முன்னர் யுத்தம் நடைபெற்ற இலங்கையின் வடக்கு – கிழக்குப் பிரதேசங்களில் இப்போது யுத்தம் முடிவடைந்த பின்னரும் கூட 40 வீதமான பெண்கள் பாதுகாப்பின்றியே உள்ளனர்.
இதற்குப் பிரதான காரணம் அப்பிரதேசங்கள் இராணுவ மயப்படுத்தப்பட்டிருப்பதே ஆகும். – இவ்வாறு ஆய்வு அறிக்கைகளின் புள்ளி விவரங்களின் அடிப்படையில் ஐ.நா.தெரிவித்திருக்கின்றது.
யுத்தப் பிரதேசங்களில் பாலியல் வன்முறைகளைத் தடுத்தல் தொடர்பான சர்வதேச மாநாடு லண்டனில் நடைபெறுகின்றமையை ஒட்டி இன்று புதன்கிழமை கொழும்பில் உள்ள பிரிட்டிஷ் தூதரகத்தில் ஒரு செய்தியாளர் மாநாடு நடைபெற்றது.
அதில் கலந்துகொண்டு உரையாற்றிய ஐ.நா.சனத்தொகை நிதியத்தின் இலங்கைக்கான பிரதிநிதி அலயன் ஸிபனெல் இதனைத் தெரிவித்தார். பாலியல் வன்முறைகளைக் கட்டுப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்காத எந்த நாடும் தான் மனித உரிமைகளைப் பேணுவதாகக் கூறமுடியாது என்று இந்த நிகழ்வில் பங்குபற்றிய இலங்கைக்கான பிரிட்டிஷ் தூதுவர் ஜோன் ரன்கின் தெரிவித்தார்.