இலங்கையின் மனித உரிமை மீறல்கள் மீண்டும் இன்று வெளிச்சத்துக்கு..!

sri lanka war crimeஇலங்கை தொடர்பில் மனித உரிமை மீறல் பிரச்சினை சுமார் 3 மாத இடைவெளியின் பின்னர் இன்று ஆரம்பமாகும் 26வது மனித உரிமைகள் ஆணைக்குழு அமர்வில் கவனத்துக்கு எடுக்கப்படுகிறது.

சுவிட்ஸர்லாந்தின் பெலஸ் ஒப் நேசன் கட்டிடத்தில் இந்த அமர்வு ஆரம்பமாகிறது.

இதன்போது இலங்கைக்கு எதிரான சர்வதேச விசாரணைக் குழுவுக்கு இரண்டு சிரேஸ்ட நிபுணர்களை கண்காணிப்பாளர்களாக நியமிக்கும் அறிவிப்பு வெளியாகவுள்ளது.

ஏற்கனவே இதில் ஒருவராக கெமரூச் போர்க்குற்ற தீர்ப்பாயத்தின் போது செயற்பட்ட சர்வதேச நீதிபதி சில்வியா காட்ரைட் நியமிக்கப்படுவது உறுதியாகியுள்ளது.

இரண்டாமவர் ஆசிய அல்லது ஆபிரிக்க நாட்டை சேர்ந்தவராக இருப்பார் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது. அவர் இன்று நியமிக்கப்படவுள்ளார்.

இந்தநிலையில் பதவியில் இருந்து இளைப்பாறவுள்ள மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளையின் கடைசி அமர்வு இதுவாக இருக்கலாம் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது
அவர் எதிர்வரும் ஆகஸ்ட்டில் இளைப்பாறவுள்ளார்.

இந்தநிலையில் அவர் இன்று 47 உறுப்பினர் நாடுகளின் பிரதிநிதிகளுக்கு இலங்கை மனித உரிமை மேம்பாடு தொடர்பிலான பிந்திய தகவல்களை வெளியிடவுள்ளார்.

அத்துடன் இலங்கைக்கு எதிரான சர்வதேச விசாரணைக்கு இலங்கை அரசாங்கம் ஒத்துழைக்க வேண்டும் என்று கோரிக்கையையும் அவர் உத்தியோகபூர்வமாக முன்வைக்கவுள்ளார்.

இந்தநிலையில் இலங்கைக்கான ஐக்கிய நாடுகளின் ஜெனீவா பிரதிநிதி ரவிநாத் ஆரியசிங்க, இலங்கைக்கு எதிரான சர்வதேச விசாரணை தொடர்பில் இலங்கையின் நிலைப்பாட்டை உத்தியோகபூர்வமாக வெளியிடவுள்ளார்.

இது இன்று காலை அல்லது மாலையில் இடம்பெறவுள்ளது.

இதேவேளை இலங்கைக்கு எதிரான போர்க்குற்ற விசாரணைக்காக அமைக்கப்படவுள்ள 15 பேர் கொண்ட குழு இந்த மாத இறுதியில் தமது விசாரணைகளை ஆரம்பிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

TAGS: