காத்தான்குடியில் பாரிய கண்டனப் பேரணி

kaaththaanku_protastகாத்தான்குடியில் இன்று பாரிய கண்டனப் பேரணி ஒன்று அமைதியான முறையில் நடைபெற்றது.

கடந்த 15-06-2014ம் திகதி அளுத்கம, பேருவளை, தர்கா நகர் மற்றும் களுத்துறை போன்ற முஸ்லிம்கள் செறிந்து வாழும் பிரதேசங்களில் பொது பல சேனா அமைப்பினரால் மேற்கொள்ளப்பட்ட காடைத்தனமான வன்முறைக்கு எதிராக காத்தான்குடி பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளனம் மற்றும் காத்தான்குடி ஜம்மியதுல் உலமா என்பன இணைந்து இன்று செவ்வாய்க்கிழமை காத்தான்குடியில் பாரிய கண்டனப் பேரணியை அமைதியான முறையில் நடாத்தியது.

இக் கண்டனப் பேரணியில் கலந்து கொண்டோர், பாதுகாப்பு அமைச்சரே பொது பல சேனாவை உடனடியாக தடை செய், சிறு பான்மை மக்களை பாதுகாப்பது மஹிந்த சிந்தனையல்லவா?, இனவாதிகளை இனம் கண்டு சட்டத்தின் முன் நிறுத்து, பாதுகாப்பு செயலாளரே சிறு பான்மை மக்களுக்கு பாதுகாப்பு தா?, இனவாதிகளை கைது செய், அரசே மத வன்முறையை உடனடியாக நிறுத்து போன்ற பல்வேறு தமிழ், சிங்கள, ஆங்கில பதாதைகளை ஏந்தியிருந்தனர்.

இதில் காத்தான்குடி நகர சபைத் தவிசாளர் எஸ்.எச்.எம்.அஸ்பர் உட்பட அதன் உறுப்பினர்கள், நல்லாட்சிக்கான மக்கள் இயக்கத்தின் சூறா சபை உறுப்பினர் ஹாரூன், காத்தான்குடி பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளனம் மற்றும் காத்தான்குடி ஜம்மியதுல் உலமா ஆகியவற்றின் பிரதிநிதிகள், முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பரீட், உலமாக்கள், பல ஆயிரக்கணக்கான பொது மக்கள் கலந்து கொண்டு தங்களது கண்டனங்களை தெரிவித்தனர்.

பேரணியின் இறுதியில் பொது பல சேனா அமைப்பை தடை செய்ய கோரி பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளனம், ஜம்மியதுல் உலமா சார்பாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு அனுப்புவதற்கான மஹஜர் காத்தான்குடி பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளனத்தின் தலைவர் எம்.ரீ.எம்.காலித் ஜேபி, காத்தான்குடி ஜம்மியதுல் உலமா தலைவர் மௌலவி எஸ்.எம்.அலியார் (பலாஹி) ஆகியோரினால் காத்தான்குடி பிரதேச செயலாளர் எஸ்.எச்.முஸம்மிலிடம் காத்தான்குடி பிரதேச செயலகம் முன்பாக வைத்து கையளிக்கப்பட்டது. இப் பாரிய கண்டனப் பேரணி காத்தான்குடி முஹைதீன் மெத்தைப் பெரிய ஜூம்மா பள்ளிவாயளிலிருந்து ஆரம்பமாகி காத்தான்குடி பிரதேச செயலகம் வரை சென்றது.

முஸ்லிம்கள் மீதான தாக்குதலை கண்டித்து காத்தான்குடியில் ஹர்த்தால்-கரத்தால் அனுஷ்டிக்கக் கோரி துண்டுப்பிரசுரம்

நாட்டில் முஸ்லிம் மக்கள் மீது நடத்தப்பட்டு வரும் தாக்குதல்களை கண்டித்து காத்தான்குடியில் ஹர்த்தால் ஒன்று ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது.

அண்மைய நாட்களாக அலுத்கம மற்றும் பேருவளை பிரதேசங்களில் முஸ்லிம் மக்கள் மீது தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

தாக்குதல் சம்பவங்களில் குறைந்தபட்சம் மூன்று முஸ்லிம்கள் கொல்லப்பட்டுள்ளனர்.

மேலும் பெரும் எண்ணிக்கையிலானவர்கள் காயமடைந்துள்ளதுடன், சொத்துக்களுக்கு பாரியளவில் சேதம் விளைவிக்கப்பட்டுள்ளது.

முஸ்லிம் மக்களுக்கு எதிரான ஒடுக்குமுறைகளை கண்டித்து காத்தான்குடி பிரதேசத்தில் ஹர்த்தால் அறிவிக்கப்பட்டுள்ளது.

கடைகள் மூடப்பட்டு, கறுப்பு கொடிகள் போடப்பட்டு எதிர்ப்பு வெளியிடப்பட உள்ளதாக அறிவிக்கப்படுகிறது.

கரத்தால் அனுஷ்டிக்கக் கோரி துண்டுப்பிரசுரம்

அளுத்கம தர்ஹா நகர் மற்றும் பேருவளை ஆகிய பிரதேசங்களில் முஸ்லிம்களுக்கு எதிராக இடம்பெற்ற வன்முறைச் சம்பவங்களை கண்டித்து செவ்வாய்கிழமை ஹர்த்தாலை அனுஷ்டிக்குமாறு கோரி வாழைச்சேனை, ஓட்டமாவடி பகுதியில் துண்டுப் பிரசுரம் செவ்வாய்கிழமை வெளியிடப்பட்டுள்ளது.

முஸ்லிம் மீதான அடக்கு முறைகளையும், தாக்குதல்களையும் வன்மையாக கண்டித்தல் என்னும் தலைப்பிடப்பட்ட துண்டுப்பிரசுரமானது காத்தான்குடி சகல பிரதேசங்களையும் உள்ளடக்கிய முஸ்லிம் ஒன்றியம் என பெயர் குறிப்பிடப்பட்டு விநியோகிக்கப்பட்டுள்ளது.

இத்துண்டுப் பிரசுரத்தில் குறிப்பிட்டுள்ளதாவது!

கடந்த 30 வருடங்களுக்கு மேலாக நடந்த கொடூர யுத்தத்தில் பல இழப்புக்களை சந்தித்த எமது முஸ்லிம் சமூகத்திற்கு தற்போது ஆட்சி அதிகாரத்தில் இருக்கும் மகிந்த அரசு யுத்தத்தை
முடித்து இந்நாட்டில் சமாதானத்தை ஏற்படுத்தி யுத்தத்தின் பின் நாட்டில் இன, மத பேதம் எதுவுமில்லை என்று மக்களிடம் வாக்குறுதி அளித்த போது முஸ்லிம்கள் நிம்மதிப் பெருமூச்சு
விட்டனர்.

ஆனால் கடந்த சில வருடங்களாக எமது முஸ்லிம் சமூகத்திற்கு எதிராக சிங்கள தீவிரவாத காடையர்களால் நடாத்தப்படும் அடக்கு முறைகளும், வன்முறைகளையும் பார்க்கும் போது இந்த யுத்தம் ஏன்? முடிவுக்கு வந்தது என எண்ணத் தோணுகின்றது.

இந்த அடக்கு முறை மற்றும் வன்முறைகளின் உச்ச கட்டம் தான் கடந்த 15ம் திகதி ஞாயிற்றுக்கிழமை தொடக்கம் எமது முஸ்லிம் சமூகம் செறிந்து வாழும் பேருவளை, தர்கா டவுன் போன்ற பிரதேசங்களில் சிங்கள காடையர்கள் தங்களது காட்டுமிராண்டித் தாக்குதல்களை அரங்கேற்றி உள்ளதுடன், தற்பொழுது வரைக்கும் அங்கு ஒரு பதற்றமான சூழ்நிலைகாணப்பட்டு வருகின்றது.

சிங்கள காடையர்களின் தாக்குதல் காரணமாக இதுவரைக்கும் 25 வயதிற்குட்பட்ட எமது 07 முஸ்லிம் இளைஞர்கள் வபாத்தாகியுள்ளனர். (இன்னாலில்லாஹிவஇன்னா இலைஹி ராஜிஊன்) சுமார் 10க்கு மேற்பட்ட கடைகள் தீ வைத்து எரித்து நாசமாக்கப்பட்டுள்ளன. காயப்பட்ட எமது சகோதர்களை வைத்தியசாலைக்கு கூட கொண்டு செல்ல முடியாத நிலை அங்கு காணப்படுகின்றது.

இந்த காட்டுமிராண்டி தாக்குதல் சம்பவத்திற்கு முழுக்காரணமும் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்சவின் வழிகாட்டலில் இயங்கும் பொதுபல சேனா என்ற ஒரு தரங்கெட்ட
தீவிரவாத அமைப்பாகும்.

அன்பின் சகோதரர்களே! பாதிக்கப்பட்டிருப்பது எமது சமூகம் லாஹிலாஹ இல்லல்லாஹ{ முஹம்மதர்ரஸ{லுல்லாஹ் என்ற புனித திருக்கலிமாவை மொழிந்து முஸ்லிம்களான வாழ்ந்ததற்காகவே இவர்கள் மீது மிலேச்சத்தனமாக சம்பவம் நடந்தேறியுள்ளது.

தற்பொழுது அவர்களுக்கு நடந்து கொண்டிருக்கும் இத்தாக்குதல் நாளை வேறு ஒரு முஸ்லிம் பிரதேசத்திலும் ஏன்? எமது பிரதேசத்திலும் ஏற்படலாம்.

கேவலம்! இந்த நிமிடம் வரைக்கும் எந்த ஒரு முஸ்லிம் அரசியல் வாதியும் சம்பவம் நடந்த இடத்திற்கு நேரடியாகச் சென்று பாதிக்கப்பட்ட எமது சகோதர்களுக்கு ஒரு ஆறுதல் வார்த்தை கூட கூறவில்லை. காரணம் எமது அரசியல் வாதிகளுக்குத் தெரியும் இது அரசாங்கத்தின் ஆதரவுடன் நடக்கும் ஒரு வன்முறை இதில் நாம் தலையிட்டால் எமது அமைச்சுக் கதிரைகள்
ஆட்டங்கண்டு விடுமென்ற கேவலாமான குறுகிய சிந்தனையாகும்.

அன்பின் சகோதரர்களே! இனிமேலும் இந்த கைகாலாகாத முஸ்லிம் அரசியல் தலைமைகள் என்று சொல்லிக் கொண்டிருபவர்களை நம்பாமல் எமது முழு நம்பிக்கையையும் எல்லாம் வல்ல அல்லாஹ்வின் மீது வைத்தவர்களாக அவனிடமே நாம் அனைவரும் பிராத்திப்போம்.

பாதிக்கப்பட்ட எமது முஸ்லிம் சமூகத்திற்காகவும், இந்த கட்டுமிராண்டித் தாக்குதல்களை நடாத்திய சிங்கள காடையர்களை கண்டித்தும் இந்த சம்பவத்தின் பின்னணியில்
உள்ளவர்களை (இரட்டை நாடகமாடுவதை கைவிட்டு) அரசாங்கம் உடனடியாக கைது செய்ய வலியுறுத்தியும், செவ்வாய்கிழமை எமது வர்த்தக ஸ்தாபனங்களையும். அரச, அரசசார்பற்ற
நிறுவனங்கள் அனைத்தும் மூடி பூரண கர்த்தால் ஒன்றை அணுஷ்டித்து ஒத்துழைப்பு வழங்குமாறு அல்லாஹ்வின் பெயரால் அன்புடன் கேட்டுக் கொள்கின்றோம் என இத்துண்டுப் பிரசுரத்தில் குறிப்பிட்டுள்ளது.

கர்த்தால் அனுஸ்டிக்கப்பட்டது

அளுத்கம தர்ஹா நகர் மற்றும் பேருவளை ஆகிய பிரதேசங்களில் முஸ்லிம்களுக்கு எதிராக இடம்பெற்ற வன்முறைச் சம்பவங்களை கண்டித்து வாழைச்சேனை, ஓட்டமாவடி, ஏறாவூர் பகுதியில் இன்று செவ்வாய்கிழமை ஹர்த்தால் அனுஷ்டிக்கப்பட்டது.

நாட்டில் வாழும் முஸ்லிம்கள் மீது மேற்கொள்ளப்பட்டு வரும் அவஸ்தைக்குள்ளாக்கும் தொடர்ச்சியான செயற்பாடுகளைக் கண்டித்து நாடளாவிய ரீதியில் அமைதியான சாத்வீக கடையடைப்புப் போராட்டத்திற்கு அழைப்பு விடுத்ததின் பேரில் இந்த ஹர்த்தால் இடம்பெறுகின்றது.

இதேவேளை ஹர்த்தால் கடையடைப்பை இன்று மேற்கொள்ள வேண்டாம் என திங்கட்கிழமை இரவு முதல் அடிக்கடி பள்ளிவாசல் ஒலிபெருக்கிகளில் பொலிஸாரினது அறிவித்தல் கூறப்பட்டிருந்த போதும் அவையெல்லாம் புறக்கணிக்கப்பட்டு முழுமையான ஹர்த்தால் இடம்பெறுவது இங்கு குறிப்பிடத்தக்கது.

இது அடக்கு முறைக்குள்ளாகும் ஒரு ஒட்டுமொத்த சமூகத்தின் சாத்வீக, உணர்வு ரீதியான வெளிப்பாடு என்று கடையடைப்பில் ஈடுபட்டுள்ள தன்னை அடையாளம் காட்டிக் கொள்ள விரும்பாத ஒரு வர்த்தக சமூகப் பிரதிநிதி கூறினார். இதேவேளை பாடசாலைகள் வழமைபோன்று இயங்குகின்றன.

TAGS: