இடம்பெயர்ந்த மக்களை அவர்களது சொந்த இடங்களில் மீளக்குடியேற்றுவதற்காக யாழ்.மாவட்டமே ஸ்தம்பிக்கதக்க வகையிலே நாங்கள் போராட்டம் நடத்தி வெள்ளை கொடியுடன் எங்கள் காணிகளுக்கு போக வேண்டிய நாள் விரைவில் வரும்’ என வலி.வடக்கு மீள்குடியேற்றச் சங்கத்தின் தலைவர் கே.குணபாலன் தெரிவித்தார்.
வளலாய் பகுதியில் இருந்து இடம்பெயர்ந்த மக்களை மீளக்குடியேற்ற கோரியும் வலிகாமம் வடக்கு மக்களை வளலாய் பகுதியில் குடியமர்த்த எடுக்கப்படும் நடவடிக்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்தும் நேற்று திங்கட்கிழமை (கோப்பாய் பிரதேச செயலகம் முன்பாக நடைபெற்ற கண்டன போராட்டத்தில் கலந்துகொண்டு ஊடகவியலாளர்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அவர்,
‘வளலாயிலுள்ள காணிகளை உரிமையாளர்களிடம் கையளித்துவிட்டு எஞ்சியிருக்கும் ஏனைய காணிகளில் முகாம்களிலுள்ள மக்களை குடியமர்த்தலாம். அதனை விடுத்து வளலாய் மக்களின் காணிகளில் முகாம்களில் உள்ள வலி.வடக்கு மக்களை குடியமர்த்த வேண்டாம்.
38 முகாம்களிலுள்ள மக்கள் அனைவரும் தமது சொந்த காணிகளுக்கு செல்லவே விரும்புகின்றனர். காணி உரியவனை வெளியேற்றிவிட்டு அவர்கள் காணிகளிலே முகாம் மக்களை குடியேற்றுவது எந்த வகையிலும் நியாயம் இல்லை.
இன்று நாம் எம் காணிகளை விட்டு வெளியேறி 25 வருடங்கள் ஆகிவிட்டன. காங்கேசன்துறையில் இருந்து பலாலி முடிவு வரைக்கும் ஒரு வீடும் இல்லை, பள்ளிக்கூடம் இல்லை. அவற்றை எல்லாம் இடித்தழித்து விட்டு உல்லாச விடுதிகளை கட்டியுள்ளார்கள்.
இன்னமும் 10 ஆயிரம் குடும்பங்கள் மீளக்குடியேற வேண்டியுள்ளது. அவர்களின் 12 சதுர கிலோமீற்றர் காணியை இராணுவம் கையகப்படுத்தி வைத்துள்ளது. ஆட்கள் இல்லாத காணிகளில் நோட்டீஸ் ஓட்டிவிட்டு எங்கள் காணிகளை எடுத்துவிட்டதாக கூறுகின்றனர்.
எங்கேயோ இருந்து வந்த மக்களுக்கு நாவற்குழியிலே காணி கொடுக்கிறார்கள். எங்களுடைய மக்களின் உறுதிகளை பறிக்கின்றார்கள். இது எந்தவகையில் நியாயமான செயல்.
இந்த மக்களிடம் வாழ்வதற்கு எதுவுமே இல்லை. அவர்கள் உணவு இல்லாமல் கஷ;டப்படுகின்றார்கள்.
இடம்பெயர்ந்த மக்கள் அனைவரும் அவரவர் இடங்களிலே குடியேற்றப்பட வேண்டும்.
எங்கள் நிலங்களை விட்டு கொடுக்க முடியாது. எங்கள் நிலங்களை மீட்க நாங்கள் தொடர்ந்து போராடுவோம்’ என அவர் மேலும் தெரிவித்தார்.