ஐநா விசாரணைக்குழு விவகாரம்! பாராளுமன்ற தீர்மானம் ஐநா நடவடிக்கையை கட்டுப்படுத்தாது!- ஐதேக

navaneethmpilaiமனித உரிமைகளுக்கான உயர்ஸ்தானிகர் அலுவலகத்தினால் நியமிக்கப்பட்ட விசாரணைக் குழுவுக்கு எதிரான தீர்மானம் பற்றி  எதிர்வரும் 17,18ம் திகதிகளில் நாடாளுமன்றத்தில் விவாதத்தை நடத்த அரசாங்கம் விரும்புகின்றது என அமைச்சர் ஒருவர் நேற்று தெரிவித்தார்.

இந்த வருடம் மார்ச் மாதம் ஐக்கிய நாடுகளின் மனித உரிமை பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் வழிவந்த அதிகாரத்தைப் பயன்படுத்தி ஐ.நா மனித உரிமை உயர்ஸ்தானிகர் அலுவலகம் இந்த விசாரணைக்குழுவை நியமித்தது.

யுத்த காலத்தில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள், பொறுப்பு கூறுதல் தொடர்பான பிரச்சினைகள் பற்றி விசாரணை நடத்த நியமிக்கப்பட்ட குழுவுடன் இலங்கை அரசாங்கம் ஒத்துழைக்க வேண்டுமென ஐ.நா மனித உரிமை ஆணைய உயர்ஸ்தானிகர் நவநீதம்பிள்ளை இலங்கை அரசாங்கத்திடம் கேட்டிருந்தார்.

ஆயினும் அரசாங்கம் இதனை நிராகரித்திருந்தது, அது இந்த விசாரணைக்குழுவுடன் ஒத்துழைக்க மாட்டாதென முறைப்படி அறிவித்தது.

மேலும், அரசாங்கம் ஐ.நா மனித உரிமை ஆணையாளர் அலுவலகத்தின் முன்னெடுப்புக்கு எதிராக வரும் 17ம் திகதி  நாடாளுமன்றில் ஒரு தீர்மானத்தை கொண்டுவரத் திட்டமிட்டுள்ளது.

இது பற்றி நாடாளுமன்ற அலுவல்கள் குழு இன்று வெள்ளிக்கிழமை ஆராயவுள்ளது. ஆளுங்கட்சியில் கொண்டு வரப்படும் இந்த தீர்மானம் பற்றிய நிலைப்பாட்டை எதிர்க்கட்சிகள் இன்னும் அறிவிக்கவில்லை.

அரசாங்கத்தின் இவ்வாறான நாடாளுமன்றத் தீர்மானம் ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் அலுவலகத்தின் நடவடிக்கையை கட்டுப்படுத்தாது என ஐ.தே.க கூறியுள்ளது.

நாட்டின் தேசிய நலனை விட்டுக்கொடுக்கும் எந்த நடவடிக்கையையும் நாம் எதிர்க்கின்றோம். இருப்பினும் ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் அலுவலகம், நாடாளுமன்ற தீர்மானத்தை கவனத்திலெடுக்காது அதன் நடவடிக்கை தொடரும் என எதிரணியின் பிரதான கொறடா ஜோன் அமரதுங்க கூறினார்.

இலங்கை மீதான சர்வதேச நடவடிக்கைகளுக்கு வழிவகுத்து கொடுத்தமைக்கு இந்த அரசாங்கம் வகை கூறவேண்டுமென அமரதுங்க கூறினார்.  அரசாங்கம் சமயோசிதமாக செயற்பட்டிருப்பின் இந்த நிலைமையை தவிர்த்திருக்க முடியும். விவாதத்தின் போது இது பற்றி நாம் கேள்வி எழுப்புவோம் என அவர் கூறினார்.

TAGS: