அளுத்கம பகுதியில் இன்று காலை முதல் ஊரடங்கு தளர்த்தப்பட்டுள்ள போதிலும் பொதுமக்கள் வீடுகளுக்குச் செல்ல அச்சப்படுகின்றனர்.
தென்னிலங்கை அளுத்கமையில் கடந்த ஞாயிறு தொடக்கம் முஸ்லிம்களுக்கு எதிரான செயற்பாடுகள் ஆரம்பிக்கப்பட்டு வன்முறைகள் கட்டவிழ்த்துவிடப்பட்டது.
இதன் எதிரொலியாக எட்டு முஸ்லிம்கள் கொல்லப்பட்டு சுமார் நாற்பது வர்த்தக நிலையங்கள் முற்றாக அழிக்கப்பட்டன. நூற்றுக்கும் மேற்பட்ட வர்த்தக நிலையங்கள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளன. இரண்டு பள்ளிவாசல்கள் தாக்கியழிக்கப்பட்டு, மேலும் மூன்று பள்ளிவாசல்கள் சேதப்படுத்தப்பட்டுள்ளன.
இந்நிலையில் பொலிசாரும் முஸ்லிம்களுக்கெதிரான வன்முறையை கட்டவிழ்த்துவிட்ட பொதுபல சேனாவினருக்கு ஆதரவான நிலைப்பாட்டில் நடந்து கொண்டனர்.
இதனால் வன்முறை தீவிரமாகப் பரவியதை அடுத்து விசேட அதிரடிப்படையினர் வரவழைக்கப்பட்டனர். ஊரடங்கு உத்தரவும் பிறப்பிக்கப்பட்டது.
மேலும் புலம்பெயர் தமிழ் ஊடகங்கள் மற்றும் சர்வதேச ஊடகங்களின் செய்தியறிக்கைகள் காரணமாக இலங்கை அரசாங்கம் கடும் நெருக்கடியை எதிர்கொண்டது. இதன் காரணமாக கடும் பிரயத்தனத்தின் மத்தியில் தற்போது அளுத்கமை வன்முறைகள் தணிக்கப்பட்டு, பாதுகாவல் பலப்படுத்தப்பட்டுள்ளது.
இதன் எதிரொலியாக இன்று காலை எட்டு மணி முதல் அளுத்கமை பிரதேசத்தில் அமுலில் இருந்த ஊரடங்கு உத்தரவு தளர்த்தப்பட்டது. எனினும் வன்முறை காரணமாக வீடுகளை இழந்தவர்களும், வன்முறைக்கு அஞ்சி பள்ளிவாசல்களில் தஞ்சம் அடைந்தவர்களுமாக சுமார் ஆறாயிரம் மக்கள் இன்னும் அகதிகளாக இருப்பதாக தெரிய வந்துள்ளது.
6 ஆயிரத்திற்கும் மேற்பட்ட முஸ்லிம்கள் பள்ளிவாசல்,பாடசாலைகளில் தஞ்சம்
அளுத்கம மற்றும் பேருவளை பிரதேசங்களில் முஸ்லிம் மக்களை இலக்கு வைத்து நடத்தப்படும் தாக்குதல்கள் காரணமாக 6 ஆயிரத்திற்கும் மேற்பட்ட முஸ்லிம்கள் பள்ளி வாசல்கள் மற்றும் பாடசாலைகளில் தஞ்சமடைந்துள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
முஸ்லிம் மக்கள் கடந்த இரண்டு தினங்களாக பாடசாலை மற்றும் பள்ளிவாசல்களில் தஞ்சமடைந்திருந்ததுடன் அவர்களுக்கு பாதுகாப்பு வழங்க பொலிஸார் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.
இவ்வாறு தஞ்சமடைந்திருந்த முஸ்லிம் மக்களுக்கான உணவுகள் வெளிப் பிரதேசங்களில் இருந்து வரவழைத்து விநியோகிக்கப்பட்டன.
எவ்வாறாயினும் அளுத்கம நகரில் கடந்த இரண்டு தினங்களாக அமுல்படுத்தப்பட்டிருந்த பொலிஸ் ஊரடங்குச் சட்டம் இன்று காலை 8 மணிக்கு நீக்கப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரின் அலுவலகம் தெரிவித்தது.
நீதியற்ற செயல். கல்வியா, செல்வமா,வீரமா? செல்வாக்கும், வீரமும் பலமும் இருந்தால் இல்லாதவர்களை இப்படியா நடத்துவது? படைத்தவரே வேதனைபடுவார். சிந்திப்போம் செயல்படுவோம். இறைவன் படைத்த சக மனிதரை நாம் மதித்து செயல்பட்டால், அதுவே இறைவனுக்கு எற்புடைதாகும். இறைவனை நாம் மதித்து போற்ற வேண்டுமென்றால், அவர் படைத்த சக மனிதரையும் நாம் போற்றி வழிபட வேண்டும் .