விடுதலைப்புலிகள் இயக்கத்தைச் சேர்ந்த வெடிகுண்டு நிபுணரை பிடிக்க இலங்கை போலீசார் தீவிர தேடுதல் வேட்டை நடத்தி வருகிறார்கள்.
இலங்கை அரசு உஷார்
இலங்கையில் விடுதலைப்புலிகளுக்கு எதிரான உள்நாட்டுப்போர் கடந்த 2009-ம் ஆண்டு முடிவுக்கு வந்தது. இதைத்தொடர்ந்து இலங்கையில் அந்த இயக்கம் மீண்டும் தோன்றாமல் இருக்க அந்த நாட்டு அரசும், ராணுவமும் மிகவும் விழிப்புடன் செயல்பட்டு வருகின்றன.
இதன் ஒரு பகுதியாக புலிகள் அமைப்பை சேர்ந்தவர்கள் அல்லது புலிகள் அமைப்பை தோற்றுவிப்பவர்களாக சந்தேகப்படும் நபர்களை அந்நாடு கைது செய்து வருகிறது. அந்த அடிப்படையில் கடந்த ஏப்ரல் மாதத்தில் விடுதலைப்புலிகள் இயக்கத்தை மீண்டும் தட்டியெழுப்ப முயன்றதாக முன்னாள் விடுதலைப்புலிகள் 3 பேரை அந்நாட்டு ராணுவம் சுட்டுக்கொன்றது.
தப்பிச் சென்றார்
இந்தநிலையில் இலங்கையின் வடகிழக்கு மாவட்டமான மான்னாருக்கு உட்பட்ட மது பகுதியை சேர்ந்த, நந்தராசா சவுந்திரநாயகம் என்பவர் 15 கிலோ வெடிபொருள் வைத்திருந்ததாக உள்ளூர் போலீசாரால் கைது செய்யப்பட்டார். அவரிடம் நடத்திய விசாரணையில், விடுதலைப்புலிகள் இயக்கத்தில் வெடிகுண்டு நிபுணராக செயல்பட்ட நிலங்கோ என்பவர் அவருடன் இருந்ததாகவும், அவர் தப்பிச் சென்று விட்டதாகவும் தெரியவந்தது.
இதைத்தொடர்ந்து நிலங்கோவை தேடும் பணியை அந்நாட்டு ராணுவமும், போலீசாரும் முடுக்கி விட்டுள்ளனர். இது குறித்து போலீஸ் செய்தித் தொடர்பாளரான அஜித் ரோகனா கூறியதாவது:
பொறுப்பாளர்
குணசேகர முடியன்செலேக நிலங்க ஜூட் அந்தோணி என்ற சிரில் நிலங்கம் ஜூட் அந்தோணி, மன்னார் மாவட்டத்தில் விடுதலைப்புலிகள் இயக்கத்தின் முன்னணி உறுப்பினராக செயல்பட்டு வந்தார். புலிகள் இயக்கத்தில் “நிலங்கோ” என பிரபலமாக அறியப்பட்ட இவர் சிறந்த வெடிகுண்டு நிபுணராவார்.
இறுதிகட்ட பேரின் போது மதுவுக்கும், கங்கராயன்குளத்துக்கும் இடைப்பட்ட பகுதியை சேர்ந்த விடுதலைப்புலிகளின் பாதுகாப்புக்கு இவரே பொறுப்பாளராக நியமிக்கப்பட்டிருந்தார். சவுந்திரநாயகத்துடன் இருந்த நிலங்கோ, தற்போது தப்பி சென்றுள்ளார். அவரை நாங்கள் தீவிரமாக தேடி வருகிறோம்.இவ்வாறு அஜித் ரோகனா கூறினார்.
தீவிர முனைப்பு
இலங்கையில் விடுதலைப்புலிகள் இயக்கம் மீண்டும் தோன்றலாம் என பாதுகாப்பு அமைப்புகள் அனைத்தும் எச்சரிக்கப்பட்டுள்ள நிலையில், தப்பியோடிய நிலங்கோவை பிடிப்பதற்கு அந்நாட்டு போலீசாரும், ராணுவத்தினரும் தீவிர முனைப்பு காட்டி வருகின்றனர்.