தீவிரவாதிகளுடனான போர்: இராக்கிற்கு அமெரிக்க வீரர்களை அனுப்ப மாட்டோம்: ஒபாமா

இராக்கில் தீவிரவாதிகளுக்கு எதிராகப் போரிட அமெரிக்க ராணுவ வீரர்களை அனுப்ப மாட்டோம் என்று அதிபர் ஒபாமா திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

இராக்கிற்கு ராணுவ ரீதியாக உதவுவது குறித்து அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகர்களிடம் வியாழக்கிழமை விவாதித்த பின் செய்தியாளர்களிடம் அதிபர் ஒபாமா கூறியதாவது:

இராக்கிற்கு அமெரிக்க போர் வீரர்களை மீண்டும் அனுப்பும் திட்டம் இல்லை. ஆனால், அந்த பிராந்தியம் மற்றும் அங்கு வாழும் அமெரிக்கர்களின் நலன் கருதி தீவிரவாதிகளை களையெடுக்க அந்நாட்டிற்கு பிற வகையில் உதவுவோம்.

அங்கு 10,000 வீரர்களை அனுப்புவதாலேயே இந்தப் பிரச்னையை எளிதாக தீர்க்கக் கூடிய வலிமையை நாங்கள் பெற்றிருப்பதாக கருதவில்லை. ஏனெனில், அந்நாட்டில் தீவிரவாதத்தை ஒழிக்க ஏற்கெனவே அமெரிக்க வீரர்கள் பலரின் ரத்தம் சிந்தப்பட்டுள்ளது. நிதி விரயமாக்கப்பட்டுள்ளது. இந்தப் பிரச்னையை இராக் அரசே தீர்த்துக்கொள்ள வேண்டும். எனவே, அந்த நாடு ராணுவ உதவியை கேட்டுக்கொண்டாலும் எத்தகைய துல்லியமான தாக்குதல்களை மேற்கொள்வது என்பது குறித்து ஆராயப்பட்டு வருகிறது என்று ஒபாமா கூறினார்.

தீவிரவாதிகள் வசம் ரசாயன ஆயுதத் தொழிற்சாலை: இதனிடையே, அமெரிக்க வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் ஜென் சாகி வெள்ளிக்கிழமை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

இஸ்லாமிக் ஸ்டேட் ஆஃப் இராக் அண்டு லெவன்ட் (இ.எஸ்.இ.எல்) தீவிரவாதிகள் அல் முதான்னா ரசாயன ஆயுதத் தொழிற்சாலையை கைப்பற்றியுள்ளனர். அதை நாங்கள் உன்னிப்பாக கண்காணித்து வருகிறோம்.

ஆனால், தீவிரவாதிகளால் அங்குள்ள ரசாயன ஆயுதங்களை பயன்படுத்த முடியாது. ஏனெனில், அந்த ஆயுதங்கள் மிகப் பழமையானவை மட்டுமின்றி, எளிதில் கையாள முடியாதவை ஆகும்.

மேலும், தீவிரவாதிகளால் ராணுவ நிலைகள் ஏதேனும் கைப்பற்றப்பட்டுள்ளதா என்பதை தீவிரமாக கவனித்து வருகிறோம்.

தீவிரவாதிகள் தற்போது கைப்பற்றியுள்ள ரசாயன ஆயுத வளாகத்தில் உள்ள ஆயுதங்கள் ராணுவ பயன்பாட்டில் இருக்கும் என நம்பவில்லை. அவற்றை பாதுகாப்பாக அப்புறப்படுத்துவது கடினமானதாக இருக்கும் எனக் கருதுகிறோம் என்று ஜென் சாகி தெரிவித்தார்.

இராக்கில் 1980ஆம் ஆண்டுகளில் சதாம் உசேன் அதிபரானதும் பாக்தாதின் வடமேற்கில் இருந்து 72 கி.மீ. தொலைவில் இந்த ரசாயன ஆயுதத் தொழிற்சாலை நிறுவப்பட்டுள்ளது. அதில் கடுகு வாயு மற்றும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய ரசாயன அமிலம் (சரீன்) போன்றவை உற்பத்தி செய்யப்பட்டதாக அமெரிக்க உளவு அமைப்பான சிஐஏ தெரிவித்திருந்தது.

48 பிணைக்கைதிகள் விடுவிப்பு

இ.எஸ்.இ.எல் தீவிரவாதிகளால் பிணைக்கைதிகளாகக் கடத்திச் செல்லப்பட்ட 4 துருக்கியர்கள் உள்பட 48 பேர் வெள்ளிக்கிழமை விடுவிக்கப்பட்டுள்ளனர்.

“”முன்னாள் அதிபர் சதாம் உசேனின் சொந்த ஊரான திக்ரித் நகரின் ஹம்ரீன் மலைப்பகுதியில் கட்டடத் தொழிலாளர்களாக பணியாற்றிய துருக்கி, நேபாளம், வங்கதேசம், துர்க்மெனிஸ்தான் மற்றும் அஜர்பைஜான் ஆகிய நாடுகளைச் சேர்ந்த 48 பேரை கடந்த 4 நாள்களுக்கு முன்பு அந்தத் தீவிரவாதிகள் கடத்திச் சென்றிருந்தனர்.

அவர்களை திக்ரித்துக்கும், கிர்குக்கிற்கும் இடையில் உள்ள ஒரு சோதனைச் சாவடி அருகே தீவிரவாதிகள் வெள்ளிக்கிழமை ஒப்படைத்தனர். அவர்கள் விரைவில் சொந்த நாடுகளுக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளனர்” என்று கிர்குக் மாகாண டிஜிபி தோர்ஹான் அப்துல் ரஹ்மான் தெரிவித்தார்.

ஆனால், தீவிரவாதிகளால் கடந்த வாரம் கடத்திச் செல்லப்பட்ட 40 இந்தியர்கள் மற்றும் 40-க்கும் மேற்பட்ட துருக்கியர்கள் ஆகியோரின் கதி என்னவென்று தெரியவில்லை.