்திருந்தது.

சந்திப்பில் 13வது திருத்தம் குறித்து இந்தியப் பிரதமர் வலியுறுத்திய விடயத்தை யாழ். மாநகர மேயரிடம் கறந்து கொண்ட என்டிரிவி தொலைக்காட்சி, அதைப் பகிரங்கப்படுத்தியதும், இந்திய வெளிவிவகாரச் செயலர் சுஜாதா சிங் 13வது திருத்தச் சட்டம் குறித்துப் பேசப்பட்டதை உறுதிப்படுத்தினார்.

ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச கொழும்பு திரும்பிய பின்னர், அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வாவிடம் 13வது திருத்தச் சட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்த வேண்டும் என்று இந்தியப் பிரதமர் வலியுறுத்தியது குறித்து செய்தியாளர்கள் கேள்வியெழுப்பியிருந்தனர்.

அதற்கு அவர், 13வது திருத்தம் குறித்து வலியுறுத்தப்பட்டமை, ஒப்புக்கொண்ட அதேவேளை, முழுமையாக அதை நடைமுறைப்படுத்த முடியாது என்றும் குறிப்பிட்டிருந்தார்.

அதன் தொடர்ச்சியாக, இப்போது அமைச்சர்களிடத்தில் இருந்து 13வது திருத்தச் சட்டம், அதன் அதிகாரங்கள் குறித்து கருத்துகள் வெளிவந்து கொண்டிருக்கின்றன.

அரசாங்கத்தில் உள்ள கடும்போக்கு அமைச்சர்கள், 13வது திருத்தச் சட்டத்தை நடைமுறைப்படுத்தக் கூடாது என்று போர்க்கொடி உயர்த்துகின்றன.

அதேவேளை, அமைச்சர் டியு குணசேகர, வடக்கு மாகாண முதலமைச்சராக விக்னேஸ்வரன் இருக்கின்ற நிலையில், அதற்கு பொலிஸ் அதிகாரத்தை வழங்கலாம் என்று கண்டியில் நடந்த கூட்டம் ஒன்றில் குறிப்பிட்டிருந்தார்.

ஆனால் உடனடியாகவே அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல, 13வது திருத்தச் சட்டத்தை நடைமுறைப்படுத்தினாலும், காணி, பொலிஸ் அதிகாரங்களை மாகாண சபைகளுக்கு வழங்க முடியாது என்று தெரிவித்தார்.

இத்தகைய வாதப் பிரதிவாதங்கள் நடந்து கொண்டிருந்த நிலையில் தான்,  எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்கவின் கேள்விக்கு நாடாளுமன்றில் பதிலளித்த வெளிவிவகார அமைச்சர் ஜி.எல். பீரிஸ், 13வது திருத்தச் சட்டம் குறித்து இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியுடன் பேசப்பட்ட விவகாரங்கள் குறித்து வெளிப்படுத்தினார்.

இது குறித்து ஆழமாகப் பேசப்படாத போதிலும், 13வது திருத்தச் சட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்த முடியாது என்று இந்தியாவுக்கு திட்டவட்டமாக கூறப்பட்டு விட்டதாகவும், குறிப்பாக மாகாண சபைகளுக்கு பொலிஸ் அதிகாரம் வழங்கப்படுவது என்ற பேச்சுக்கே இடமில்லை என்றும் அவர் கூறியிருந்தார்.

இந்தியாவினதும் இந்தியாவை ஆளும் பாஜக வினதும் நிலைப்பாடு 13வது திருத்தச் சட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்துவதாக இருக்கும் நிலையில், இலங்கை அரசாங்கத்தின் இந்த இறுக்கமான நிலைப்பாடு புதுடில்லிக்கு சவாலானதாகவே மாறியுள்ளது.

13வது திருத்தச்சட்ட விவகாரத்தில் இந்தியா எமக்கு கட்டளையிட முடியாது என்று அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வா குறிப்பிட்டதையும் இங்கு சுட்டிக்காட்ட வேண்டும்.

அதாவது, ஓரளவுக்கு மேல் அழுத்தம் கொடுக்கப்பட்டால், இந்தியாவுடன் முரண்பட்டுக் கொள்ளும் சூழல் உருவாகும் என்பதை, அந்தக் கருத்து வெளிப்படுத்தியது.

இப்போது, 13வது திருத்தச் சட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்த முடியாது, பொலிஸ் அதிகாரங்களை வழங்க முடியாது, தெரிவுக்குழுவின் மூலம் தான எந்தத் தீர்வும் காணப்படும், யாருக்கும் தனியான தீர்வோ, அதிகாரங்களோ தனித்துவமான முறையில் வழங்கப்படாது என்றெல்லாம் பீரிஸ் குறிப்பிட்டுள்ளார்.

இவையெல்லாம் நரேந்திர மோடி அரசாங்கத்திற்கு புதியதாக இருந்தாலும், இந்தியாவுக்கு அதாவது, சவுத் புளொக்கிற்கு ஆச்சரியமானதாக இருக்காது.

இத்தகைய நிலையில், 13வது திருத்தம், தெரிவுக்குழு என்று முன்னரைப் போலவே இழுத்தடிக்க அரசாங்கம் முனைகிறது என்ற உண்மை இந்தியாவுக்கு விளங்காமல் போகாது.

இந்தியாவின் அழுத்தங்கள் அதிகரிக்கும் வாயப்புகள் உள்ளதால் தான், தெரிவுக்குழுவுக்கு வராது போனாலும் பரவாயில்லை, அதற்கு யோசனைகளையாவது சமர்ப்பியுங்கள் என்று தமிழ் தேசியக் கூட்டமைப்பிடம் அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வா கோரியுள்ளார்.

தெரிவுக்குழு ஏமாற்று வேலை என்றும் 13வது திருத்தச் சட்டத்தை செயலிழக்கச் செய்வதற்கான சதி என்றும் நம்பும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு, எவ்வாறு அதற்கு ஒரு யோசனையைச் சமர்ப்பிக்கும்?

இந்த அடிப்படையைக் கூட அரசாங்கம் புரிந்து கொள்ளாமல் இருக்கிறது.

அரசாங்கத்தின் கோரிக்கையை ஏற்று தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஒரு யோசனையை தெரிவுக்குழுவிடம் சமர்ப்பித்தால், அதைத் தூக்கி குப்பையில் போட்டு விட்டு தானாக ஒன்றைத் தயாரித்துக் கொள்ளும் அரசாங்கம்.

பின்னர், தமிழ் தேசியக் கூட்டமைப்பினது கருத்துக்களையும் கவனத்தில் எடுத்து தயாரிக்கப்பட்ட தீர்வுத் திட்டம் என்று உலகுக்கு பறைசாற்றும். இதற்காகவே தான், தெரிவுக்குழுவுக்கு யோசனைகளைத் தருமாறு கேட்டுள்ளது அரசாங்கம்.

இந்தியாவைச் சமாளிப்பதற்கும், தெரிவுக்குழுவை முன்னகர்த்தியே ஆக வேண்டும். எனவே, தெரிவுக்குழுவை முக்கிய கட்சிகள் இல்லாமலேயே செயற்படுத்த அரசாங்கம் முனைந்தாலும் ஆச்சரியமில்லை. ஆனால், அது எந்தவகையிலும் செல்லுபடியானதாக இருக்காது.

13வது திருத்தச்சட்டம் தொடர்பான இலங்கை அரசாங்கத்தின் தெளிவான நிலைப்பாடு வெளிப்படுத்தப்பட்டுள்ள இத்தகைய கட்டத்தில் நரேந்திர மோடி தலைமையிலான இந்திய அரசாங்கம் என்ன செய்யப் போகிறது என்ற கேள்வி வருகிறது.

எதற்கும் இணங்க மறுக்கும் இலங்கையுடன் முட்டிக் கொள்ளவும் முடியாத அதேவேளை, விட்டுக் கொடுக்கவும் முடியாத நிலை ஒன்று இந்தியாவுக்கு ஏற்படப் போகிறது. இந்தியா தனது தலையிடாக் கொள்கையை கட்டிப் பிடித்துக் கொண்டிருக்கும் வரைக்கும், இந்த இக்கட்டான நிலை தொடரும். 13வது திருத்தச் சட்டத்தை நடைமுறைப்படுத்தியே ஆக வேண்டும் என்ற இந்திய அரசாங்கத்தின் நிலைப்பாட்டை இலங்கை அரசாங்கம் மறுக்கும் போது புதுடில்லி மீதான தமிழ்நாட்டின் அழுத்தங்களும் இன்னும் அதிகரிக்கும்.

தமிழ்நாட்டின் நிலைப்பாட்டின் மீதான தார்மீக நியாயங்களும் புதுடில்லிக்கு விளங்கத் தொடங்கும்.

இப்படிப்பட்ட சூழலில், இந்தியா உரிய முடிவை எடுக்க வேண்டிய நிலை ஏற்படும்.

அதாவது தனது மரபுசார்ந்த வெளிவிவகாரக் கொளகைக்கு அப்பால், சிந்தித்தோ செயற்பட்டோ தான் இதற்கு தீர்வு காண முடியும். இது புதுடில்லிக்கு ஏற்கனவே தெரிந்த விடயம். ஆனால், பலம் வாய்ந்த தற்போதைய நரேந்திர மோடி அரசாங்கத்தினால், அந்த மரபை முழுமையாக இல்லாவிடினும், ஓரளவுக்கேனும் உடைத்துக் கொள்ள முடியும்.

அது தனியே இலங்கைத் தீவிலுள்ள தமிழருக்கு நியாயம் கிடைப்பதற்கான வாய்ப்புகளை மட்டும் ஏற்படுத்திக் கொடுக்காது. அதற்கு அப்பால், வலுவான இந்தியாவை விரும்பும் இந்தியர்கள் எதிர்பார்க்கின்ற, இந்தியாவையும் சுப்பர் பவர் நடாக மாற்றுவதற்கும் துணைநிற்கும்.

அத்தகைய முயற்சி, தெற்காசியாவில் இந்தியாவிற்குத் தோன்றியுள்ள அச்சுறுத்தல்களுக்கும் முடிவு கட்டக்கூடும். அத்தகையதொரு முடிவை புதுடில்லி எடுக்குமா என்று தெரியாது.

ஆனால் புதுடில்லி தன்னை வலுவான சக்தியாக நிலைநாட்டிக் கொள்வதற்கு கிடைத்துள்ள இந்தச் சந்தர்ப்பத்தை நழுவவிட்டால், இன்னொரு சந்தர்ப்பத்துக்காக நெடுங்காலம் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்படலாம்.

அது நரேந்திர மோடியின் இந்த ஐந்தாண்டுப் பதவிக்காலத்தில் கிடைக்கலாம், கிடைக்காமலும் போகலாம்.

– ஹரிகரன்

TAGS: