போர்க்குற்றம் தொடர்பாக சாட்சியமளித்தால்……! அமைச்சர் ரம்புக்வெல எச்சரிக்கை

hekaliya_rampukwela_001போர்க்குற்ற விசாரணைகளில் சாட்சியமளிப்போருக்கு எதிரான நடவடிக்கைகள், அவர்கள் அளிக்கும் சாட்சியங்களைப் பொறுத்து தீவிரமானதாக இருக்குமென அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல  எச்சரித்துள்ளார்.

கொழும்பு ஆங்கில இதழ் ஒன்றுக்கு அவர் அளித்த செவ்வியிலே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில்,

இது ஒரு மோசமான நிலைமை. நாம் உன்னிப்பாகக் கவனிக்கின்றோம். அளிக்கப்படும் சாட்சியங்களுக்கு அமைவாக நடவடிக்கை எடுக்கப்படும்.

உலகின் மிக கொடூரமான பயங்கரவாத இயக்கத்தைத் தோற்கடித்த அரசுக்கு அபகீர்த்தியை ஏற்படுத்திக் கொடுக்க தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும், உள்நாட்டிலும், வெளிநாட்டிலும் இயங்கும் சில தரப்புகளும், புலம்பெயர் தரப்புகளும் முயன்று வருகின்றன என்பது அரசுக்குத் தெரியும் என்றார்.

ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் இலங்கை தொடர்பான தீர்மானம் நம்பகத்தன்மையற்றது. ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் இலங்கை தொடர்பான அறிக்கை குழப்பமானது, பக்கச்சார்பானது என்பதை அந்தக் பேரவைக் கூட்டத்திலேயே வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் சுட்டிக் காட்டியுள்ளார்.

யுத்தக் குற்ற விசாரணை நடக்குமென்றால் அதற்கான ஆதாரங்களையும் சாட்சியங்களையும் தமது கட்சி திரட்டிக் கொடுக்கும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் சுரேஷ் பிரேமச்சந்திரன் சில தினங்களுக்கு முன்னர் குறிப்பிட்டிருந்தார். .

விசாரணைக் குழுவிடம் தங்களது கருத்தை முன்வைப்பது பாதிக்கப்பட்ட தரப்புகளைப் பொறுத்தது என்றும் சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில், அரசாங்கத்தின் ஊடகப்பேச்சாளரான அமைச்சர் கெஹலிய இந்த எச்சரிக்கையினை விடுத்துள்ளார்.

TAGS: