அளுத்கம பேருவளையில் இடம்பெற்ற கலவரத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து முஸ்லிம் மக்கள் தங்களது சமூகத்திற்கு சார்பாக தங்களது உணர்வுகளை வெளிப்படுத்தும் முகமாக ஹர்த்தால் அனுஷ்டிப்பது நியாயமானது.
ஆனால் அந்த சம்பவத்தை திசை திருப்புவதற்காக அரசாங்கம் மற்றும் பொதுபலசேனா ஆகியவற்றிக்கு சார்பாக இருக்கும் சிலர் தமிழ் – முஸ்லிம் மக்களின் ஒற்றுமையை குலைப்பதற்கு திரை மறைவில் சதிவேலைகளை செய்து கொண்டிருக்கிறார்கள் என்பதை அறியக்கூடியதாகவுள்ளது என தமிழ்தேசியக் கூட்டமைப்பின மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ப.அரியநேத்திரன் தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்
நேற்று வியாழக்கிழமை மேற்கொள்ளப்பட்ட ஹர்த்தாலை அடுத்து வாழைச்சேனை மற்றும் காரைதீவு பிரதேச தமிழ் கிராமங்களில் புகுந்து தமிழ் மக்கள் மீதும் அவர்களது வாகனங்கள் மீதும் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இச்சம்பவங்களால் எமது மக்கள் கவலையடைந்துள்ளனர். முஸ்லிம் மக்கள் மீது தமிழ் மக்கள் கொண்டிருந்த புரிந்துணர்வின் அடிப்படையிலேயே மேலும் ஒரு தமிழ் முஸ்லிம் குழப்ப நிலை இங்கு உருவாகாமல் தவிர்க்கப்பட்டது.
இவ்வாறான செயற்பாட்டை மேற்கொள்வதன் மூலம் தமிழ் – முஸ்லிம் மக்களிடையே இனக்குரோதத்தை ஏற்படுத்தி அதன் மூலம் அளுத்தகம, பேருவளை சம்பவத்தை மூடி மறைப்பதற்கு முயல்கிறார்கள்.
அப்படிச் செய்வது அரசுக்கு வாய்ப்பாக அமையும். இதேபோன்ற பல சம்பவங்களை 1990ஆம் ஆண்டு காலப் பகுதிகளில் மேற்படி பிரதேசங்களில் சில சக்திகள் நடத்தி வெற்றியும் கண்டுள்ளன என்பதை மறக்கமுடியாது. எனவே ஹர்த்தால் அனுஷ்டிக்கும் முஸ்லிம் சமூகம் இவ்வாறான வேளைகளில் தமிழ் மக்கள் மீது தாக்குதல் நடத்துவதை தவிர்த்துக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன். குறிப்பாக தமிழ் மக்கள் இவ்விடயத்தில் மிகவும் விழிப்பாக இருக்கவேண்டும். இவ்வாறு அவர் விடுத்துள்ள அறிக்கையில் கேட்டுக்கொண்டார்.